(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
குடும்ப பொருளாதார மேம்பாட்டுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல முயற்பட்டு முகவர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமான முறையில் இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் என்னவென்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வின் போது இருபத்தேழு இரண்டின் கீழ் கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
தமது குடும்பத்தின் பொருளாதார மேம்பாடு கருதி வேலைவாய்ப்புக்காக இலங்கையர்கள் சட்ட ரீதியாகவும், சட்ட விரோதமான முறையிலும் வெளிநாடுகளுக்குச் செல்ல முற்படும் போது வெளிநாட்டு முகவர்களினால் ஏமாற்றப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகியுள்ளன.
இந்த நாட்டு தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்கள் இவ்வாறு முகவர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமான முறையில் இணைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளவர்களின் பெற்றோர் எம்மிடம் முறையிட்டு தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு வலியுறுத்துகிறார்கள்.
இதற்கமைய அதிர்ஷ்ட ராஜா கேமஸ் விதூஷன் - யாழ்ப்பாணம், பகிரதன் - கரவெட்டி, சுந்தரலிங்கம் பாலச்சந்திரன் - முல்லைத்தீவு, பிரதாப் - யாழ்ப்பாணம், சிவேஸ் - யாழ்ப்பாணம், ஆகியோர் முகவர்களால் ஏமாற்றப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் 2022.10.20 ஆம் திகதி ரஷ்யா - பெலராஸ் எல்லையில் விஜயகுமார் முகுந்தன் காணாமல் போயுள்ளார். இவருக்கு நேர்ந்தது என்னவென்பது இதுவரை தெரியவில்லை. ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கையரின் எண்ணிக்கை, உயிரிழந்துள்ளவர்களின் விபரம் மற்றும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னவென்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.
ரஸ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ளவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் சொல்லனா துயரங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். தமது உறவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆகவே நெருக்கடிக்குள்ளாகியுள்ள எமது நாட்டவர்களை மீட்க அரசாங்கம் துரிதகர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு எழுந்து பதிலளித்த வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா , இவ்விடயம் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு தரவு அடிப்படையில் பதிலளிக்க வேண்டும் ஆகவே 1 வார காலவகாசம் தருமாறு வலியுறுத்தினார்.
மீண்டும் எழுந்து உரையாற்றிய, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், முன்வைக்கப்பட்டுள்ள இந்த விடயத்தின் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு அரசாங்கம் ஒருவார காலத்துக்குள் சிறந்த பதிலை வழங்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM