மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் அதானி கிறீன் எனர்ஜி நிறுவனத்தின் முதலீட்டில் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டத்தினை இரத்து செய்யப்போவதில்லை. அரசாங்கம் அத்திட்டத்தினை இரத்து செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி வீரகேசரியிடம் தெரிவித்தார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அதானி கிறீன் எனர்ஜி நிறுவனத்திடமிருந்து மின்னலகுகளைக் கொள்வனவு செய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்காக மேற்கொண்ட அமைச்சரவைத் தீர்மானத்தினை இரத்துச் செய்துள்ளதோடு மின்னலகுகளை கொள்வனவு செய்வதற்கான புதிய ஒப்பந்தம் எட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதானி குழுமத்தின் அதானி கிறீன் எனர்ஜி நிறுவனம் இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித்துறையில் ஒருபில்லியன் டொலர்களை முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ள நிலையில் மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின்சாரத் திட்டத்தினை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைளை எடுத்திருந்தது.
இந்நிலையில் குறித்த திட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அதானி கிறீன் எனர்ஜி நிறுவனம் அதனை மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த திட்டம் சம்பந்தமாக அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியிடத்தில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மற்றும் பூநகரியில் 484 மெஹாவோல்ட் மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட காற்றாலைகளை அமைப்பதற்கு அதானி கிறீன் எனர்ஜி நிறுவனம் முதலீடுகளைச் செய்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் கடந்த அரசாங்கங்களின் காலத்தில் முன்னெடுக்கப்பட்டபோது குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் அத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு பிரதேச மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடத்திலிருந்து எதிர்ப்புக்கள் வெளிப்பட்டுள்ளன.
இந்நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் ஐந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு காற்றாலைத் திட்டத்தினை தடுத்து நிறுத்துமாறும் அவ்வழக்குகளில் கோரப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் காரணமாகவே குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுவதில் தாமதமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில், தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னரான சூழலில் குறித்த காற்றாலைத் திட்டத்தினை முழுமையாக மீளாய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமன்றி, குறித்த காற்றாலைத் திட்டத்தினால் உற்பத்தி செய்யப்படும் மின்சார அலகுகளை கொள்வனவு செய்வது குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கைளை எடுத்திருந்தது.
இதற்காக கடந்த ஆண்டு மே மாதம் அமைச்சரவையில் மின்னலகுகளை கொள்வனவு செய்வதற்கான உடன்பாடொன்றை அதானி கிறீன் எனர்ஜி நிறுவனத்துடன் மேற்கொள்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த அரசாங்கம் 20 வருடங்களுக்கு அதானி நிறுவனத்திடம் இருந்து ஒரு கிலோவாற் அலகிற்கு 8.26 சத டொலர்கள் எனும் பெறுமதியில் காற்றாலை மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான, மின்சக்தி கொள்வனவு உடன்படிக்கையை முன்னெடுப்பதற்கே அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.
எனினும், குறித்த பெறுமானம் தொடர்பில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுவதன் காரணமாக அதனை மீளாய்வு செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் உள்ளூர் தரப்பினர் 4.88 ரூபாவை முன்மெழிந்துள்ளனர். அவர்களின் முன்மொழிவும் பரிந்துரைகளும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அதேபோன்று 8.26 சத டொலர்கள் எனும் பெறுமதிக்கான முறையான காரணங்களும் முன்வைக்கப்படவில்லை.
அக்குழுவின் மீளாய்வு நடவடிக்கைகளும் பரிந்துரைகளும் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு ஏதுவாக அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மின்னலகுக்கான புதிய கொள்முதல் விலை மீண்டும் குறிக்கப்பட்டு உடன்பாடு மீளவும் மேற்கொள்வதற்கே எதிர்பார்க்கின்றோம்.
அத்துடன் அதானி காற்றாலைத் திட்டத்தினை இரத்துச் செய்யும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை. எனினும் சுற்றுச்சூழல் தொடர்பிலான கரிசனைகளை நீதிமன்றம் வெளிப்படுத்துமிடத்து அவற்றையும் பரிசீலிப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM