(க.கிஷாந்தன்)

மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் இன்று அட்டன் டன்பார் மைதானத்தில் மலையக தேசிய தைப்பொங்கல் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரத்தின் தலைமையில் இந்த மலையக தேசிய தைப்பொங்கல் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் ஆரம்ப நிகழ்வாக சூரியனுக்கு நன்றி செலுத்துவதற்காக அமைச்சர் திகாம்பரம் சூரியப்பொங்கல் பொங்கி விழாவை ஆரம்பித்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து விசேட அம்சமாக தென்னிந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட மங்கள வாத்திய கலைஞர்களின் மேளக் கச்சேரி இடம்பெற்றதோடு, வரவேற்பு நடனம், பரதநாட்டியம் மற்றும் மலையகப் பாரம்பரிய கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் அர்ஜீன ரணதுங்க, தேசிய ஒருங்கிணைப்பு, உரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வேலுகுமார், அரவிந்தகுமார், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.