அபிலாஷனி லெட்சுமன்
(படப்பிடிப்பு – எஸ்.எம்.சுரேந்திரன்)
நாட்டிய கலா மந்திர் நடன கலாசாலையின் ஸ்தாபக இயக்குநர் “கலாசூரி” “ஆச்சார்ய கலா சாகர” “விஸ்வரங்காபிமானய” ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரனின் 149ஆவது அரங்கம் நிறைந்த அரங்கேற்றம் சண்முகராஜா - சுகந்தினி தம்பதியினரின் புதல்வியான சஹானா சண்முகராஜாவினால் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திரையுலக நடிகையும் இலண்டன் - றோயல் அகடமி நடன ஆசிரியையுமான “எவர் கிரீன் ஸ்டார் ” லைலா பிரதம விருந்தினராகவும் மதராஸ் பல்கலைக்கழகத்தின் பகுதிநேர நடன பேராசிரியர் முனைவர். ராதிகா வைரவேலவன், எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) பிரைவேட் லிமிடெட்டின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.குமார் நடேசன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் “விஜய் டிவி” ஈரோடு மகேஸ் சிறப்பு விருந்தினராகவும்
கலந்துகொண்டு மேலும் இந்நிகழ்வை மெருகூட்டியமை குறிப்பிடத்தக்கது.
ஆடற்கலையின் நாயகனான நடராஜ பெருமானின் திருப்பாதங்களில் சதங்கைகளை வைத்து பூஜை நடாத்தி அனைவரது நல்லாசிகளோடும் பரதநாட்டிய அரங்கேற்றத்துக்கான ஆரம்ப நிகழ்வை நிகழ்த்தி வைத்தார், பிரம்ம ஸ்ரீ நாகராஜ குருக்கள்.
ஆடல் அரங்குக்கு கொழும்பு நாட்டிய கலா மந்திர் நடன கலாசாலையின் ஸ்தாபக இயக்குநர் வாசுகி ஜெகதீஸ்வரன் நட்டுவாங்கம் நிகழ்த்தியதோடு, குரலிசைக் கலைஞராக “இசை முதுமணி” கலாநிதி அருணந்தி ஆருரன், மிருதங்கம் “நந்தி வித்தகன்” ஸ்ரீ.மகேந்திரன் லோகேந்திரன் , வயலின் “நுண்கலைமணி” ஸ்ரீ.எஸ்.நிலோஜன், தாள தரங்கம் “விசாரத” ஸ்ரீ ரத்னம் ரத்னதுரை, புல்லாங்குழல் “விசாரத” ஸ்ரீ பிரியந்த தசநாயக்க மற்றும் வீணை “வீணை இசை கலைமணி” என்.எஸ் வகீஷன் ஆகியோர் அணிசேர் கலைஞர்களாக இசை பங்களிப்பு வழங்கியிருந்தனர்.
பரதநாட்டியக் கலை என்பது தொன்று தொட்டு எமது சமுதாயத்தின் பண்பாடு, கலை, கலாச்சாரங்கள் என்பவற்றை பிரதிபலிக்கின்ற ஒரு கலை வடிவமாக வளர்ந்து வந்துள்ளது. நாட்டிய கலா மந்திர் தயாரிப்புக்களாக ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரனின் நடன அமைப்பு மற்றும் நெறியாள்கையில் தொடர்ச்சியாக பல எண்ணிக்கையிலான அரங்கேற்ற நிகழ்வுகள், நாட்டிய சாஸ்த்திரிய நடன நிகழ்வுகள் என்பன நிகழ்த்தப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
வாழ் நாள் சாதனையாளர் விருதினை பெற்ற பெருமைக்குரிய ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரனின் 149ஆவது அரங்கேற்றத்தினை நிகழ்த்தும் மாணவி என்ற பெருமைக்குரியவர் சஹானா சண்முகராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில் புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதீஸ்வரம் , தேவாரம், வர்ணம் ஆகிய நடன உருப்படிகளை அழகிய அசைவுகளோடும் கதாபாத்திரங்களை தனித்தனியாக சித்திரித்து ஆடும் அரங்கேற்றத்தை அரங்கிலே காணக்கூடியதாக இருந்தது.
அத்தோடு, ஆங்கிக அபிநயங்களுடன் பாவங்களை முன்னிறுத்தி பார்வையாளர்களையும் தன்வசப்படுத்தும் வகையில் ஆடப்பெற்ற ஆடல் அம்சமான திருப்பாவையான “மார்கழி திங்கள்...” எனத் தொடங்கும் பாடலானது வைஸ்ணவ சம்பிரதாய மேன்மையினை வெளிப்படுத்தும் வகையில் பெருமாள் மீது ஆண்டாள் கொண்ட அன்பின் வெளிப்பாடாக இந்த ஆடல் அரங்கேற்றம் காணப்பட்டது.
