பாட்டல் ராதா - திரைப்பட விமர்சனம்

Published By: Digital Desk 2

24 Jan, 2025 | 04:19 PM
image

தயாரிப்பு : நீலம் புரொடக்ஷன்ஸ் & பலூன் பிக்சர்ஸ்

நடிகர்கள் : குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன் மற்றும் பலர்.

இயக்கம் : தினகரன் சிவலிங்கம்

மதிப்பீடு : 2.5 / 5

பா. ரஞ்சித்தின் தயாரிப்பு, குரு சோமசுந்தரத்தின் தனித்துவமான நடிப்பு, பாடல்கள் வெளியாகி கவனம் குவிப்பு, என சில விடயங்களால் அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் உருவான பாட்டல் ராதா (போத்தல் ராதா) திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதனை படக் குழுவினர் பூர்த்தி செய்தார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

கட்டிடத்தின் உள்ளரங்கு அலங்கார பணியினை செய்து வருபவர் பாட்டல் ராதா எனும் ராதா மணி, குறிப்பாக டைல்ஸ் ஒட்டுவதில் நிபுணத்துவம் பெற்றவரான இவர், மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகிறார். 

இதனால் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் விவரிக்க முடியாத துயரத்திற்கு ஆளாகிறார்கள். இந்நிலையில் மது அருந்தும் பழக்கத்திலிருந்து மீட்கும் மறுவாழ்வு மையத்தில், அவர் குடி நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக பொய் சொல்லி சேர்க்கப்படுகிறார். மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற விரும்பாத பாட்டல் ராதா அங்கிருந்து தப்பிக்கிறார். மீண்டும் குடிக்கிறார். இதனால் இவரை திருத்த இயலாது என நினைத்து மனைவியும், பிள்ளைகளும் தந்தை விட்டு பிரிகிறார்கள். பாட்டல் ராதா அதன் பிறகு குடியை மறந்து மீண்டும் குடும்பத்துடன் இணைந்தாரா ?இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.

படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை திரையில் தோன்றும் காட்சிகள் பார்வையாளர்களின் யூகத்தின் படி பயணிக்கிறது. அதனால் பார்வையாளர்கள் இடத்தில் சோர்வு ஏற்படுகிறது. இருப்பினும் இயக்குநர் மது அருந்துபவர்களின் நடவடிக்கையையும் , அதனால் பாதிக்கப்படும் குடும்ப உறுப்பினர்களின் உளவியலையும் நேர்த்தியாக விவரித்திருக்கிறார்.

படத்தின் முதல் பாதியில் மறுவாழ்வு மையத்தில் குடிக்கு அடிமையானவர்கள் சிகிச்சை பெறுவதும், அவர்களை மது அருந்தும் பழக்கத்திலிருந்து மீட்பதற்காக மேற்கொள்ளும் விழிப்புணர்வு சிகிச்சையும், நகைச்சுவையாக அமையாமல் யதார்த்தமாகவும், இயல்பாகவும் இருப்பதால் ரசிக்க முடியவில்லை. அத்துடன் மது பழக்கத்திற்கான மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேரும் குடி நோயாளிகள் மீது வன்முறை பிரயோகிக்கப்படும் என காட்சிகள் அமைத்திருப்பது மது அருந்துபவர்களுக்கு மறுவாழ்வு மையம் குறித்த எதிர்மறையான எண்ணமே ஏற்படும். 

மது அருந்தும் பழக்கத்தால் ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இடையேயான உறவில் 'அன்பு பகிர்தல்' என்ற அடிப்படை உணர்வு  மறைந்துவிடும் என காட்டி இருப்பது அருமை.

மது அருந்தும் பழக்கத்தால் குடும்பத்தின் ஏற்படும் விரிசலை பற்றி பேசும் திரைக்கதையில் அதற்கு முரணான கதாபாத்திரம் வலிமையாக அமைக்கப்படாததால் சோர்வும், அயர்ச்சியும் ஏற்படுகிறது.

பாட்டல் ராதா எனும் ராதா மணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் குரு சோமசுந்தரம் குடி நோயாளியாகவே நடித்து, ரசிகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். இவரின் மனைவி அஞ்சலை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை சஞ்சனா நடராஜன் கிடைத்த வாய்ப்பை திறமையாக பயன்படுத்தி தன் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். மறுவாழ்வு மையம் நடத்தும் அசோகன் எனும் கதாபாத்திரத்தில் ஜான் விஜய் வழக்கமான பாணியைத் தவிர்த்து  சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார். மாறன் சில இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறார்.

ஒளிப்பதிவும், பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை படமாளிகையில் இருக்கையில் அமர்ந்து படத்தை தொடர்ந்து பார்ப்பதற்கு ஆறுதல் அளிக்கிறது.

பாட்டல் ராதா (போத்தல் ராதா) -  கிக் இல்லாத சாதா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right