ராமாயணா தி லெஜன்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா - இயங்குபடம் திரைப்பட விமர்சனம்

Published By: Digital Desk 2

25 Jan, 2025 | 04:22 PM
image

தயாரிப்பு : கீக் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்

குரல் கலைஞர்கள் : செந்தில்குமார்- டி. மகேஸ்வரி - பிரவீன் குமார்- தியாகராஜன் -லோகேஷ் -ரவூரி ஹரிதா- மற்றும் பலர்.

இயக்கம் : கொய்ச்சி சகாகி & ராம் மோகன்

மதிப்பீடு : 3.5 / 5

உலகளவில் இயங்குபடம் ( அனிமேஷன்) தொழில்நுட்பத்தில் உருவாகும் திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம். பால்ய வயதினரும் ரசிக்கும் இந்த வகையினதான படைப்புகளை மொழி எல்லைகளைக் கடந்து அனைவரும் ரசித்து வருகிறார்கள். அதிலும் உலகம் முழுவதும் கலாச்சாரத்துடனும், பண்பாட்டுடனும் தொன்மையை விவரிக்கும் புராண இதிகாச கதைகளை இதுபோன்ற இயங்குபடம் தொழில்நுட்பத்தில் படைப்பாக உருவாக்கும் போது கிடைக்கும் வரவேற்பு என்பது அதிகம். 1993 ஆம் ஆண்டில் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் வெளியான 'ராமாயணா தி லெஜன்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா' எனும் இந்தத் திரைப்படம்- தற்போது 4 K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயங்குபட தொழில்நுட்பத்தில் ஜப்பான் நாடு தனித்துவமான சிறப்பினை பெற்று இருக்கிறது. இவர்கள் எடுத்துக் கொண்ட கதைக்கு கலைஞர்கள் மூலம் ஓவியமாக வரைந்து, அதனையும் கணினி மூலம் இயங்கும் நவீன மென்பொருளையும் பயன்படுத்தி இதனை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தோ- ஜப்பானிய கூட்டு தயாரிப்பாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் இயங்கு பட படைப்புகளை ரசிக்கும் ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

இந்து மதத்தின் கடவுளாக போற்றப்படும் மகாவிஷ்ணுவின் ராமர் அவதாரத்தையும், அந்த அவதார நோக்கத்தின் வாழ்வியலையும் இந்த படம் விவரிக்கிறது.

இந்திய மக்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மக்களால் போற்றப்படும் ராமாயணம் எனும் புராண இதிகாசத்தை தழுவி தயாராகி இருக்கும் இப்படத்தின் கதை இயங்குபட தொழில்நுட்பத்தில் நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கதாபாத்திரத்தின் தோற்றம், கதை நிகழ்ந்த நிலவியல் பின்னணி, போர்க்கள காட்சி, கதாபாத்திரத்தின் உரையாடல்களுக்கு இடையேயான உணர்வு மாற்றம், கதாபாத்திர தோற்றத்திற்கான ஆடை வடிவமைப்பு,  வண்ணங்கள், என ஒவ்வொரு விடயத்தையும் நுட்பமாக சர்வதேச தரத்திற்கு செதுக்கியிருக்கிறார்கள். கதையின் ஓட்டத்தையும் , கதை உணர்த்தும் நீதியையும் பிசகாமல் பார்வையாளர்களுக்கு கடத்துகிறார்கள்.

குறிப்பாக இளவரசராக இருக்கும் ராமரின் பிறப்பு, மிதிலையில் சீதையை சந்திக்கும் தருணம், வனவாசம், சுக்ரீவன் நட்பு, ராவணன் சீதையை கடத்துவது, ஜடாயு போரிடுவது, சீதை அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருப்பது, இலங்கைக்கு சேது பாலம் அமைப்பது, போர்க்களத்தில் ராவணனை வீழ்த்துவது, சீதையை மீட்பது,  விபீடணனுக்கு இலங்கையை ஆளும் உரிமையை வழங்குவது என ஒவ்வொரு சம்பவங்களும் நேர்த்தியாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு பின்னணி குரல் கொடுக்கும் கலைஞர்கள் கதையை உணர்வுபூர்வமாக விவரித்திருப்பதும் பாராட்டத்தக்கது.

ராமாயணம் தொடர்பாக அண்மையில் வெளியான ஆதி புருஷ் மற்றும் ராம் சேது ஆகிய இரண்டு திரைப்படங்களும் செய்த தவற்றை.. இந்த இயங்குபட திரைப்படத்தில் இல்லாததால் பார்வையாளர்களால் எந்தவித குழப்பமும் இன்றி ரசிக்க முடிகிறது.

பாடல்கள், பின்னணி இசை இவை இரண்டும் ரசிகர்களுக்கு அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது.

நன்மைக்கும், தீமைக்கும் இடையேயான மோதலை விவரிக்கும் இந்த இயங்குபட  திரைப்படத்தை குடும்பத்தினர் அனைவரும் பட மாளிகைக்குச் சென்று கண்டு ரசிக்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right