அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்தியாவின் மூன்றாவது கப்பலும் கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது.

சீரற்ற காலநிலையினால் அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மூன்றாவது கப்பல் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பலில் கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருட்களை இலங்கை அரசாங்கத்தின் சார்பாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. அபேகோன் பொறுப்பேற்று, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்தினவிடம் கையளித்தார்.

கப்பலில் வருகைதந்த மருத்துவர்கள் உள்ளிட்ட நிவாரணக்குழுவினரை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கெண்டனர்.

மருத்துவர்கள், மருந்துப்பொருட்கள், உலர் உணவுகள், சிறிய படகுகள், குடிநீர், கூடாரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிப் பொருட்கள் உள்ளடங்கிய சுமார் 10 தொன் நிவாரண உதவிகள் இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக இந்திய  அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் பொருட்களுடன் வரும் மூன்றாவது கப்பல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

பதிற் கடமைபுரியும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துனேஷ் கன்கந்த, கடற்படைப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பியல் த சில்வா, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பணிப்பாளர் பி.எச்.ஏ. விமலவீர ஆகியோர் இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.