வெள்ளம் காரணமாக பாடசாலைகளை மூடுவதாக அரசு எடுத்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வெள்ளப்பெருக்கு அபாயம் நிறைந்த கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் கேகாலை ஆகிய எட்டு மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகள் கடந்த திங்கள் முதல் நாளை வெள்ளிக்கிழமை வரை மூடப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்திருந்தது.

இவற்றுள் சில மாவட்டங்களில் காலைநிலையில் கணிசமான மாற்றம் ஏற்பட்டிருப்பதால் பாடசாலைகள் மீளத் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர் மத்தியில் நிலவி வந்தது. இது குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கல்வியமைச்சர், குறித்த மாவட்டங்களின் பாடசாலைகள் நாளை (2) வரை மூடப்பட்டே இருக்கும் என்றும், இந்த முடிவில் எந்த வித மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் எதிர்வரும் ஒரு சில வாரங்களுக்கு சீருடை அணிந்தே பாடசாலைக்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் தெரிவித்தார்.