மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் கால்பந்தாட்டத்திற்கு உயிர்கொடுக்கும் இளையோர் கால்பந்தாட்ட லீக்

Published By: Vishnu

22 Jan, 2025 | 11:23 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பில் இயங்கும் மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகம் ஏற்பாடு செய்துள்ள கால்பந்தாட்டப் பயிற்சியகங்களின்14 வயதுக்குட்பட்ட மற்றும் 16 வயதுக்குட்பட்ட  அணிகளுக்கு இடையிலான இளையோர் காலபந்தாட்ட லீக் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இலங்கையில் முதல்தர கால்பந்தாட்டப் போட்டிகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் ஸ்தாபகத் தலைவர் ஒகஸ்டின் ஜோர்ஜ் இப் போட்டியை நடத்துவது வரவேற்கத்தக்கதும் பாராட்டுக்குரியதும் என கால்பந்தாட்டப் பயிற்சியகங்களை சேர்ந்த பயிற்றுநர்கள் தெரிவித்தனர்.

மேலும், இளையோர் கால்பந்தாட்ட லீக்  இலங்கையில் கால்பந்தாட்டத்திற்கு  உயிர்கொடுப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இப் போட்டியை முன்னின்று நடத்துபவர்களும் பங்குபற்றும் பயிற்சியகங்களில் ஒன்றைத் தவிர்ந்த ஏனையவற்றின் உரிமையாளர்களும் தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.

இந்த சுற்றுப் போட்டியில் சோண்டர்ஸ் கால்பந்தாட்ட பயிற்சியகம், ஜாவா லேன் கால்பந்தாட்டப் பயிற்சியகம், கலம்போ எவ்.சி. கால்பந்தாட்டப் பயிற்சியகம், கலம்போ யூத் கால்பந்தாட்டப் பயிற்சியகம், கொழும்பு மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகம், இராஜகிரிய கிளை மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகம் ஆகியவற்றின் 14 வயதுக்குட்பட்ட மற்றும் 16 வயதுக்குட்பட்ட 12 அணிகள் பங்குபற்றுகின்றன.

இப் போட்டிக்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் அனைவரும் பிரமிக்கத் தக்கவகையில் சர்வதேச தரத்திற்கு ஒப்பான தொடக்க விழாவுடன் இந்த சுற்றுப் போட்டி அண்மையில் ஆரம்பமானது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர், இளையோர் கால்பந்தாட்ட லீக் சுற்றுப் போட்டிக்கு பிரதான அனுசரணை வழங்கும் கார்ட்டிவேட் மோட்டர்ஸ் பிறைவேட் லிமிட்டெட் அதிபர் சல்மான் அப்சல், மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் ஸ்தாபகத் தலைவர் ஒகஸ்டின் ஜோர்ஜ் ஆகியோர் ஆரம்ப விழாவில் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் சுற்றுப் போட்டியை வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து 14 வயதுக்குட்பட்ட, 16 வயதுக்குட்பட்ட பயிற்சிய அணிகளுக்கு இடையிலான முதலாம் கட்டப் போட்டிகள் குதிரைப்பந்தயத் திடலில் நடைபெற்றன.

இந்த சுற்றுப் போட்டி இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் கிண்ணத்துக்காக  நடத்தப்படுகிறது.

போட்டியை முன்னின்று நடத்தும் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியக அணியும் ஜாவா லேன் கால்பந்தாட்டப் பயிற்சியக  அணியும் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆரம்பப் போட்டியில் மோதின.

அப் போட்டியில் இரண்டு அணிகளினதும் இளம் வீரர்களில் பலர் வெளிப்படுத்திய கால்பந்தாட்ட ஆற்றல்கள் பிரமிக்க வைத்தது. இலங்கையில் கால்பந்தாட்டம் இன்னும் உயிருடன்தான் இருக்கிறது என்பதையும் கால்பந்தாட்டத்திற்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பதையும் எடுத்துக்காட்டும் வகையில் வீரர்கள் அற்புதமாக விளையாடிதைக் காணக்கூடியதாக இருந்தது.

கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய அப் போட்டியில் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியக அணி 3 - 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

ஆனால், அப் போட்டியிலும் அதனைத் தொடர்ந்து முதலாம் நாள் முழுவதும் நடைபெற்ற சகல போட்டிகளிலும் விளையாடிய 200க்கும் மேற்பட்ட வீரர்கள், மத்தியஸ்தம் வகித்த பிரதான கள மற்றும் உதவி மத்தியஸ்தர்கள், போட்டி தீர்ப்பாளர், ஒகஸ்டின் ஜோர்ஜ் தலைமையிலான போட்டி ஏற்பாட்டுக் குழுவினர், வீரர்களின் பெற்றோர்கள் அனைவரும் கால்பந்தாட்டத்தை வெற்றிபெறச் செய்தார்கள் என்று கூறுவது மிகவும் பொருத்தமாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக போட்டியில் பங்குபற்றிவரும் அனைத்து அணிகளும் நேர்த்தியான விளையாட்டு (Fairplay) கோட்பாட்டை பின்பற்றி விளையாடி வருவது அனைவரையும் கவர்வதாக அமைகின்றது.

கடந்த வார இறுதிவரை நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் வீரர்களின் நேர்த்தியான விளையாட்டைக் காணக்கூடியதாக இருந்தது.

இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் பிரகாரம் 14 வயதுக்குட்பட்ட பிரிவுக்கான அணிகள் நிலையில் பார்சிலோனா கால்பந்தாட்டப் பயிற்சியக அணி முதலாம் இடத்திலும் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியக ஏ அணி இரண்டாம் இடத்திலும் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியக பி அணி மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன.

16 வயதுக்குட்பட்ட பிரிவுக்கான அணிகள் நிலையில் கலம்போ யூத் கால்பந்தாட்டப் பயிற்சியக அணி முதலாம் இடத்திலும் சோண்டர்ஸ் கால்பந்தாட்டப் பயிற்சியக அணி இரண்டாம் இடத்திலும் பார்சிலோனா கால்பந்தாட்டப் பயிற்சியக அணி மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன.

லீக் சுற்றில்  மேலும் 3 கட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து பெப்ரவரி 15ஆம் திகதி அரை இறுதிப் போட்டிகளும் பெப்ரவரி 22ஆம் திகதி இறுதிப் போட்டிகளும் நடைபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11