டி.பி.எஸ். ஜெயராஜ்
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் தளபதியான கேணல் கட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் இருபதாம் நூற்றாண்டின 80 களில் யாழ்ப்பாணத்தின முடிசூடாமன்னனாக கருதப்பட்டார். யாழ்ப்பாண குடாநாட்டின் மிகப்பெரும் பகுதி அப்போது விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. கிட்டு ஓட்டிச்சென்ற வாகனத்துக்குள் இனந்தெரியாத நபர் ஒருவர் குண்டொன்றை வீசியபோது யாழ்ப்பாணம் எங்கும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானது.
1987 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அந்த சம்பவத்தின் விளைவாக கிட்டு ஒரு காலை இழந்தார். அந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பான விவகாரங்களில் கட்டுரையின் இந்த மூன்றாம் பாகம் கவனம் செலுத்துகிறது.
இரு வாரங்களுக்கு முன்னர் இந்த கட்டுரையின் முதல் பாகத்தில் குறிப்பிடப்பட்டதை போன்று கிட்டு யாழ்ப்பாணத்தில் இரு தடவை கைது செய்யப்பட்டபோது பாதுகாப்பு படைகளிடம் இருந்து தப்பிச் செல்வதற்கு அவரின் கெடுதியில்லாதவர் போன்ற தோற்றம் உதவியது.
தாங்கள் சந்தேகத்தில் கைதுசெய்த மென்மையான குணாதிசயத்தைக் கொண்டவரைப் போன்ற தோற்றத்தைக் கொண்ட பேர்வழி பயங்கரமான விடுதலை புலிகள் இயக்கத்தின் யாழ்ப்பாண தளபதி கிட்டு என்பதை இராணுவம் புரிந்து கொள்ளவில்லை.
வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞரான கிட்டு பண்டிதர் என்ற ரவீந்திரனின் தலைமைத்துவத்தின் கீழ் விடுதலை புலிகளின் யாழ்ப்பாண இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டபோது யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான மக்களுக்கு தெரியாதவராகவே அவர் இருந்தார். அதனால் அவர் யார் என்பதை தெரியாத கும்பல் ஒன்று அவரைத் தாக்குவதற்கு முயற்சித்த விசித்திரமான சம்பவம் ஒன்றும் இடம்பெற்றது. அன்று என்ன நடந்தது என்ன தெரியுமா?
1984 ஆம் ஆண்டில் பண்டிதரின் தலைமையின் கீழ் கிட்டு விடுதலை புலிகளின் இராணுவ தளபதியாகவும் திலீபன் அரசியல் பிரிவின் தலைவராகவும் பொறுப்பேற்றபோது இராணுவமும் பொலிஸும் சுதந்திரமாக நடமாடின. அதனால் விடுதலை புலிகள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் மக்களுடன் மக்களாக கலந்தது இயங்க வேண்டியதாயிற்று. மாவோ சேதுங்கின் வார்த்தைகளில் கூறுவதானால் கெரில்லாக்கள் மக்கள் என்ற சமுத்திரத்தில் நீந்தித்திரியும் மீன்கள்.
1984 ஏப்ரிலில் யாழ்ப்பாண நகரின் மத்தியில் சனசந்தடிமிகுந்த ஆஸ்பத்திரி வீதியில் இராணுவத்தின் ரோந்துப் பிரிவொன்றை மறைந்திருந்து தாக்குவதற்கு விடுதலை புலிகள் கண்ணிவெடி ஒன்றை மறைத்து வைத்தனர். அந்த கண்ணிவெடிச் சம்பவம் அடைக்கலமாதா கத்தோலிக்க தேவாலயத்துக்கு எதிரே இடம்பெற்றது. ஒரு சில படைவீரர்கள் காயமடைந்தனரே தவிர, எவரும் கொல்லப்படவில்லை.
கண்ணிவெடியை வெடிக்க வைப்பதற்காக விடுதலை புலிகள் தேவாலய வளாகத்திற்குள் பதுங்கியிருந்தனர். சில படைவீரர்கள் அந்த வளாகத்திற்குள் சென்று கண்டபாட்டில் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். தேவாலயத்தின் சுவர்களை குண்டுகள் சல்லடை போட்டன.
அடைக்கலமாதா தேவாலயத்தை இராணுவத்தினர் தாக்குகிறார்கள் என்ற செய்தி யாழ்ப்பாணம் எங்கும் பரவியது. யாழ்ப்பாண மாநகரசபை பகுதியில் வாழ்ந்த மக்களில் 40 சதவீதமானவர்கள் கத்தோலிக்கர்கள். உடனடியாக யாழ்ப்பாணத்தில் ஆரியகுளம் பகுதியில் அமைந்திருக்கும் பௌத்த நாகவிகாரைக்கு அருகாக கும்பல் ஒன்று திரண்டது. தேவாலயம் மீதான தாக்குதலுக்கு பழிவாங்க விகாரை மீது தாக்குதல் நடத்த அவர்கள் முயன்றார்கள்.
இதை கேள்விப்பட்ட உடனடியாகவே சம்பவ இடத்துக்கு விரைந்து கும்பலை கலந்து செல்லுமாறு உத்தரவிட்டார். நீங்கள் யார் என்று கிட்டுவை அவர்கள் திருப்பிக் கேட்டார்கள். விடுதலை புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட தளபதி என்று அவர் கூறிய பதிலை அவர்களில் பலர் நம்பவில்லை.
அதற்கு காரணம் கிட்டுவின் அப்பாவித்தனமான தோற்றமேயாகும். நீ ஒரு புலி இல்லை என்று கூறிக்கொண்டு அவர்கள் அவரை நோக்கி ஆவேசத்துடன் விரைந்தனர். கிட்டு தனது பிஸ்டலை எடுத்து ஆகாயத்தை நோக்கி இரண்டு வேட்டுக்களை தீர்த்தார். அமைதியானவரைப் போன்று தோன்றிய அவர் உண்மையில் கிட்டுதான் என்பதை விளங்கிக்கொண்ட அவர்கள் கலைந்து சென்றனர்.
இவ்வாறுதான் கிட்டு யாழ்ப்பாண வாசிகளுக்கு முதலில் தெரியவந்தார். அதற்கு பிறகு யாழ்ப்பாணத்தில் பரிச்சயமான ஒருவராக அவர் மாறினார். யாழ்ப்பாணக் குடாநாட்டின் பெரும்பகுதி விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பிறகு கிட்டு பெரியளவில் தனது பிரசன்ன்தை வெளிக்காட்டினார். கிட்டுவின் தலைமைத்துவத்தின் கீழேயே யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதியை விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள்.
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத் தாக்குதல்
எவ்வாறு இந்த நிலைவரம் ஏற்பட்டது? குடாநாட்டுக்குள் விடுதலை புலிகள் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்த தொடங்கிய நிலையில், பல பொலிஸ் நிலையங்கள் மூடப்பட்டன. இராணுவமும் அதன் காவல் நிலைகளைக் குறைத்துக்கொண்டது. இராணுவத்தினரின் ரோந்து நடவடிக்கைகளும் குறைந்துவிட்டன. மாவட்டம் முழுவதற்கும் பொலிஸ் தலைமையகமாக விளங்கிய யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் மீதான விடுதலை புலிகளின் தாக்குதலே இந்த நிலைவர மாற்றத்துக்கு காரணமாகும்.
வல்வெட்டித்துறையை சேர்ந்த பொலிஸ் சாராஜன்ட் ஒருவரின் வடிவில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்குள் விடுதலை புலிகள் ஒரு ' உளவாளியை ' வைத்திருந்தனர். அது வேறு யாருமல்ல பின்னரான நாட்களில் விடுதலை புலிகளின் " பொலிஸ்மா அதிபர் " என்று அறியப்பட்ட நடேசன்தான். வினீதா குணசேகர என்ற சிங்கள பெண்பொலிஸ் உத்தியோகத்தரை திருமணம் செய்த நடேசன் தாக்குதலுக்கு நேவையான திடடங்களையும் வரைபடங்களையும் தயாரிப்பதில் விடுதலை புலிகளுக்கு உதவினார்.
கிட்டுவே நேரடியாக தலைமைதாங்கி நடத்திய யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதல் பெரிய வெற்றிகரமானதாக அமைந்தது. பொலிசாரின் ஆயுதங்களில் பெரும்பகுதியை விடுதலை புலிகள் கைப்பற்றினர். விடுதலை புலிகளின் படையணி ஒன்று முடைநாற்றம் எடுக்கும்அகழியின் ஊடாக இரகசியமாக நகர்ந்துசென்று தாக்குதல் நடத்தி பொலிசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர் என்று கூறப்படுகிறது. யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தாக்குதலுக்கு பிறகு குடாநாட்டில் பொலிசாரின் நடவடிக்கைகள் இல்லாமல் போயின. இராணுவமும் கூட தரையில் அதன் துருப்புக்களின் நடமாட்டங்களை மட்டுப்படுத்தத் தொடங்கியது.
திம்புவில் சமாதானப் பேச்சுவார்த்தை
இதற்கு பிறகுதான் பூட்டான் நாட்டின் தலைநகர் திம்புவில் இந்தியாவின் அனுசரணையுடனான பிரபல்யமான சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இலங்கை அரசாங்கத் தூதுக்குழுவுக்கு ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் சகோதரர் எச்.டபிள்யூ. ஜெயவர்தன கியூ.சி. தலைமை தாங்கினார். தமிழர்கள் தரப்பில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி, தமிழீழ விடுதலை புலிகள், தமிழீழ மக்கள் விடுதலை கழகம் ( புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் ( ரெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( ஈ.பி.ஆர்.எல்.எவ்.) மற்றும் ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் ( ஈரோஸ்) ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். திம்பு பேச்சுவார்த்தைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மோதல் நிறுத்தம் ஒன்றை அவசியப்படுத்தின. போர்நிறுத்தத்தின்போது இலங்கை பாதுகாப்பு படைகள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டன.
இந்த போர் நிறுத்தத்தை கிட்டு விடுதலை புலிகளின் அனுகூலத்துக்கு பயன்படுத்திக் கொண்டார்.
இராணுவ முகாம்களுக்கு நெருக்கமான கேந்திர முக்கியத்துவ நிலைகளில் விடுதலை புலிகள் பதுங்கு குழிகளையும் அகழிகளையும் இரகசியமாக அமைத்துக் கொண்டனர். ஆயுதப்படைகள் தூங்கிக் கொண்டிருந்தன. இரண்டு சுற்றுக்களுக்கு பிறகு திம்பு பேச்சுவார்த்தைகளை முறிவடைந்தன. மீண்டும் மோதல்கள் ஆரம்பமாகின.
மோதல்கள் ஆரம்பமானபோது தாங்கள் முற்றுகைக்கு உள்ளாகியிருப்பதை இராணுவத்தினர் தெரிந்துகொண்டனர். இராணுவ முகாம்கள் விடுதலை புலிகளினால் நிர்மூலம் செய்ய்படக்கூடிய ஆபத்து இருக்கவில்லை என்றபோதிலும், தங்களது முகாம்களில் இருந்து வெளியில் வருவது படையினருக்கு பிரச்சினையாக இருந்தது. ஏனென்றால் இராணுவ முகாம்களுக்கு நெருக்கமான நிலைகொண்டிருந்த விடுதலை புலிகளின் படையணிகள் படையினரை நோக்கி தாக்குதல் நடத்தக்கூடிய நிலையில் இருந்தனர்.
இராணுவ அணியொன்று வெளியில் வருவதற்கு முயற்சித்த சந்தர்ப்பங்களில் எல்லாம் இராணுவ முகாம்களுக்கு அண்மையாக இருந்த விடுதலை புலிகளின் காவல் நிலைகளில் இருந்த போராளிகள் தங்களின் தலைமையை வாக்கி டோக்கி மூலமாக உஷார்ப்படுத்தினர். அப்போது சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு விடுதலை புலிகளின் மேலதிக படையணிகள் விரைந்து தாக்குதல் நடத்தி இராணுவத்தினரை முகாம்களுக்கு திருப்பி அனுப்பிவிடுவர். இவ்வாறாக தாக்குதல்களை நடத்திய விடுதலை புலிகளின் மேலதிக படையணிகளுக்கு பெரும்பாலும் கிட்டுவே தலைமை தாங்குவார். சண்டைகள் கடுமையானவையாக இருக்கும். இறுதியில் இராணுவத்தினர் தங்களது முகாம்களுக்கு திரும்பிவிடுவர்.
பாதி விடுதலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் பாதி விடுதலை செய்யப்பட்ட நிலையில் இருந்தது. அந்த நேரத்தில் முக்கியமானவராக கிட்டு விளங்கினார். இராணுவம் வீதிகளில் நடமாடமுடியாத நிலையில் இருந்ததால் இராணுவ முகாம்களுக்கான போக்குவரத்து பிரதானமாக ஆகாய மார்க்கத்திலேயே இடம்பெற்றது.
விநியோகங்கள் ஹெலிகொப்டர்கள் மூலமாகவே அனுப்பி வைக்கப்பட்டன. முகாம்களில் இருந்து படையினரை வெளியில் கொண்டு செல்வதும் முகாம்களுக்கு அவர்களை கொண்டு வருவதும் ஆகாய மார்க்கமாகவே இடம்பெற்றது. ஆகாயமார்க்க போக்குவரத்தின் மையநிலையமாக பலாலி விமானத்தளம் விளங்கியது.
படையினரும் பொலிசாரும் களத்தில் இயங்கமுடியாத நிலையில், பீரங்கித் தாக்குதல்களையும் ஹெலிகொப்டர்களில் இருந்து துப்பாக்கிப் பிரயோகங்களை செய்யவும் விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தவும் அரசு நிர்ப்பந்திக்கப்பட்டது. துயரமான ஒரு திருப்பமாக இலங்கை அரசு அந்நியர்கள் மீது தாக்குதல் நடத்துவதைப் போன்று அதன் சொந்த குடிமக்கள் மீது விமானக் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தத் தொடங்கியது.
விமானக் குண்டுவீச்சு தாக்குதல்கள், ஹெலிகொப்டர்கள் மூலமான துப்பாக்கிப் பிரயோகங்கள் மற்றும் ஷெல்வீச்களுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தின் அந்த பகுகுதிகள் பாதி விடுவிக்கப்பட்ட ஒரு நிலையில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.
யாழ்ப்பாண மக்கள் படையினரின் தேடுதல் நடவடிக்கைகள், சுற்றிவளைப்புகள், கைதுகள் மற்றும் தடுப்புக்காவல் ஆகியவை பற்றிய பீதியின்றி சுதந்திரமாக வாழ்ந்தனர். முகாம்களில் இருந்து படையினர் வெளியில் வருவதை விடுதலை புலிகள் தடுத்து வைத்திருந்ததனால் அந்த சுதந்திரம் அவர்களால் ஏற்படுத்தப்பட்டது என்று மக்கள் கருதினர்.
விடுதலை புலிகள் அவர்களது அந்த மகிழ்ச்சியான நாட்களில் மக்கள் மத்தியில் மானசீகமான ஆதரவையும் செல்வாக்கையும் அனுபவித்தனர். விடுதலை இயக்க போராளிகள் ஹீரோக்களாக நோக்கப்பட்டனர். அன்று கிட்டு யாழ்ப்பாண மக்களில் பலரினால் பிரமிப்புடனும் மதிப்புடனும் ஏன்பாசத்துடனும் நோக்கப்பட்டார். அவர் பேரளவில் செல்வாக்கு மிக்கவராக விளங்கினார்
இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே நம்பமுடியாதது நடந்தது. யாழ்ப்பாண நகரத்தின் மத்தியில் கிட்டுவை கொலை செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவரது வாகனத்தின் மீது குண்டு ஒன்று எறியப்பட்டதன் விளைவாக அவர் தனது ஒரு காலை இழந்தார். இந்த சம்பவத்தினால் யாழ்ப்பாண மக்கள் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாகினர். " தமிழ்ப் பெண்புலிகள், இலங்கையின் கொடூரமான உள்நாட்டுப் போரில் ஒரு சிறுவர் போராளியாக எனது கதை " ( Tamil Tigress, My story as a Child Soldier in Sri Lanka's Bloody Civil War) என்ற நூலை எழுதிய நிரோமி டி சொய்சா, கிட்டு மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டபோது தனது பாடசாலைத் தோழிகள் மத்தியில் காணப்பட்ட சோகத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். அது எவ்வாறு நடந்தது?
ஆன் சிந்தியா துரைராஜா
அந்த நாட்களில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் கிட்டு " பண்டைத் தமிழர் வாழ்வில் காதலும் வீரமும் பின்னிப் பிணைந்திருந்தன" என்று கூறியிருந்தார். யாழ்ப்பாணத்தின் முடிசூடா போர்மன்னனின் இதயத்தை காமன்கணை துளைத்ததை அறிந்த மககளுக்கு பெரிய வியப்பாகப் போய்விட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துவபீட மாணவியாக படிந்துக் கொண்டிருந்த ஆன் சிந்தியா துரைராஜா என்ற மாணவியை அப்போது காதலித்துக் கொண்டிருந்தார். கிட்டு ஒரு இந்து. சிந்தியா ஒரு கத்தோலிக்கர். ஆனால், காதலுக்கு கண் இருக்கவில்லை. அச்சுவேலியைச் சேர்ந்த சிந்தியாவின் குடும்பம் யாழ்நகரில் வசித்து வந்தது.
படையினருடனான சண்டைகளில் ஈடுபடாவிட்டால், வாரத்தில் குறிப்பிட்ட சில தினங்களில் கிட்டு தான் மணஞ்செய்து கொள்ளப்போகும் சிந்தியாவின் வீட்டுக்கு போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.1987 மார்ச் 30 கிட்டு தனது பச்சைநிற லான்சரை தானே ஒட்டிக்கொண்டு சிந்தியாவின் வீட்டுக்குப் போனார். அவருடன் அவரது மெய்க்காவலர் சாந்தாமணியும் நிக்சன் என்ற இன்னொரு போராளியும் கூடச் சென்றிருந்தனர். சாந்தாமணி கிட்டுவுக்கு பககத்தில் முன் ஆசனத்திலும் நிகசன் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்தனர்.
கொலை முயற்சி
யாழ்நகரில் 2 ஆம் குறுக்குத்தெருவில் உள்ள சிந்தியாவின் வீட்டுக்கு நெருக்கமாக கிட்டு தனது காரை நிறுத்தியபோது மாலையாகிவிட்டது. கிட்டு வீட்டுக்கு உள்ளே செல்லும்போது அவரது மெய்க்காவலர்கள் வெளியில் வாகனத்திற்குள் இருப்பது வழமையாகும். கிட்டு வாகனத்தின் கதவை திறந்தபோது படபடவென்று யாரோ ஓடிவருகின்ற கால் சத்தம் கேட்டது. தரித்துநின்ற வாகனத்தின் பின்புறமிருந்து ஓடிவந்த நபர் ஒருவர் பக்க ஜன்னல் வழியாக குண்டொன்றை வீசினார்.
காரின் கதவைத் திறந்த கிட்டு அவரை நோக்கி வீசப்பட்ட குண்டு காரின் உள்ளே வெடித்தபோது தனது வலதுகாலை தரையில் வைத்திருந்தார். காருக்குள் இருந்த இடதுகால் சிதைந்து போனது. முன் ஆசனத்தில் இருந்த சாந்தாமணியும் காயமடைந்தார். பின் ஆசனத்தில் இருந்த நிக்சன் காயப்படவில்லை.
காயமடைந்த கிட்டு வீதியின் வடிகாலுக்குள் வீழ்ந்தார்.அடுத்து நடந்தது நம்பமுடியாத அளவுக்கு துணிச்சலானதாகவும் உண்மையில் வீரசாகசமாகவும் இருந்தது. படுமோசமாக காரமடைந்த போதிலும், கிட்டு தனது மக்னம் 357 துப்பாக்கியை எடுத்து குண்டை எறிந்துவிட்டு தப்பியோடிய நபரை நோக்கி சரயாரியாக சுட்டார். ஆனால் அந்த நபர் அந்திமாலை இருளுக்குள் ஓடிமறைந்து விட்டார். துப்பாக்கி ரவை சுற்று முழுவதையும் முடித்த பிறகு மீண்டும் துப்பாக்கியை நிரப்புவதற்கு கிட்டுவால் முடியவில்லை. இரத்தம் வடிந்தோடிய நிலையில் நிலைகுலைந்த அவர் நினைவிழந்தார்.
உடனடியாகவே கிட்டு யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்கு விரையப்பட்டார். ஒரு கட்டத்தில் அவரின் சுவாசம் நின்றுவிட்டது. உள்ளக பயிற்சி மருத்துவ மாணவர் ஒருவரின் உயிர்காக்கும் முயற்சியானால் மீண்டும் கிட்டு சுவாசிக்கத் தொடங்கினார். கிட்டு உயிர்தப்பினார் என்றபோதிலும், அவரின் இடதுகாலை முழங்காலுக்கு மேல் ஒரு இடத்தில் துண்டிக்க வேண்டியதாயிற்று. காயமடைந்த சாந்தாமணிக்கும் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
முற்றிலும் எதிர்பாராத இந்த சம்பவத்தினால் விடுதலை புலிகள் குழப்பநிலைக்கு உள்ளாகியிருந்தனர். 2 ஆம் குறுக்குத் தெருவுக்கு நெருக்கமாக உள்ள வீதிகளையும் ஒழுங்கைகளையும் விடுதலை புலிகள் போக்குவரத்துக்கு தடைசெய்தனர். குண்டுத் தாக்குதலை நடத்திய நபர் அயலில் எங்காவது மறைந்திருக்கக்கூடும் என்று அவர்கள் சந்தேகித்தனர். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் 4 ஆம் குறுக்குத் தெருவில் இருந்த ' சற்றர்டே றிவியூ ' ஆசிரியபீட அலுவலகத்தில் பணியாற்றிய உதவி ஆசிரியர். தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர, ஏனையவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
சந்தேகமும் வதந்திகளும்
கிட்டுவை கொலை செய்ய முயற்சித்தவர் இராணுவம் நிலைகொண்டிருந்த யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இருந்து வந்தவர் என்று ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது. கோட்டையைச் சுற்றி விடுதலை புலிகளின் காவல் நிலைகள் இருந்ததால் அவ்வாறு எவராவது கோட்டையில் இருந்து வெளியே வந்து நடமாடியிருந்தால் போராளிகள் அதைக் கண்காணித்திருப்பர். அதனால் அந்த ஆரம்பக்கட்ட சந்தேகம் நிராகரிக்கப்பட்டது. ஆனால், கிட்டு மீதான தாக்குதலுக்கு இராணுவ வீரர் ஒருவரே பொறுப்பு என்று கூறி தேசிய பாதுகாப்பு அமைச்சு உரிமை கோரிய செய்திகள் ஊடகங்களில் வெளிவரச் செய்யப்படதை இதனால் தடுக்க முடியவில்லை.