பக்தி சுவை நிரம்பப்பெற்ற “கபாளினி..” கீர்த்தனம் இறைவனது புகழை போற்றும் வண்ணம் அழகிய வாத்திய இசை பங்களிப்போடு அரங்கிலே ஆடப்பெற்றமைக் குறிப்பிடத்தக்கது.
புராண இதிகாசமான கம்பராமாயணத்தின் சுந்தர காண்டத்தில் ஹனுமன் சீதையை கண்டதை ஸ்ரீ ராமனுக்கு எடுத்துரைப்பதாக கீர்த்தனம் “கண்டேன் கண்டேன் சீதையை..” என்ற பாடல் அமையப்பெற்றது.
இப்பாடலுக்கு சஹானாவினால் நிகழ்த்தப்பட்ட ஆற்றுகையானது அனைவரையும் பிரமிக்க வைக்கும் வண்ணம் கம்பராமாயண காட்சிகளை அரங்கிலே தோற்றுவித்தமைக் சிறப்பாக காணப்பட்டது.
திருப்பாவை “மார்கழி திங்கள்...” என்ற வர்ண உருப்படி பார்வையாளர்களை அதிகம் ஈர்த்த நடனமாக நான் அறிவேன். ரசிகர்களை பிரமிக்கவைத்த, நவரசங்களையும் வெளிப்படுத்திய ஆடலாக காணப்பட்டது.
நவரசங்களையும் முகபாவனையுடன் முன்னிறுத்தி தன் ஆடற்கலையினை அரங்கேற்றியமை குறிப்பிடத்தக்கது.
நடனத்துக்கு தகுந்தாற்போன்ற அவரது ஆடை, அலங்காரங்கள், ஒப்பனை என அனைத்தும் காதல் நிறைந்த ஆடலை மெருகூட்டின. ஆடலோடு அரங்கத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த அலங்காரங்களான ஒலி, ஒளி அமைப்புக்கள் என்பன சஹானாவின் அரங்கேற்றத்திற்கு துணைபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.
பரதநாட்டியத்துக்கே உரிய அனைத்து பண்புகளும் அவரது ஆடலில் தென்பட்டது.
அரங்கில் சஹானாவின் நடனம் எவ்வாறு சிறப்புற காணப்பட்டதோ அவ்வாறே இசைப் பங்களிப்பும் மாய வித்தைகளை தோற்றுவிக்கும் ஒன்றாக மளிர்ந்தது.இசையும் நடனமும் இரண்டற கலந்து பார்வையாளர்களை ஈர்த்தன.
தனது 9 வயதிலிருந்து நாட்டியம் கற்றுக்கொண்டு தனது குருவின் மீது கொண்ட பக்தி, அனைத்துக்கும் மேலாக ஒரு கலைஞன் கலையை எவ்வாறெல்லாம் நேசிப்பான் என்பதை தெளிவுபடுத்தும் ஆடலே இந்த அரங்கேற்றம் என்றால், அது பொய்யில்லை.
அரங்கிலே ஆடப்பட்ட “புஸ்பாஞ்சலி” முதல் “தில்லானா” வரையிலான உருப்படிகளுக்கு நடன மங்கை சஹானா அரங்கிற்கு வழங்கிய ஒவ்வோர் அசைவுகளும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் காணப்பட்டது.
இத்தகைய பிரமிக்கத்தக்க அரங்கேற்றத்தில் பிரதம விருந்தினராக வருகை தந்த அனைவரது விருப்பத்துக்குரிய நடிகை -லைலா , பகுதி நேர நடன பேராசிரியர் - மதராஸ் பல்கலைக்கழகம் முனைவர். ராதிகா வைரவேலவன் மற்றும் சிறப்பு விருந்தினரான “விஜய் டிவி” , பட்டிமன்ற பேச்சாளர் போன்ற பல பரிணாமங்களை கொண்ட ஈரோடு மகேஸ் ஆகியோருக்கு அரங்கிலே வழங்கப்பட்ட கௌரவிப்புக்களும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் நடிகை -லைலா , முனைவர். ராதிகா வைரவேலவன் “விஜய் டிவி” ஈரோடு மகேஸ் ஆகியோர் உரையாற்றும் போது , நாட்டிய மேடையினை சிறிப்பித்த நாட்டிய மங்கையினையும் இத்தகைய அரங்கேற்றத்தை நிகழ்த்த துணை நின்ற குரு ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரனையும் அரங்கேற்றம் கண்ட சஹானாவின் பெற்றோரையும் பாராட்டினர்.
