சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில் நான் கலந்துக் கொள்வதை தடுப்பதற்கு பாரிய சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது ; எஸ்.சிறிதரன்

21 Jan, 2025 | 03:51 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில்  நான் கலந்துக் கொள்வதை தடுப்பதற்கு  பாரிய சூழ்ச்சி  மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனடா நாட்டில் உள்ள தடை செய்யப்பட்டுள்ள அமைப்புடன் பேசுவதற்காகவே நான் சென்னை சென்றதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இவரை விசாரணை செய்தால் உண்மையை கண்டறியலாம்.

விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எவருக்கும் நெருக்கடி ஏற்படவில்லை என அய்யூப் அஸ்மின்  குறிப்பிட்டுள்ள விடயத்துக்கும், சுமந்திரனின் கருத்துக்கும் தொடர்பு உள்ளதென சந்தேகிக்கிறேன். எனது சிறப்புரிமை மீறப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது  ஆகவே விசாரணைகளை மேற்கொள்ளுங்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

இந்திய தமிழ்நாடு அரசின்  ஏற்பாட்டில்   கடந்த 11, 12 ஆம் திகதிகளில் சென்னையில்  நடைபெற்ற அயலகத் தமிழர் தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பொருட்டு கடந்த 10 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம்  ஊடாக நான் இந்தியாவுக்கு  பயணமாகி இருந்தேன். 

அன்றைய தினம் மாலை 6.35 மணிக்கு ஸ்ரீ லங்கன் எயார்லைன் விமான சேவையில்  யு.எல்  123 விமானம் புறப்படத் தயாராயிருந்த நிலையில் எனது கடவுச் சீட்டில் குறைபாடு உள்ளதாகவும் பயங்கரவாத குற்றத்தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவினரின் விசாரணைகளுக்கு என்னை உட்படுத்த வேண்டுமெனவும்  தெரிவித்த விமான நிலைய அதிகாரிகள் எனக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதன்போது என்னுடன் இணைந்து பயணம் செய்வதற்காக விமான நிலையத்துக்கு  வருகை தந்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் விமானம் புறப்படத் தயாரான இறுதி நேரத்தில் என்னை இந்திய பயணத்திற்கு அனுமதித்தனர்.

13 ஆம் திகதி நான் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியபோது குறித்த பயணத்தடை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வினவிய போது அவ்வாறான பயணத்தடை எதுவும்  விதிக்கப்படவில்லை எனத்தெரிவித்திருந்தனர். 

நீதிமன்றக் கட்டளைகள் எதுவுமின்றி சபாநாயகரின் ஆலோசனை எதுவுமின்றி எனக்கு பயணத்தடை உள்ளதென குடிவரவு,குடியகல்வு அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டமை திட்டமிட்ட வகையிலான சிறப்புரிமை மீறல் என்றே நான் கருதுகின்றேன்.

 மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினராக எனக்கு இருக்கும் அடிப்படை சிறப்புரிமையை மீறும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னணி குறித்து இந்த சபையில் நான் கேள்வி எழுப்புகின்றேன்.  

அத்தோடு இன்னொரு முக்கிய விடயத்தையும் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். இரு நாட்களுக்கு முன்னர் (19 ஆம் திகதி) யாழ்ப்பாணத்தில் தனியார்  ஊடகமொன்றுக்கு  நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ள   முன்னாள்   பாராளுமன்ற  உறுப்பினர் எம். ஏ.  சுமந்திரன் “ சிறிதரன் கனடாவிலிருந்து வருகின்ற   தடை செய்யப்பட்ட அமைப்போடு பேச முனைந்தாகவும் அதற்காகத்தான் அவர் சென்னை செல்ல இருந்ததாகவும் அந்த காரணத்தின் அடிப்படையில்தான் அவரை தடுக்க விமான நிலையத்தில் முயற்சி செய்திருக்கலாம் ஊக்கத்தின் அடிப்படையில் சிறீதரனை அவர்கள் மறித்திருக்கலாம். ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை வைத்துதான் நான் இதனைக் கூறுகிறேன்'' என்று   குறிப்பிட்டுள்ளார்.

எனவே இது தொடர்பில் சுமந்திரனிடம்  விசாரித்தால் எந்த எந்த  ஊடகங்களில்  இந்த செய்தி வந்துள்ளது என்பதனை அறிந்து அந்த ஊடகங்களின் பிரதானிகளை  விசாரிப்பதன் மூலம் உண்மையைக் கண்டறிய முடியும். இது எனக்கு எதிராக செய்யப்பட்ட மிகப்பெரும் சதியாகவே நான் கருதுகின்றேன். 

விமான நிலையத்தில் தடுக்கப்பட்டமை தொடர்பில் சிறீதரன் தனக்கு தெரிவிக்கவில்லை என்றும் சுமந்திரன் அதில் கூறியுள்ளார். நான் அவரை சென்னையில் சந்தித்தபோது சுமந்திரனும்  இது தொடர்பில் என்னிடம் எதுவும் கேட்கவும் இல்லை.

இதனை விட வடக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினராக இருந்த அய்யூப் அஸ்மின் என்னை விமான நிலையத்தில் தடுத்த அன்றையய தினமான 10 ஆம் திகதி  தன்னுடைய முக நூலில் ''கடந்த நாட்களில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் விமான நிலையத்தில் எவ்வித இடையூறுகளும் எவராலும் ஏற்படுத்தப்படவில்லை. அவ்வாறு பரப்பப்படுகின்ற செய்திகளில் உண்மைகள் எதுவும் இல்லை விமான நிலைய உயரதிகாரி'' என்ற செய்தியை வெளியிட்டுள்ளார்.

நான் இந்தியாவிலுள்ள பிரபல அரசியல் தலைவர் செந்தமிழன் சீமானுடன் இருக்கும் படத்தையும் தன்னுடைய முகநூலில் பதிவேற்றி  எனக்கு எதிராக இந்த செய்தியை வெளியிட்டுள்ளார். அஸ்மினும் சுமந்திரனும் நெருங்கிய நண்பர்கள் .சுமந்திரன் சொன்ன செய்திக்கும் அஸ்மினின்  பதிவுக்கும் . ஏதோ ஒரு  தொடர்பு இருப்பதுபோல் எனக்குத் தெரிகின்றது.

என்னை அந்த நிகழ்வுக்கு போக விடாது தடுப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே இதற்குப் பின்னால்  சாதி உள்ளது. எனவே இவ்விடயத்தில் மிகக்கூடிய கவனம்   எடுத்து விசாரிக்கப்பட வேண்டும்.

இதேவேளை என்னுடைய  பிரத்தியேக  பாதுகாப்பு அதிகாரி ஜி.ஜி.பி. ரத்ன குமார .இவர் என்னுடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மெய்ப்பாதுகாவலாராக இருந்தார். திடீரென சென்ற வாரம் அவர் மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பாக நான் கடந்த 8 ஆம் திகதி பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக கடிதம் வழங்கியிருந்தேன். 

அதன் பிரதியை சபா பீடத்திற்கு சமர்ப்பிக்கின்றேன்.  இதுவரை அந்த அதிகாரியை மீண்டும் எனக்கு நியமிக்கவில்லை. அஸ்மினின் முக நூல் பதிவையும் நான் சபாபீடத்தில் சமர்ப்பிக்கின்றேன். சுமந்திரன் வழங்கிய பேட்டியை கொண்ட பென் டிரைவையும் சபா பீடத்தில் சமர்ப்பிக்கின்றேன்.

இது என் மீது புனையப்பட்டுள்ள மிகப்பெரிய மோசடி.நான் எந்தவொரு காலத்திலும் இலங்கையில்  தடை செய்யப்பட்டுள்ள கனடாவிலுள்ள அமைப்புடன் பேசுவதற்கு தயாராகவில்லை. அப்படி யாரும் என்னைக் கேட்டதுமில்லை.  

அவ்வாறான முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவும் இல்லை. அரசின் பேச்சாளர் போல் அல்லது புலனாய்வுத்துறையின் பேச்சாளர் போல்  ஊகத்தின் அடிப்படையில்  ஊடகங்களில் வந்தது என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளது மிகப் பாரதூரமானது. 

எனக்கு நீதி வேண்டும். சர்வதேச பாராளுமன்றத்திடமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் சர்வதேச மன்னிப்புச்சபையிடமும்  இக்கோரிக்கையை முன்வைக்கின்றேன். பாராளுமன்றத்திடமிருந்து எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகின்றேன்.எனவே நீதியான நேர்மையான விசாரணைக்கு எனது விடயத்தை உட்படுத்த   வேண்டும் .எனக்கு இதற்கான வழியை சொல்ல வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வத்தளையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது...

2025-02-08 12:09:11
news-image

திருகோணமலை – கொழும்பு பகல்நேர ரயில்...

2025-02-08 11:55:17
news-image

நாரங்கல பகுதியில் புதையல் தோண்டிய நால்வர்...

2025-02-08 11:51:45
news-image

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி...

2025-02-08 11:28:56
news-image

மாத்தறையில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

2025-02-08 11:19:51
news-image

யாழ். கட்டைக்காடு கடற்கரையில் கொக்கெய்ன் போதைப்பொருள்...

2025-02-08 11:02:22
news-image

முல்லைத்தீவில் பஸ் சாரதி மீது வாள்வெட்டுத்...

2025-02-08 09:59:53
news-image

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவன்...

2025-02-08 09:57:57
news-image

சுகாதாரத்துறை சார் ஊழியர்களுக்கான பணியிடமாற்றத்துக்கு நிறைவுகாண்...

2025-02-07 20:16:30
news-image

ஒரு சில தமிழ், முஸ்லிம் தலைவர்கள்...

2025-02-07 20:22:35
news-image

இன்றைய வானிலை

2025-02-08 06:05:17
news-image

புளியங்குளத்தில் மின்சாரம் தாக்கி 6 வயது...

2025-02-08 02:19:36