சிவ பக்தரின் புராண சரித்திரத்தை பேசும் 'கண்ணப்பா'

Published By: Digital Desk 7

20 Jan, 2025 | 04:48 PM
image

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் நடிகர் விஷ்ணு மஞ்சு கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' கண்ணப்பா' எனும் திரைப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகி வரும் ' கண்ணப்பா ' எனும் திரைப்படத்தில் விஷ்ணு மஞ்சு ,மோகன் பாபு , ஆர். சரத்குமார் , மது,  கருணாஸ் , யோகி பாபு,  ஐஸ்வர்யா பாஸ்கரன்,  ப்ரீத்தி முகுந்தன்,  அச்யுத் குமார் , ராகுல் ராமகிருஷ்ணா,  சாய்குமார்,  சம்பத் ராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஷெல்டன் சாவ் மற்றும் சித்தார்த் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்டீபன் டெவாசி இசையமைத்திருக்கிறார். இந்து மத புராணங்களின் அடிப்படையில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ வி ஏ என்டர்டெய்ன்மென்ட் மற்றும் 24 பிரேம்ஸ் ஃபேக்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து இருக்கிறது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் படத்தின் நாயகனான விஷ்ணு மஞ்சு , சரத்குமார், இயக்குநர் முகேஷ் குமார் சிங் , ஒளிப்பதிவாளர் சித்தார்த் , நாயகி ப்ரீத்தி முகுந்தன்,  படத்தொகுப்பாளர் ஆண்டனி , நடன இயக்குநர் பிரபு தேவா ஆகியோர் பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் நாயகன் விஷ்ணு மஞ்சு பேசுகையில், '' கண்ணப்ப நாயனாரின் கதையைத்தான் நாங்கள் 'கண்ணப்பா' என்ற பெயரில் இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் உருவாக்கி இருக்கிறோம். இந்த திரைப்படத்தில் அக்ஷய் குமார், பிரபாஸ், மோகன்லால்,  சரத்குமார் என பிரபல நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.

அப்பா மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக இவர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தில் தங்களுடைய ஒத்துழைப்பை முழுமையாக வழங்கினார்கள். அதற்காக அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கண்ணப்ப நாயனாரை பற்றிய திரைப்படம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளியாகி இருக்கிறது. அதன் பிறகு அந்த சிவனடியாரின் சரித்திரத்தை இன்றைய தலைமுறையினரும் ரசிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறோம். இதற்காக ஒளிப்பதிவாளர் - கலை இயக்குநர்-  தயாரிப்பு  வடிவமைப்பாளர் - வி எப் எக்ஸ் குழுவினர் - என பலரும் ஒன்றிணைந்து கடுமையாக உழைத்திருக்கிறோம்.

இந்தப் படத்தில் படத்தின் படப்பிடிப்பிற்காக கண்ணப்ப நாயனார் வாழ்ந்த கால கட்டத்தை திரையில் செதுக்கிட வேண்டும் என்பதற்காக அதற்குரிய தளத்தை உலகம் முழுவதும் தேடினோம். இறுதியில் நியூசிலாந்து நாட்டில் கிடைத்தது. அதற்காக ஒட்டுமொத்த படக் குழுவினரும் அங்கு சென்று படப்பிடிப்பை நடத்தினோம்.‌

கண்ணப்ப நாயனாரை பற்றிய குறிப்பு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும் பல குறிப்புகள் உள்ளது. அதனை ஆதாரமாகவும் கொண்டுதான் இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.‌

கண்ணப்ப நாயனாரை இந்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், அதனூடாக இந்த திரைப்படத்தை அவர்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவும் அவரைப் பற்றிய காமிக்ஸ் புத்தகத்தை நாங்கள் வெளியிட்டோம். இதற்கு கிடைத்த ஆதரவும், வரவேற்பும் எங்களை மேலும் உற்சாகப்படுத்தியது.

இந்த திரைப்படத்தில் இடம் பெறும் மூன்று பாடல்களுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக உச்சகட்ட காட்சியில் உணர்வுபூர்வமான பாடலுக்கு அவர் நடனம் அமைத்தது ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெறும் என்று உறுதியாக நம்புகிறேன். கண்ணப்பா ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right