அதிகாரம் படைத்தவர்களுடன் எந்தவிதமான சமரசத்திலும் ஈடுபடாமல் இறுதிவரை போராடிய விக்டர் ஐவன்

Published By: Digital Desk 7

21 Jan, 2025 | 08:45 AM
image

சட்டத்தரணி கே.எஸ். இரட்ணவேல் 

இலங்கையின் புகழ்பூத்த சிரேஷ்ட புலனாய்வு ஊடகவியலாளரும் "ராவய" பத்திரிகையின் ஆசிரியருமான விக்டர் ஐவன் கடந்த ஞாயிறன்று  (19. 01. 2025)  அன்று பிற்பகல் காலமானார்.

எந்தவிடயத்திலும் தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்காத விக்டர் ஐவன், அடுத்தடுத்து வந்த  அரசாங்கங்களுக்கு மட்டுமின்றி,  பழைமைப்போக்கில் திளைத்திருந்த நீதித்துறைக்கும் பிரதம நீதியரசர் - சட்டமா அதிபராகப் பதவி வகித்த சரத் சில்வா போன்றோருக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார்.

சரத் சில்வாவின் பதவிக்காலம் நீதித்துறையின் இருள் படர்ந்த சகாப்தமாயிருந்த போதிலும்,  சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும்  சிரேஷ்ட சட்டத்தரணிகளும்  அதிகார வர்க்கத்துக்கு அடிபணியும் நிலையிலேயே இருந்தார்கள். 

ஜனாதிபதி சட்டத்தரணிகளான  டெஸ்மண்ட் பெர்னாண்டோ, டி.டபிள்யூ. அபேயகோன்  போன்ற  வழக்கறிஞர்கள் இதற்கு விதிவிலக்காக சட்டத்துறையின் சுயாதீனத்துக்கு குரல் கொடுத்திருந்தார்கள். இச்சந்தர்ப்பத்தில நீதித்துறையைத் தட்டிக் கேட்கும் வண்ணம் பல நூல்களை விக்டர் ஐவன் பிரசுரம் செய்திருந்தார். இவரது துணிகரமான கருத்துகளுக்கு ராவய பப்ளிகேஷன்ஸ் பெரிதும்  துணை புரிந்தது. 

நீதித்துறையின் பல பாரிய குறைபாடுகளை  தகுந்த ஆதாரங்களுடன்  விக்டர் ஐவன் பகிரங்கமாக  முன்வைத்த போதிலும், அக்காலத்து  நீதிக்கட்டமைப்பு எதுவித நடவடிக்கையும் எடுக்காதிருந்தது துரதிர்ஷ்டமே.  

2002ம் ஆண்டளவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த போர்நிறுத்த உடன்படிக்கைக்கு   ஐவன் தனது முழு ஆதரவினை நல்கியிருந்ததுடன் தனது பத்திரிகை மூலமாக பிரசாரத்திலும் ஈடுபட்டிருந்தார். 

தன் வாழ்நாள் முழுக்க ஊடக சுதந்திரத்திற்குப் பாடுபட்டிருந்த விக்டருக்கு எதிராக பன்னிரண்டு  குற்றவியல் அவதூறு வழக்குகள் (Criminal Defamation)  வழக்குகளை  அரசாங்கம் தாக்கல் செய்தது.

அந்த வழக்குகளை துணிவுடன் எதிர்கொண்டு வெற்றியடைந்தது மட்டுமின்றி,  பொதுமக்கள் ஆதரவினைத் திரட்டி ஐவன்  குற்றவியல் சட்டத்தின் 480 ம் பிரிவான குற்றவியல் அவதூற்றினை முற்றும் முழுவதுமாக  சட்டப் புத்தகத்திலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு மிகப்பெரிய வெற்றியும் கண்டார்.

அது சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க, சண்டே ரைம்ஸ் ஆசிரியர்   சிங்ஹ ரட்ணதுங்க,  தராக்கி சிவராம் போன்ற  ஊடகவியலாளர்கள் பிரபல்யம் பெற்றிருந்த பொற்காலம்.

ஊடகவியலாளர்களுக்கு எதிராக அரச இயந்திரம் எடுக்கும் இன்னொரு ஆயுதம் பாராளுமன்ற சிறப்புரிமையாகும் (parliamentary previlege). இங்கும் விக்டருக்கு எதிராக ஐந்து விசாரணைகளை அரசாங்கம்  முடுக்கி விட்டிருந்தது. அதிலிருந்தும்  சாம்பலிலிருந்து மீண்டெழுந்த பீனிக்ஸ்  பறவை போன்று மீண்டெழுந்தார் ஐவன். 

ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) போராளியாக ஆரம்பித்த விக்டர் ஐவன், பல வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து, ஊடகப் போராளியாக மறுபிறவி எடுத்து, மக்களைச் சிந்திக்கவும், அச்சத்தைப் போக்கவும்  போராடவும்  தளம் அமைத்துக் கொடுத்தார்.  

யாவற்றுக்கும் மேலாக, பொதுநலன்களைப் பாதிக்கும் சட்டங்களை துணிகரமாக எதிர்ப்பது எவ்வாறு என்று சட்டத்துறையினருக்கே பாடம்புகட்டியிருந்தார் விக்டர் ஐவன். இவ்வாறு  எண்ணற்ற அக்கினிப் பரீட்சைகளையும் தடைகளையும் எரிமலைகளையும் எதிர் கொண்ட விக்டர் ஐவன் கொள்கைப்பற்றுடன் வாழ்ந்து, அதிகாரம் படைத்தவர்களுடன் எவ்வித சமரசத்திலும்  ஈடுபடாமல் இறுதிவரை போராடிய  ஓர் மாபெரும் சக்தியாகத் தன்னை அடையாளம் காட்டிய மகத்தான மனிதர். 

விக்டர் ஐவனின் நினைவுகள் சுதந்திர உணர்வுகள் உள்ள மக்கள் அனைவர் மனதிலும் நீக்கமற நிலைத்து நிற்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right