'ஓஃபீஸ்' இணைய தொடரின் அறிமுக பாடல் வெளியீடு

Published By: Digital Desk 2

23 Jan, 2025 | 03:35 PM
image

முன்னணி டிஜிட்டல் தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்தில் விரைவில் வெளியாகும் 'ஓஃபிஸ்' எனும் இணைய தொடரின் அறிமுக பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் கபீஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஓஃபீஸ்' எனும் நகைச்சுவை இணைய தொடரில் குரு லக்ஷ்மண், சபரீஷ், ஸ்மேகா , கீர்த்தி வேல், கெமி, பரந்தாமன், தமிழ்வாணி, சரித்திரன் , சிவா , அரவிந்த், 'பிராங் ஸ்டார் ' ராகுல், டி. எஸ். ஆர் உள்ளிட்ட பல முன்னணி சின்னத்திரை மற்றும் டிஜிட்டல் திரையுலக நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். 

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்திற்காக இந்த நகைச்சுவை இணைய தொடரை தயாரிப்பாளர் ஜெகன் நாத் தயாரித்திருக்கிறார். இந்த இணைய தொடரை அறிமுகப்படுத்தும் வகையிலும், பிரபலப்படுத்தும் நோக்கத்திலும் பிரத்யேக பாடல் ஒன்றை இணைய தொடர் குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

'ஆபீசு ஆபீசு ஒன்னு ரெண்டு மூணு எதுக்கு இந்த சீனு..' எனத் தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியர் பிளேடு சங்கர் எழுத , பின்னணி பாடகர் முகேஷ் பாடியிருக்கிறார். துள்ளல் இசையுடன் கூடிய இந்தப் பாடலுக்கு ஃபுளூட் நவீன் இசையமைத்திருக்கிறார். 

இந்தப் பாடலும், பாடலுக்கான காணொளியும் டிஜிட்டல் தள ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதால் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது.

இந்த இணைய தொடரை பற்றி இயக்குநர் விவரிக்கையில், '' தமிழகத்தின் கிராமப்புறங்களில் உள்ள அரசாங்க அலுவலகம் ஒன்றினை மையப்படுத்தி இந்த இணையத் தொடரின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு நடைபெறும் நிகழ்வுகள், வித்தியாசமான சம்பவங்கள்,  பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த இணைய தொடர் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right