இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டுமானால் அதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு என்பது அவசியமானதாகும். இனப்பிரச்சினை விவகாரத்தில் அன்று முதல் இன்றுவரை இந்தியா ஏதோ ஒருவகையில் அக்கறை காண்பித்து வருகின்றது.
அன்னை இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா தீவிர ஈடுபாடு காட்டி வந்தது. அவரது ஆட்சிக்காலத்தில் தமிழ் போராளிக்குழுக்களுக்கு பல்வேறு வகையிலும் இந்தியா ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தது. ஆயுதப்பயிற்சி உட்பட பல்வேறு வழிகளில் தமிழ் போராளிக்குழுக்களுக்கு இந்தியா ஆதரவை வழங்கியிருந்தது.
இன நெருக்கடி தீவிரம் பெற்ற நேரத்தில் அதற்கான தீர்வைக் காண்பதற்கு இந்தியா பல வழிகளிலும் முயற்சித்திருந்தது. திம்பு பேச்சுவார்த்தை, உட்பட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டிருந்தது. அதன் ஒரு படியாகவே 1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 13ஆவது திருத்த சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. இதனடிப்படையிலேயே மாகாணசபை முறைமை இலங்கையில் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனாலும் அந்த வேளையில் 13ஆவது திருத்த சட்டத்தின் மூலமான தீர்வினை ஏற்றுக்கொள்வதற்கு பிரதான தமிழ் கட்சிகள் கூட இணக்கம் தெரிவிக்கவில்லை.
அன்று தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர்கள் ஒன்றிணைந்து இந்த தீர்வுக்கு எதிரான தமது நிலைப்பாட்டை கடிதம் மூலம் இந்திய மத்திய அரசுக்கு அறிவித்திருந்தனர். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கில் இந்திய அமைதிப்படை நிலை கொண்டமையும் பின்னர் விடுதலைப்புலிகளுடன் அவர்கள் யுத்தத்தில் ஈடுபட்டமையும் வரலாறாக காணப்படுகின்றது.
இவ்வாறு இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியா தொடர்ச்சியான தலையீடுகளை செய்தே வந்திருக்கின்றது. ஆனாலும் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையினை அடுத்து இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு சற்று மாறுபட்டதாக அமைந்திருந்தது.
இறுதி யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த யுத்தத்திலும் இந்தியா பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்ததாக அன்றைய அரசாங்கத்தரப்பினர் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தனர். அன்றைய அமைச்சரான பஷில் ராஜபக் ஷ இராணுவ தளபதியான சரத் பொன்சேகா, பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக் ஷ , ஆகியோர் இந்தியாவின் ஒத்துழைப்பு தொடர்பில் பகிரங்கமாகவே நன்றிகளை தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஒத்துழைத்த இந்தியாவானது பேரிழப்புக்களை சந்தித்த தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற வலியுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்தன. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அன்றைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இந்த பேச்சுவார்த்தையின்போது 13ஆவது திருத்த சட்டத்துக்கு அப்பால் சென்று அரசியல்தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று மஹிந்த ராஜபக் ஷ அறிவித்திருந்தார். இருவரது பேச்சுவார்த்தையின் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆனாலும் இந்தியாவுக்கு அளித்த அரசியல் தீர்வுக்கான வாக்குறுதிகளை அன்றைய மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் நிறைவேற்றியிருக்கவில்லை.
ஆனாலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இந்திய அரசாங்கத்துடன் தொடர்புகளை வைத்திருந்து அரசியல் தீர்வுக்கான அழுத்தங்களை வழங்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்திருந்தனர்.
இத்தகைய அழுத்தம் காரணமாக மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்க குழுவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குமிடையில் 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் 16 சுற்றுப்பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. பேச்சுக்களில் பல்வேறு இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டிருந்தன. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையிலிருந்த அரசாங்கக் குழுவினர் தன்னிச்சையாக வெளியேறியிருந்தனர்.
யுத்த வெற்றியின் திழைப்பில் மூழ்கியிருந்த அன்றைய அரசாங்கமானது தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பில் பின்னர் கருத்து தெரிவித்திருந்த அன்றைய அமைச்சர் பஷில் ராஜபக் ஷ தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் அரசாங்கம் பேசவில்லை என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியே பேச்சுநடத்தியதாகவும் வியாக்கியானம் தெரிவித்திருந்தார்.
இத்தகைய நிலையில் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அவரை 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி புதுடில்லியில் சந்தித்திருக்கின்றனர். இரா. சம்பந்தன் தலைமையிலான இந்தக்குழுவில் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் , செல்வம் அடைக்கலநாதன், ஏம்.ஏ. சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, எஸ். செல்வராஜா ஆகியோர் சந்தித்து பேசியிருந்தனர்.
இதன்போதும் 13ஆவது திருத்த சட்டத்தின் அமுலாக்கம் தொடர்பிலும் அதிகாரப்பகிர்வுகளுடான தீர்வின் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. இலங்கை அரசாங்கத்துக்கு இதற்கான அழுத்தங்களை இந்தியா வழங்கவேண்டியதன் அவசியமும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் எடுத்துக்கூறப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பை அடுத்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் இந்தக்குழுவினர் சந்தித்திருந்தனர். இவ்வாறு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இந்திய தலைவர்களை சந்தித்து ஆதரவை கோரும் செயற்பாடு அன்று இடம்பெற்றிருந்தது.
தமிழ் தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பாக இந்த நடவடிக்கையை அந்தவேளை மேற்கொண்டிருந்தன. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பை பெறவேண்டுமாயின் இத்தகைய செயற்பாடுகள் தொடரவேண்டியது அவசியமாக உள்ளது.
ஆனால் அதன் பின்னரான காலப்பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது சிதைவடைந்து தமிழ் தேசிய கட்சிகளுக்குள் முரண்பாடுகள் வலுவடைந்தன. இதனால் பல்வே பிரிவுகளாக தமிழ் தேசியக்கூட்டமைப்பானது பிளவுபட்டது.
இந்திய மத்திய அரசாங்கமும் பூகோள அரசியல் நிலவரங்களை கருத்தில் கொண்டு இலங்கை அரசாங்கத்துடனும் நல்லுறவை பேணும் தன்மையும் உருவானது. இதனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்தில் இந்தியாவானது மாறுபட்ட கோணங்களில் சிந்திக்கும் நிலைமையும் ஏற்பட்டிருந்தது.
உண்மையிலேயே இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் அக்கறையை ஒத்துழைப்பை பெறுவதற்கான சூழ்நிலையை தமிழ் தேசியக்கட்சிகளின் தலைமைகள் உருவாக்கவேண்டியது அவசியமாகும். அதற்கு தமிழ் தேசிய கட்சிகளுக்குள் ஒற்றுமை ஒருமைப்பாடு என்பவை அவசியமாகவுள்ளன.
நல்லாட்சி அரசாங்கத்துக்கு பின்னர் கோட்டாபய ராஜபக் ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற நிலையில் 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று கோரி, தமிழ் தேசியக்கட்சிகளின் தலைவர் ஒன்றிணைந்து கடிதமொன்றை இந்தியப் பிரதமருக்கு அனுப்பியிருந்தனர். 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தக்கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இதற்கு முன்னர் நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்களை சந்திப்பதற்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி நேரம் ஒதுக்கியிருந்தார். ஆனால், அந்த வேளையில் அவருடனான சந்திப்பை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தவிர்த்திருந்ததாகவும் அன்று குற்றச்சாட்டு எழுந்திருந்தது. நல்லதொரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை சம்பந்தன் தவறவிட்டுவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
தற்போது இலங்கை விவகாரத்தில் இந்திய எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை பெறுவதற்கு திராவிட முன்னேற்றக்கழகத்தின் பாராளுமன்ற குழுத்தலைவர் கனிமொழியூடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் கருத்து தெரிவித்திருக்கின்றார்.
கடந்தவாரம் சென்னையில் இடம்பெற்ற அயலக தமிழர் மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த அவரும், சாணக்கியன் எம்.பி.யும் கனிமொழியை சந்தித்து பேசியிருந்தனர். இதனைத் தொடர்ந்தே தி.மு.க. எம்.பிக்களையும் எதிரணி எம்.பி.க்களையும் சந்தித்து இலங்கை விவகாரத்தில் ஒத்துழைப்பை கோரவுள்ளதாக சுமந்திரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
உண்மையிலேயே இத்தகைய விடயத்தில் அக்கறை காண்பிப்பது நன்றாகும். ஆனாலும் தற்போது இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமானால் அது இந்திய மத்திய அரசாங்கத்தினால்தான் முடியும். எனவே, மத்திய அரசாங்கத் தரப்பினர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி அழுத்தங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதே தற்போதைய நிலையில் சிறந்ததாக அமையம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM