இலங்கை தமிழ் அரசு கட்சி இறுதியாக கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் நிபுணர் குழுவுக்கு சமர்ப்பித்த அரசியலமைப்பு வரைவினை அடிப்படையாகக் கொண்டு மேலதிக உள்ளடக்கங்களை ஆராய்வதற்காக கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது, கட்சி மட்டத்திலும் துறைசார்ந்த நிபுணர்கள் மட்டத்திலும் ஆராய்ந்து மேம்பட்ட வரைவினை இறுதி செய்ததன் பின்னர் அடுத்தகட்டமாக தமிழ் தேசியப் பரப்பில் உள்ள ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தமிழ் அரசு கட்சி தயாராகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (18) திருகோணமலையில் காலை 10 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அறிவித்தார். அவர் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது,
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில் அரசாங்கம் ஏலவே தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை இரத்துச் செய்து புதிதாக வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்கின்ற சட்டமூலத்தினை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
இவ்வாறான நிலையில் இலங்கை தமிழ் அரசு கட்சி போட்டியிடவுள்ள வேட்புமனுக்களை எவ்வாறு தாக்கல் செய்வது என்பது குறித்து முக்கியமாக கலந்துரையாடினோம். அதன்போது ஏற்கனவே எமது கட்சியில் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக எமது கட்சியில் வேட்பாளர்களாக களமிறங்கியவர்கள் தேர்தல் வேலைகளை ஆரம்பித்து பரப்புரைகளை செய்ய ஆரம்பித்திருந்தார்கள்.
அரச விடுமுறை எடுக்க வேண்டியவர்கள் விடுமுறைகளை எடுத்திருந்தார்கள். புதிதாக வேலைக்கு இணைய வேண்டியிருந்தவர்கள் வேட்பாளர்களாக இருந்தமையால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தது. இதனால் அவர்களின் பணிகள் சம்பந்தமாக சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. அவ்விதமானவர்களுக்கு கட்சி மீண்டும் முன்னுரிமை அளித்து வேட்புமனுக்களை வழங்குவதென்று தீர்மானித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இரண்டு வருட கால இடைவெளியின் பின்னர் மீண்டும் நடைபெறவிருக்கின்றமையால் ஏற்கனவே வேட்புமனுக்களில் பெயரிடப்பட்டவர்களில் மரணித்தவர்கள், நாட்டை விட்டு வெளியே சென்றவர்கள், மாற்றுக்கட்சிகளுக்கு சென்றவர்கள் என பலர் இருக்கின்றார்கள்.
ஆகவே, அவ்விதமானவர்கள் தொடர்பில் முழுமையான ஆய்வினை தொகுதிகள் மற்றும் மாவட்ட ரீதியாக மேற்கொண்டு அதன் பின்னர் பிரதியீடுகளைச் செய்ய வேண்டியுள்ளது. பிரதியீடுகளைச் செய்கின்றபோது இளைஞர், யுவதிகளுக்கு கூடுதலான சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டும் என்று தலைவர் வினயமாகக் கேட்டுக்கொண்டுள்ளார். அவ்விடயம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக கட்சி சம்பந்தமான வழக்குகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. ஒரு வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதிக்கும் பிறிதொரு வழக்கு எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதிக்கும் திகதியிடப்பட்டுள்ளது. அதேநேரம், குறித்த வழக்குகளை தீர்ப்பது சம்பந்தமாக எழுத்துமூலமான எனது யோசனை மத்தியகுழுவுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சமர்ப்பிக்கப்பட்டு ஜூலையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் ஏனைய தரப்பினரின் சட்டத்தரணிகளால் அந்த விடயம் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாமையில் இன்னமும் வழக்குகள் இழுபறியாக உள்ளது. ஆகவே ஏனைய தரப்பினரும் மத்திய செயற்குழு அனுமதியளித்த விடயத்தினை ஏற்றுக்கொண்டால் வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர முடியும்.
வழக்கு தாக்கலின் அடிப்படை என்னவென்றால், கடந்த வருடம் ஜனவரி 21ஆம் மற்றும் 27ஆம் திகதி பொதுச்சபை கூட்டப்பட்டபோது, பொதுச்சபையினது சேர்க்கை தவறானதாக இருந்திருக்கிறது. பொதுச்சபையின் எண்ணிக்கை 156 பேராக ஆகக் கூடுதலான எண்ணிக்கையாக இருக்கின்றபோதும் அதன் எண்ணிக்கை 346 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றிருக்கின்றார்கள் என்பதாகும்.
ஏற்கனவே சேனாதிராஜா, சிறிதரன், யோகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் பொதுச்சபை தொடர்பில் வழக்காளியின் கோரிக்கையை ஏற்று நிவாரணம் அளிப்பதென்று எழுத்துமூலமாக நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர். அதேபோன்று, நான் உள்ளிட்டவர்கள் பொதுச்சபை கூட்டியது சரியானதென்றும் எனினும் வழக்கினை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ஏனைய தரப்பினருடன் இணைந்து வழக்காளிக்கான நிவாரணத்தை அளிப்பதென்றும் இணங்கியுள்ளோம்.
இதனை நடைமுறைப்படுத்தினால் வழக்கினை முடிவுக்கு கொண்டுவரமுடியும். ஆகவே, வழக்கினை நீடித்துக்கொண்டிருப்பதற்கான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய செயற்குழுவின் தீர்மானத்தினை அமுலாக்குவதற்கு இணங்காதிருப்பவர்களையே அக்குற்றச்சாட்டுக்கள் சாரும்.
கட்சியின் மூலக்கிளைகளுக்கான ஆயுட்காலம் நிறைவடைந்தால் அந்தக் கிளைகளை புதிப்பிப்பது என்று கடந்த கூட்டங்களில் அதுபற்றி ஆராய்ந்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் சம்பந்தமாக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். அதற்காக அந்தந்த மாவட்டங்களில் இருந்து முறைப்பாடுகளை பெற்றுக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முதலில் அவர்களிடத்தில் விளக்கம் கோரப்பட்டு அடுத்த நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
பாராளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு வெளியே சென்று வேறு சின்னங்கள், சுயேட்சைகளில் போட்டியிட்டவர்களை வர்த்தமானியுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவர்களை நீக்குவதற்கு முடிவினை எடுத்துள்ளோம். அவர்களுக்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வு சம்பந்தமாக தமிழ்க் கட்சிகள் சேர்ந்து உரையாடுவது சம்பந்தமாக கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் கடந்த காலங்களில் கட்சியால் தயாரித்து முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புக்கான வரைவுகள் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டது.
எமது கட்சி உருவாக்கப்பட்டதே ஆட்சிமுறைமை மாற்றத்துக்காகவாகும். அதனை அடைவதே எமது இலக்காக உள்ளது. சமஷ்டிக் கட்சி என்ற பெயரைக் கொண்ட நாங்கள் சமஷ்டித் தீர்வொன்றையே வலியுறுத்துவோம். அதனையே முன்னகர்த்துவோம்.
காலத்துக்குக் காலம் அரசியலமைப்புச் செயற்பாடுகள், அதிகாரப்பகிர்வுச் செயற்பாடுகள் உள்ளிட்டவற்றில் நாங்கள் பங்குபற்றியுள்ளோம். இறுதியாக 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிபுணர்கள் குழுவுக்கு எமது தீர்வுத்திட்டத்தினை அனுப்பியுள்ளோம்.
2021இல் நாம் அந்த திட்டத்தினை நிபுணர்கள் குழுவிடத்தில் சமர்ப்பித்துள்ளோம். அந்த அடிப்படையில் குறித்த திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு எம் மத்தியில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் உள்ளார்கள். அவர்களின் ஆலோசனைகள் பெறப்படவுள்ளன.
அதற்காக ஏழு பேர் கொண்ட குழுவொன்று கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் கட்சியின் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம், துரைராஜசிங்கம், கேசவன் சயந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவினர் தீர்வுத்திட்டம் சம்பந்தமாக ஆராய்வினைச் செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள். அதன் பின்னர் இக்குழுவினரே தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஏனைய கட்சியினருடன் பேச்சுக்களில் ஈடுபட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளில் பங்கேற்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM