மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது இலங்கை

21 Jan, 2025 | 12:04 PM
image

(நெவில் அன்தனி)

கோலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஏ குழுவுக்கான தனது இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 81 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இலங்கை, இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டது.

மலேசியாவுக்கு எதிரான போட்டியில் போன்றே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியிலும் சகலதுறைகளிலும் மிகவும் பொறுப்புணர்வுடன் விளையாடிய இலங்கை மிக இலகுவாக வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த 19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது.

இந்த வருட 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இதுவரை அணி ஒன்றினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

சஞ்சனா காவிந்தி, சுமுது நிசன்சலா ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 39 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

சுமுது நிசன்சலா 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் அணித் தலைவி மனுதி நாணயக்காரவுடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 48 ஓட்டங்களை சஞ்சனா காவிந்தி பகிர்ந்து  அணியை நல்ல நிலையில் இட்டார்.

மிகவும் நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடிய சஞ்சனா காவிந்தி 6 பவுண்டறிகளுடன் 38 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைத் தொடர்ந்து ஹிருணி குமாரி ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.

எனினும் மனுதி நாணயக்காரவும் தஹாமி சனெத்மாவும் 4ஆவது விக்கெட்டில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகம் ஊட்டினர்.

மனுதி நாணயக்கார 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 37 ஓட்டங்களைக் குவித்தார்.

மொத்த எண்ணிக்கை 137 ஓட்டங்களாக இருந்தபோது   மனுதி நாணயக்கார,   ரஷ்மிக்கா செவ்வந்தி (0)  ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தனர்.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தஹாமி சனெத்மா ஆட்டம் இழக்காமல் 31  ஓட்டங்களைப்   பெற்றதுடன் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் ஷஷினி கிம்ஹானியுடன் 29 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டார். கிம்ஹானி 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் செலினா ரொஸ் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 167 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 19.4ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 85  ஓட்டங்களைப்  பெற்று தோல்வி அடைந்தது.

இலங்கை பந்துவீச்சாளர்கள் மிகத் திறமையாக பந்துவீசியதால் மேற்கிந்தியத் தீவுகள் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

அணித் தலைவி சமாரா ராம்நாத் (24 ஓட்டங்கள்), ஜஹ்ஸாரா க்ளெக்ஸ்டன் (15), கெனிக்கா கசார் (12), அம்ரிதா ராம்தஹால் (11) ஆகிய நால்வரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் சமுதி ப்ரபோதா 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லிமன்சா திலக்கரட்ன 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசேனி தலகுனே 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ரமுதி மெத்சரா, ஷஷினி கிம்ஹானி ஆகியோர் தலா ஓரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: சமுதி ப்ரபோதா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20