(நெவில் அன்தனி)
கோலாலம்பூரில் நடைபெற்றுவரும் இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் ஏ குழுவில் தோல்வி அடையாமல் உள்ள இலங்கையும் நடப்பு சம்பியன் இந்தியாவும் தமது கடைசி லீக் போட்டியில் ஒன்றையொன்று வியாழக்கிழமை (23) எதிர்த்தாடவுள்ளன.
இப் போட்டி கோலாலம்பூர் பேயுமாஸ் ஓவல் மைதனாத்தில் இலங்கை நேரப்படி வியாழக்கிழமை (23) நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த இரண்டு அணிகளும் முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் தலா 4 புள்ளிகளைப் பெற்று சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாடுவதை ஏற்கனவே உறுதிசெய்துகொண்டன.
ஆனால், சுப்பர் சிக்ஸ் சுற்றில் டி குழுவில் முதலிடத்தை பெற்றுள்ள அவுஸ்திரேலியாவை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதையே இலங்கையும் இந்தியாவும் விரும்பும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதன் காரணமாக இப் போட்டியில் என்ன விலை கொடுத்தேனும் வெற்றிபெற்று ஏ குழுவில் அணிகள் நிலையில் முதலாம் இடத்தை உறுதிசெய்ய இரண்டு அணிகளும் முயற்சிக்கவுள்ளன.
முதல் இரண்டு போட்டிகளில் மிகத் திறமையாக விளையாடி மலேசியாவையும் மேற்கிந்தியத் தீவுகளையும் இலகுவாக வெற்றிகொண்ட இலங்கை, இப் போட்டியிலும் தனது வெற்றி அலையைத் தொடர்வதற்கு முயற்சிக்கும்.
எவ்வாறாயினும் முதல் இரண்டு போட்டிகளில் போன்று இந்தியாவுடனான போட்டி இலங்கைக்கு இலகுவாக அமையாது என்பது நிச்சயம்.
மலேசியாவுடனான போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டியிலும் துடுப்பாட்ட வீராங்கனைகள் திறமையை வெளிப்படுத்தியதன் பலனாக இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி கணிசமான (160 ஓட்டங்களுக்கு மேல்) ஓட்டங்களைக் குவித்தது.
அந்த இரண்டு போட்டிகளிலும் மிகத் திறமையாகவும் பொறுப்புணர்வுடனும் தஹாமி சனெத்மா துடுப்பெடுத்தாடியிருந்தார். மயேலசியாவுடனான போட்டியில் 55 ஓட்டங்களைப் பெற்ற அவர் மாத்திரமே இலங்கை சார்பாக அரைச் சதம் குவித்தவர் ஆவார்.
இந்த வருட 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் அத்தியாயத்தில் தஹாமி சனெத்மா, இங்கிலாந்தின் டாவினா சரா பெரின் (74) ஆகிய இருவரே அரைச் சதங்கள் பெற்றுள்ளனர்.
சனெத்மாவை விட சஞ்சனா காவிந்தி, அணித் தலைவி மனுதி நாணயக்கார, ஹிருனி ஹன்சிகா, ஷஷினி கிம்ஹானி ஆகியோர் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை துடுப்பாட்டத்தில் வழங்கியுள்ளனர்.
பந்துவீச்சில் 15 வயதான சமோதி ப்ரபோதா, லிமன்சா திலக்கரட்ன, அசேனி தலகுனே, மனுதி நாணயக்கார ஆகியோர் சிறப்பாக பந்துவீசி எதிரணிகளை திக்குமுக்காட வைத்தனர்.
இந்த வீராங்கனைகள் அனைவரும் முதலிரண்டு போட்டிகளிலும் பார்க்க இந்தியாவுடனான போட்டியில் இன்னும் அதிகமான பொறுப்புணர்வுடன் விளையாட வேண்டிய கட்டாய நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக இலங்கை வீராங்கனைகள் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடலாம்.
எனினும் முதலிரண்டு போட்டிகளில் போன்றே இந்தியாவுடான போட்டியிலும் தமது அணி திறமையாக விளையாடும் என இலங்கை அணித் தலைவி மனுதி நாணயக்கார தெரிவித்தார்.
'மலேசியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரண்டு அணிகளுக்கும் எதிரான போட்டிகளில் ஈட்டிய வெற்றிகள் மகிழ்ச்சி தருகிறது. எமது பயிற்றுநர்கள் அளித்துவரும் அதிசிறந்த பயிற்சிகளின் பலனாக நாங்கள் அனைவரும் திறமையை வெளிப்படுத்தி வருகிறோம். இந்தப் போட்டிகளில் எவ்வாறு உத்வேகத்துடன் விளையாடினோமோ அதே உத்வேகத்துடன் அடுத்த போட்டியை (இந்தியாவுடனானது) எதிர்கொள்வோம்' என மனுதி நாணயக்கார குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க, இலங்கைக்கு எதிரான போட்டியில் தொடர்ந்து சிறப்பாக விளையாட எதிர்பார்த்துள்ளதாக இந்திய அணித் தலைவி நிக்கி ப்ரசாத் தெரிவித்தார்.
இந்தியா தனது இரண்டு போட்டிகளிலும் எதிரணிகளான மெற்கிந்தியத் தீவுகளையும் மலேசியாவையும் மிக இலகுவாக வெற்றிகொண்டிருந்தது.
அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் திறமையாக பந்துவீசி எதிரணிகளை குறைந்த மொத்த எண்ணிக்கைகளுக்கு சுருட்டியதால் ட்ரிஷா கோங்காடி, ரி. கமலினி, சானியா சோல்க் ஆகிய மூவரே துடுப்பெடுத்தாடியுள்ளனர். இதன் காரணமாக மலேசிய ஆடுகளத்தில் இந்தியாவின் ஏனைய வீராங்கனைகளுக்கு துடுப்பாட்ட அனுபவம் கிடைக்காமல் போயுள்ளது. இது அவ்வணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.
இப் போட்டி ஏ குழுவுக்கான அணிகள் நிலையில் முதலாம் இடத்தைப் பெறப்போகும் அணியைத் தீர்மானிக்கவுள்ளதால் இரண்டு அணிகளுக்கும் இந்த கடைசி லீக் போட்டி முக்கியம் வாய்ந்தாக அமையவுள்ளது.
அணிகள்
இலங்கை: சஞ்சனா காவிந்தி, சுமுது நிசன்சலா, மனுதி நாணயக்கார (தலைவி), ஹிருணி குமாரி, தஹாமி சனெத்மா, ரஷ்மிக்கா செவ்வந்தி, ஷஷினி கிம்ஹானி, லிமன்சா திலக்கரட்ன, ப்ரமுதி மெத்சரா, அசேனி தலகுனே, சமதி ப்ரபோதா.
இந்தியா: ட்ரிஷா கொங்காடி, ஜீ. கமலினி, சானிக்கா சல்கே, நிக்கி ப்ரசாத் (தலைவி), பாவிகா ஆஹிரே, மிதிலா வினோத், ஆயுஷி ஷுக்லா, வி.ஜே. ஜோஷித்தா, ஷப்ணம், பாருணிகா சிசோடியா, வைஷ்ணவி ஷர்மா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM