புதுமுக நடிகர் ஜெக வீர் நடிக்கும் ' 2K லவ் ஸ்டோரி ' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 2

23 Jan, 2025 | 03:03 PM
image

புதுமுக நடிகர் ஜெகவீர் மென்மையான திரைக்கதையில் அழகான இளம் கதாநாயகனாக அறிமுகமாகும் ' 2K லவ் ஸ்டோரி ' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் படக் குழுவினருடன் இயக்குநர் எழில் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார்.

முன்னணி நட்சத்திர இயக்குநரும், நடிகருமான சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் '2 K லவ் ஸ்டோரி ' எனும் திரைப்படத்தில் ஜெக வீர் ,மீனாட்சி கோவிந்தராஜன், பால சரவணன், அந்தோணி பாக்கியராஜ், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், வினோதினி வைத்தியநாதன், லத்திகா பாலமுருகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

வி. எஸ். ஆனந்த கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை சிட்டி லைட் பிக்சர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்பிரமணியன் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஜி. தனஞ்ஜெயன் வழங்குகிறார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான ஜெகவீர் சுயாதீன இசை ஆல்பத்தை உருவாக்கும் குழுவின் தலைவராகவும், அந்த குழுவில் பங்கு பற்றி இருக்கும் பெண்ணாக நாயகியும், இந்த குழு உறுப்பினர்களுக்கு இடையேயான நட்பு, காதல் ஆகிய விடயங்கள் தொடர்பான காட்சிகள் இடம் பிடித்திருப்பதால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அறிமுக நாயகன் ஜெக வீர் படத்தைப் பற்றி பேசுகையில், '' வாய்ப்பு வழங்கி நாயகனாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. படப்பிடிப்பு தொடங்கிய முதல் வாரத்தில் தடுமாற்றமாகவும், பதற்றமாகவும் தான் இருந்தது. 

அதனை எம்முடன் நடித்த சக கலைஞர்கள் அனைவரும் எளிதாக்கி, இயல்பாக்கினர்.  எம்மைப் போன்ற சுமாரான தோற்றமுள்ள இளைஞரை திரையில் அழகான இளைஞராக காட்சி படுத்திய ஒளிப்பதிவாளருக்கு நன்றி. காட்சி படமாக்கத்தின் போது நான் செய்த சிறு தவறுகளையும் மறைத்து நல்லனவற்றை மட்டும் திரையில் கொண்டு வந்த படத் தொகுப்பாளருக்கும் இந்த தருணத்தில் நன்றி. இந்தத் திரைப்படம் முன்னோட்டத்தை போல் சுருக்கமாகவும், இளமையாகவும், இனிமையாகவும், தென்றலாகவும் இருக்கும். அனைவரும் காதலர் தினத்தன்று பட மாளிகைக்கு வருகை தந்து இப்படத்தை கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right