பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இருதரப்பு கிரிக்கெட் தொடரை முன்னெடுக்கப் போவதில்லையென இந்திய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையில் தொடரொன்ரை நடத்துவது தொடர்பில் இந்திய கிரிக்கெட் சபை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகள் இன்று டுபாயில் பேச்சுவார்த்தை நடத்துவதை தொடர்ந்தே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இந்திய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் கருத்து தெரிவிக்கையில் "பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது தொடர்பாக எந்த முன்னெடுப்புகளையும் எடுக்கும் முன் அதனை இந்திய கிரிக்கெட் சபை மத்திய அரசிடம் தெரிவித்து அனுமதி பெறவேண்டும்.

மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும்வரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இரு தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறாது என்பதைத் தெளிவாக கூறிக் கொள்கிறேன். இதில் சர்வதேசப் போட்டிகள் பற்றி குறிப்பிடவில்லை" என்றார்