கிட்டு மீது வீசப்பட்டது ஒரு கிரனேட் என்றும் முதலில் செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து குண்டின் சிதறல்களை ஆய்வுசெய்த விடுதலை புலிகள் அது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஒரு ' நாட்டுக்குண்டு' என்ற முடிவுக்கு வந்தனர். அதற்கு பிறகு சந்தேகம் ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ, புளொட் மீது திரும்பத்தொடங்கியது.
மாற்று இயக்கங்களுடனான விடுதலை புலிகளின் மோதல்களில் பெருமளவுக்கு இழப்புகளைச் சந்தித்தவை இந்த மூன்று இயக்கங்களுமே ஆகும். கிட்டு மீதான கொலை முயற்சிக்கு அரசு உதவியும் ஒத்தாசையும் செய்திருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்பட்டது. இந்த கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டு சந்தேகத்துக்கு உரியவர்கள் பலரை விடுதலை புலிகள் தடுத்துவைத்த போதிலும், உருப்படியாக எதுவும் ஒருபோதும் நிரூபிக்கப்படவில்லை.
கிட்டு மீதான கொலை முயற்சி ஒரு உள்வீட்டு வேலை என்று குழப்பத்தைத் தந்த இன்னொரு வதந்தியும் உலவியது. விடுதலை புலிகளின் அப்போதைய பிரதி தலைவர் மாத்தையா என்ற மகேந்திரராஜா இதைச் செய்வித்திருப்பார் என்பது ஒரு கருத்து. இது விடயத்தில் மாத்தையாவின் விசுவாசியும் விடுதலை புலிகள் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளருமான விசு என்ற அரவிந்தராஜாவின் பெயரும் இது விடயத்தில் அடிபட்டது.
இன்னொரு வதந்தி மிகவும் பாரதூரமானது. மாத்தையா ஊடாக அல்லது புறம்பாக விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இதைச் செய்வித்திருக்கலாம் என்பதே அது. கிட்டுவின் செல்வாக்கு மீதான பொறாமையை இதற்கு காரணமாகவும் கூறப்பட்டது. எவ்வாறிருந்தாலும், இவை வெறுமனே ஊகங்களே. ஒருபோதும் நிரூபிக்கப்படவில்லை.
பின்னரான வருடங்களில் கிட்டு வெளிநாட்டில் இருந்தபோது அவருடன் நீண்ட தொலைபேசி உரையாடல்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார் போன்று தோன்றியது. என்னுடன் பல விடயங்களை வெளிப்படையாக அவர் பேசினார். குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஒரு தடவை நான் அவரிடம் கேட்டேன். அது " இனந்தெரியாதது " என்று பதிலளித்த அவர் சீறீசபாரத்தினத்தின் விசுவாசி ஒருவர் பழிவாங்கும் வேட்கையில் " தன்னந்தனியனாக" செயற்பட்டிருக்கக்கூடும் என்று நினைப்பதாக சொன்னார். (ரெலா தலைவர் சிறீசபாரத்தினத்தை கிட்டுவே நேரடியாக சுட்டுக்கொன்றார்) விடுதலை புலிகளின் உள்வீட்டு வேலைக்கான சாத்தியம் குறித்து நான் கேட்டபோது மிகவும் ஆத்திரமடைந்த கிட்டு " இப்படி ஒருநாளும் கதையாதையுங்கோ அண்ணன்" என்று கடிந்துகொண்டார்.
அப்பாவிகளை படுகொலை செய்த அருணா
விடுதலை புலிகளின் மூத்த தலைவரான அருணா ஈவிரக்கமின்ற அப்பாவிகள் பலரை படுகொலை செய்த சம்பவம் கிட்டு மீதான கொலை முயற்சியின் மிகவும் பாரதூரமான, எதிர்மறையான விளைவாக அமைந்தது. யாழ்ப்பாணத்தில் கல்வியங்காட்டைச் சேர்ந்த அருணா என்ற செல்லச்சாமி செல்வகுமார் விடுதலை புலிகளின் மட்டக்களப்பு தளபதியாக பணியாற்றிய ஒரு மூத்த போராளி.
அருணா தமிழ்நாடு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது படகை இலங்கை கடற்படை தாக்கி அவரையும் வேறு போராளிகளையும் கைதுசெய்தது. அருணா கெட்டத்தனமாக தனது அடையாளத்தை மறைத்து விடுதலை புலிகளினால் பணம் கொடுத்து அமர்த்தப்பட்ட குஞ்சு குமார் என்ற படகோட்டியாக பாசாங்கு செய்தார். அவர் யாழ்ப்பாணக் கோட்டைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
கிட்டு தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியுடன் பேச்சுவார்த்தை நடத்தி கைதிகள் பரிமாற்ற ஏற்பாடு ஒன்றின் மூலமாக அருணாவின் விடுதலையை பெற்றுக்கொண்டார். இந்த கைதிகள் பரிமாற்றத்தின் விபரங்கள் கடந்த வாரம் வெளியான இந்த கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் இருக்கின்றன.
கிட்டுவும் அருணாவும் இயக்கத்தில் சகபாடி தோழர்களாக இருந்ததற்கு புறம்பாக மிகவும் நெருங்கிய நண்பர்களும் கூட. இது தவிர, கைதிகள் பரிமாற்றத்தின் மூலமாக தனக்கு விடுதலையை பெற்றுத் தந்ததற்காக அருணா கிட்டுவுக்கு மிகுந்த நனறியுடையவராகவும் இருந்தார். அதனால் கிட்டு மீதான தாக்குதல் பற்றி கேள்விப்பட்டதும் அவர் மிகவும் வெறித்தனமாக நடந்துகொண்டார். அவர் தன்னிலை மறந்து செயற்பட்டார்.
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அண்மையாக ஸ்ரீனிவாசன் வீதியில் (லவ் லேன்) ஒரு வீட்டில் சுமார் ஐம்பது பேரை விடுதலை புலிகள் சிறை வைத்திருந்தனர். அந்த கைதிகளில் ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ மற்றும் புளொட் இயக்கங்களின் உறுப்பினர்களும் சில வர்த்தகர்களும் அடங்கியிருந்தனர். அவர்கள் விடுதலை புலிகளின் புலனாய்வுப் பிரிவினராலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அருணா அந்த வீட்டுக்குச் சென்று அங்கு காவல் செய்துகொண்டிருந்த விடுதலை புலிகளுக்கு உத்தரவிட்டு சகல கைதகளையும் ஒரேயிடத்தில் கூடவைத்தார். பிறகு விடுதலை புலிகள் போராளிகளிடமிருந்து இயந்திரத் துப்பாக்கிகளை வாங்கி நிராயுதபாணிகளான கைதிகளை சுட்டுத் தள்ளினார்.
வெறிபிடித்த அருணாவினால் நாற்பதுக்கும் அதிகமானவர்கள் ஈவிரக்கமின்றி கொலை செய்யப்பட்டனர். பலியானவர்களில் எவருமே கிட்டு மீதான தாக்குதலில் எந்தவகையிலும் சம்பந்தமில்லாதவர்கள். அது உண்மையிலேயே ஒரு அப்பாவிகள் படுகொலையேயாகும். ஆனால், தற்செயலாக இந்த சம்பவமே தவறுதலாக " கந்தன் கருணை" படுகொலை என்று குறிப்பிடப்படுகிறது.
இந்த படுகொலைகள் தொடர்பாக அருணா விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனால் தடுத்துவைக்கப்பட்டார். இயக்கத்தில் அவரது உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டது வேறு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. இந்திய இராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் 1987 அக்டோபரில் மோதல் மூண்டபோது அருணா விடுதலை செய்யப்பட்ட போதிலும், ஆயுதங்களை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. சில வாரங்கள் கழித்து அருணா யாழ்ப்பாணம் செம்பத்திரிசியார் கல்லூரிக்கு அண்மையாக ரேராந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியப் படையினரால் கொல்லப்பட்டார்.
அருணா செய்த படுகொலையை நியாயப்படுத்த விடுதலை புலிகள் ஒரு கட்டுக்கதையை வெளியில் விட்டனர். மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த சில சமூகவிரோத பிரகிருதிகள் காவலுக்கு இருந்த போராளிகள் இருவரை மடக்கிப்பிடித்துக் கொலைசெய்தனர். போராளிகளின் ஆயுதங்களுடன் தப்பியோடுவதற்கு அந்த பிரகிருதிகள் முயற்சித்தனர். அங்கே துப்பாக்கிச் சண்டை மூண்டது.அப்போது சில கைதிகள் கொல்லப்பட்டு விட்டனர் என்று விடுதலை புலிகள் கூறினர். இந்தக் கதையை எவரும் பெரிதாக நம்பவில்லை. அந்த கொடூரமான படுகொலை பரவராக கண்டனத்துக்கு உள்ளானது.
கிட்டுவின் மருத்துவ சிகிச்சை
அதேவேளை, அவயவம் துண்டிக்கப்பட்ட பிறகு கிட்டு ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெறுவதற்கு பதிலாக விடுதலை புலிகளினால் பாதுகாப்பான வீடு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார். கிட்டு தங்கியிருந்து சிகிச்சை பெறுவதன் காரணமாக யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி மீது பாதுகாப்பு படைகள் விமானக்குண்டுவீச்சு தாக்குதலை நடத்தக்கூடும் என்று விடுதலை புலிகள் அஞ்சினர். கிட்டுவை கவனிப்பதற்காக பல மருத்துவர்கள் வெவ்வேறு இரகசிய இடங்களுக்கு சென்று வந்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள பிலிப்ஸ் நேர்ஸிங் ஹோமிலும் இடைக்கிடை கிட்டு மருத்துவப் பராமரிப்பைப் பெற்றார்.
கிட்டுவை கவனிக்கும் பொறுப்பை யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகளின் அன்றைய பேச்சாளராக இருந்த ரஹீம் என்ற சிறீக்குமார் கனகரத்தினம் ஏற்றுக் கொண்டார். ரஹீம் கிட்டுவுடன் இரவுபகலாக தங்கியிருந்தார். கிடடுவின் மருத்துவப் பராமரிப்பை ஒருங்கிணைக்கும் பணியுடன் அவரின் பாதுகாப்புக்கும் ரஹீம் பொறுப்பாக இருந்தார். கிட்டுவின் தனிப்பட்ட உதவியாளர்கவும் அவர் செயற்பட்டார். கிட்டுவுக்கு பதிலாக பதில் தளபதியாக விடுதலை புலிகளின் மன்னார் தளபதி ராதா யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஊன்றுகோலுடன் நடந்தார்
கிட்டு மனத்துணிச்சலும் தைரியமும் கொண்டவர். விரைவாக குணமடைந்த அவர் கால் ஒன்று துண்டிக்கப்பட்டதன் காரணமாக சாரம் ஒன்றை அணிந்து கொண்டு ஊன்றுகோலுடன் நடமாடித் திரியத் தொடங்கினார். இயக்கத்திற்குள் அவரது மதிப்பும் மக்கள் மத்தியிலான செல்வாக்கும் மாறாமல் அப்படியே இருந்தன. விடுதலை புலிகள் 1987 மேதினத்தை கொண்டாடியபோது அந்த அரங்கில் கிட்டு வாகனம் ஒன்றில் இருந்தவாறு கூட்டத்தினருக்கு உரையாற்றினார்.
குடாநாட்டின் வடமராட்சி பிரதேசத்தை மீளக் கைப்பற்றுவதற்கு 1987 மே 26/ 27 திகதிகளில் பாதுகாப்பு படைகள் " ஒப்பரேசன் லிபறேசன்" இராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது சண்டையில் ஈடுபட முடியாதவராக கிட்டு இருந்தார். ஆனால் அவர் முன்னரங்கத்தில் நின்று போராடிய தனது பையன்களுடன் வானொலி மூலமாக தொடர்புகொண்டு உற்சாகப்படுத்தி ஆலோசனைகளையும் வழங்கினார்.
அரசியலில் தீவிர செயற்பாடு
ஒரு காலை இழந்த போதிலும் கூட, கிட்டு விடுதலை புலிகள் இயக்கத்திற்குள் அரசியல் ரீதியில் மிகவும் தீவிரமாக செயற்பட்டார். இந்தியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் மெக்சிக்கோ போன்ற பல நாடுகளுக்கு அவர் பயணம் செய்தார். சமாதான முயற்சிகள் பலவற்றிலும் கூட அவர் ஈடுபட்டார். இந்த விடயங்களை இந்த கட்டுரையின் நான்காவதும் இறுதியானதுமான பாகத்தில் அடுத்தவாரம் பார்ப்போம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM