27 தீவுகளைக் கொண்ட நாடுகளின் பொருளாதாரம் தொடர்பில் பிரித்தானிய FDI சஞ்சிகை மேற்கொண்ட ஆய்வின் பெறுபேறுக்கமைய இனிவரும் காலங்களில் பலமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய நாடாக இலங்கை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்காலத்தில் தீவு நாடுகளில் முதலீடு செய்வதற்கு பொருத்தமான நாடு இலங்கை என்று சஞ்சிகை சுட்டிக்காட்டுகிறது. 

நாட்டின் முதலீட்டு வாய்ப்புக்களை உலகுக்கு காட்டும் இலங்கை முதலீட்டு மற்றும் வர்த்தக மாநாடு - 2017 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் ஆரம்பமானது. 

அதன்போது இதற்குரிய சான்றிதழ் பிரித்தானியாவின் சஞ்சிகையின் துணை ஆசிரியர் ஜேகெப் டெற்றேனியினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த சான்றிதழ் ஜனாதிபதியால் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இலங்கை முதலீட்டு மற்றும் வர்த்தக மாநாடு 23 நாடுகளைச் சேர்ந்த 130 இற்கும் அதிகமானோரின் பங்குபற்றுதலுடன் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.

ஏற்றுமதி, உற்பத்தி, விவசாயம், உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, ஏற்றுமதி சேவைகள், உள்நாட்டு அறிவுசார் சேவைகள், மின்சாரம் மற்றும் சக்திவலு, சுற்றுலாத்துறை போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு முதன்மை கவனம் செலுத்தப்படுவதுடன் முன்னணி இலங்கை கம்பனிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அரச அலுவலர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு இந்த மாநாட்டின் போது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும்.

அமைச்சர்களான மங்கள சமரவீர, கலாநிதி சரத் அமுனுகம, பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இலங்கை வர்த்தக சம்மேளன தலைவர் சமந்த ரணதுங்க உள்ளிட்டோர் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர்.