வாரிசு அரசியலை பகடியாக பேசும் 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்'

Published By: Digital Desk 7

20 Jan, 2025 | 05:11 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' குழந்தைகள் முன்னேற்ற கழகம் ' எனும் திரைப்படம் - பாடசாலையில் பயிலும் மாணவர்களின் பார்வையில் அரசியல் குறித்த விடயங்களை விவரிப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மறைந்த இயக்குநர் என். சங்கர் தயாள் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'குழந்தைகள் முன்னேற்ற கழகம் ' எனும் திரைப்படத்தில் யோகி பாபு , செந்தில் , 'பருத்திவீரன்' சரவணன், சுப்பு பஞ்சு , லிஸி அண்டனி,  பிராங்ஸ்டார் ராகுல் , இயக்குநர் மூர்த்தி , சித்ரா லட்சுமணன், கும்கி அஸ்வின், அஸ்மிதா சிங் , சோனியா, வையாபுரி ஆகிய நட்சத்திர பட்டாளங்களுடன் குழந்தை நட்சத்திரங்களான இமயவர்மன் ,  அத்வைத் , ஹரிகா பட்டேடா , மாஸ்டர் பவாஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஜெ. லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'சாதக பறவைகள்' சங்கர் இசையமைத்திருக்கிறார் . பொலிட்டிக்கல் கொமடி ஜேனரிலான இந்த திரைப்படத்தை மீனாட்சி அம்மன் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்குமார் சம்பந்தம் மற்றும் இயக்குநர் சங்கர் தயாள் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 24 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  இந்த முன்னோட்டத்தில் வாரிசு அரசியல் குறித்து பகடித்தனமான நகைச்சுவை காட்சிகள் இடம் பிடித்திருப்பதால் பார்வையாளர்களின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

இந்நிலையில் படத்தை பற்றி படக்குழுவினர் பேசுகையில், '' பாடசாலையில் பயிலும் மாணவரிடம் ஆசிரியர், 'எதிர்காலத்தில் நீ என்னவாக ஆசைப்படுகிறாய்?' என கேள்வி கேட்க, அதற்கு அந்த மாணவன், 'அரசியல்வாதியாக ஆசைப்படுகிறேன்' என பதிலளிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் தான் படத்தின் மைய புள்ளி . பாடசாலையில் பயிலும் மாணவர்களின் கோணத்தில் தற்போதைய அரசியல் அலசப்பட்டிருக்கிறது. இது அனைத்து தரப்பு ரசிகர்களும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது'' என்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right