உலகின் மகா ‘குண்டுச்’ சிறுவன், ஒரு சத்திர சிகிச்சையின் பலனாக தனது உடல் எடையில் ஆறில் ஒரு பங்கைக் குறைத்திருக்கிறார்.

ஆர்யா பெர்மானா என்ற பதினொரு வயது நிரம்பிய இந்தச் சிறுவன் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மானிலத்தில் உள்ள கரவங் என்ற பகுதியைச் சேர்ந்தவர். ஐந்து நிமிடம் தொடர்ந்து நடக்கவே முடியாத இந்தச் சிறுவனின் உடல் எடை 190 கிலோகிராம். இவனது வயதையொத்த ஆறு பேரின் மொத்த எடையை இவர் கொண்டிருக்கிறார்.

பிறக்கும்போது சாதாரண உடல் எடை கொண்டிருந்த ஆர்யா, தனது ஆறாவது வயது முதல் அதீத உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வருகிறார்.

தினமும் ஐந்து வேளை சாப்பிடும் இவரால் உணவை உட்கொள்வதை நிறுத்த முடியாது. என்றபோதும், இந்நிலை தொடர்ந்தால் அச்சிறுவனின் உயிருக்கே ஆபத்து என்பதை மருத்துவர்கள் சிறுவனின் பெற்றோருக்கு உணர்த்தினர். கடும் முயற்சிக்குப் பின் தமது மகனை சிகிச்சைக்கு உட்படுத்த அவர்கள் சம்மதித்துள்ளனர்.

இதையடுத்து கடந்த மாதம் அச்சிறுவனுக்கான மொத்த சிகிச்சையின் முதல் பகுதியான ‘கேஸ்ட்ரிக் ஸ்லீவ்’ என்ற ஐந்து மணி நேரம் நீடித்த சத்திர சிகிச்சையை மருத்துவர்கள் செய்து முடித்தனர். உலகிலேயே இந்த சிகிச்சையைச் செய்துகொண்ட மிகக் குறைந்த வயதுடையவரும் ஆர்யாவே! இதனால் கடந்த ஒரு மாத காலத்தில் 31 கிலோ எடை குறைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்குள் தொடர் சிகிச்சைகள் மூலம் ஆர்யாவின் இரைப்பையின் அளவைக் குறைத்து, மொத்தமாகச் சுமார் 150 கிலோ எடையைக் குறைக்கவுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.