ஈராக் தலைநகர் பாக்தாத் நகரின் பிரதான பகுதியிலுள்ள பிரபல ஐஸ் கிரீம் விற்பனை நிலையத்தில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுத் தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 13 பேர் பலியாகினர்.

புனித நோன்புக் காலம் ஆரம்பமான நிலையில், நேற்றிரவு பெருமளவு பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரும் குறித்த ஐஸ் கிரீம் நிலையத்துக்கு வெளியே ஐஸ் கிரீமைச் சுவைத்துக்கொண்டிருந்தனர். நோன்புக் காலத்தில் புதிய ஆடைகளை வாங்குவதற்காகவும் அப்பகுதி வழியாகப் பலரும் போய் வந்துகொண்டிருந்தனர்.

அப்போது, ஐஸ் கிரீம் நிலையத்துக்கு மிகச் சமீபமாக இருந்த வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதையடுத்துப் பெரும் தீப்பிழம்பு வானில் எழுந்தது.

பிரதான வீதிக்கு அருகாமையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால், அப்பகுதி வழியாகச் சென்றுகொண்டிருந்த வாகனங்களும் உடனடியாக திருப்பிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றன.

என்றபோதும், சம்பவ இடத்தில் இருந்த மக்களில் பதின்மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இருபத்து நான்கு பேர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.

நோன்புக் காலங்களில் ஈராக்கில் பல குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டுவருவது தொடர்கதையாகியுள்ளது.