இதன்போது, வருகை தந்திருந்த விருந்தினர்கள் மேலும் உரையாற்றுகையில்,
நடிகை “எவர் கிரீன் ஸ்டார் ” லைலா
நடனம் என்பது கலாசார வெளிப்பாட்டின் ஒரு சக்தி வாய்ந்த வடிவமாகும். இது கலாசார அடையாளங்கள், மதிப்புகள் மற்றும் மரபுகளை பிரதிபலிப்பதன் மூலமும், நிலைநிறுத்துவதன் மூலமும், செல்வாக்கு செலுத்துவதன் மூலமும் சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நானும் ஒரு நடனக் கலைஞர், பரதநாட்டிய அரங்கேற்றத்தின் முக்கியத்துவம் எனக்குத் தெரியும். சஹானா சண்முகராஜாவின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் ஒரு சுபநிகழ்வாகும்.சஹானாவின் எதிர்கால நடனப் பயணத்திற்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முனைவர். ராதிகா வைரவேலவன்,
பழமையான மற்றும் மிகவும் மதிக்கப்படும் பாரம்பரிய நடன வடிவங்களில் ஒன்றான பரதநாட்டியம், கல்விக்கான தனித்துவமான தளத்தை வழங்குகிறது. இந்த பழங்கால கலையானது சிக்கலான கருத்துக்கள் மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த உடல் இயக்கம், இசை மற்றும் வெளிப்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.
கடுமையான பயிற்சியின் மூலம் உடல் ஒழுக்கம், ஒருங்கிணைப்பு, சமநிலை, நெகிழ்வுத்தன்மை, வலிமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை வளர்க்கிறது.
இந்த உடல் நலன்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் செறிவையும் மேம்படுத்துகின்றன, இது கல்வி வெற்றிக்கு அவசியம். இந்தக் கலையைக் கற்றுக்கொள்வதன் மூலம் வரலாறு மற்றும் தத்துவத்தில் ஆழமாக வேரூன்றியிருப்பதால், மாணவர்கள் நாட்டின் மதிப்புகள், மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பற்றிய நுண்ணறிவைப் பெறுகிறார்கள்.
நாட்டிய கலா மந்திர் நிறுவுனர் ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரனிடமிருந்து இந்த கலை வடிவத்தைக் கற்றுக்கொள்ளவும் தொடரவும் வாய்ப்பைப் பெற்ற சஹானா சண்முகராஜா உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர்.
இசைக்குழுவிற்கு இணையாக சஹானாவும் சஹானாவின் நாட்டியத்திற்கு இணையாக இசைக்குழுவும் செயற்பட்டமை சிறப்புக்குரியது.
சஹானாவின் கல்வி சாதனைகள் மற்றும் விளையாட்டு மற்றும் கலை போன்ற பல்வேறு கூடுதல் பாடத்திட்ட செயற்பாடுகள் பரதநாட்டியம் என்பது ஒரு தனிநபரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் ஒரு அறிவு அமைப்பு என்பதற்கு சான்றாக உள்ளது.
"விஜய் டீவி” புகழ் 'ஈரோடு' மகேஷ்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பழந்தமிழகத்தில் உருவாகிய 'சதிர்' ஆட்டத்தின் இன்றைய கலைவடிவமே பரதநாட்டியம் என அறிஞர்கள் சொல்வர். பரதம், நம் மண்ணின் கலை! மரபின் கலை! பாரம்பரிய கலை! நம் பண்பாட்டின் பிரதிபலிப்பு.
நம் தமிழ் மண்ணில் தோன்றி உலகம் முழுவதும் தன் வேரினை பரப்பிய மாபெரும் கலை. எம் பெருமான் நடராசர் திருவுருவமே பரதநாட்டியத்தின் பிரதிபலிப்பாக உள்ளது.
கலைகளின் வழி இன்றைய தலைமுறையை வழிநடத்துவது சிறந்தது. அதிலும் பரதக்கலை, நடனக் கலைகளில் மணிமகுடம். தன் மகளை பரதத்தின் பால் ஈடுபடுத்தி இன்று பெருமையோடு இருக்கிற செங்கோடன் சண்முகராஜா மற்றும் சுகந்தினி சண்முகராஜா மற்றும் சிறு வயதிலிருந்து சஹானாவை வழிநடத்திய குருக்களையும் நான் வாழ்த்துவதற்கும் வணங்குவதற்கும் கடமைப்பட்டிருக்கிறேன் என மேலும் தெரிவித்தனர்.
அத்தோடு, அழகிய லய சித்திரிப்போடு தன் ஆடலினை அரங்கிற்கு முன்வைத்த நாட்டிய மங்கை சஹானா நாட்டியத்துறையில் டிப்ளோமா சான்றிதழ்களை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM