நிலைபேறற்ற சீன முதலீடுகள் கடன்சுமையை அதிகரிக்கும் யாழ்.பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்த இந்திய உயர்ஸ்தானிகர் ; சீனத்தூதுவரின் உள்விவகார தலையீடு குறித்தும் சுட்டிக்காட்டு

18 Jan, 2025 | 10:00 PM
image

ஆர்.ராம்  

நாடொன்றின் நிலைபேறன எதிர்காலத்தினை உறுதிப்படுத்தாத சீனாவின் முதலீடுகள் அந்நாட்டின் கடன்சுமையையே அதிகரிக்கும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.  

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் தனியார் விடுதியொன்றில் இராப்போசனத்துடன் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்திருந்தார்.  

இந்தச் சந்திப்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், பவானந்தராஜா, ரஜீவன் ஆகியோரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். 

அத்துடன் யாழ்.இந்திய துணைத்தூதர் சாய்முரளியும் மற்றும் தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் திருகோணமலையில் நடைபெறும் மத்திய குழுக்கூட்டத்தில் பங்குபற்றவேண்டி இருந்தமையால் இச்சந்திப்புக்கு சமூகமளித்திருக்கவில்லை.

இராப்போசனத்துடன் சந்திப்பு ஆரம்பமாகியிருந்த நிலையில் சொற்ப நேரத்தில் அமைச்சர் சந்திரசேகரர் அங்கிருந்து வெளியேறியிருந்தார். இந்நிலையில், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தனது கருத்துக்களை வெளிப்படுத்தலானார்.

முதலில், இந்தியா போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தை மீளக் கட்டியெழுப்புவதில் கொண்டிருக்கின்ற கரிசனைகளை வெளிப்படுத்தியதோடு, தமது நலத்திட்டங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்களின் நோக்கங்களை பிரஸ்தாபித்தார். 

இதன்போது போரால் பாதிக்கப்பட்ட மக்களினதும், பிரதேசங்களினதும் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வாழ்க்கைத்தர மேம்பாடுகளில் இந்தியா கரிசனைகளைக் கொண்டிருப்பதாகவும் கூறினார். அத்துடன், எதிர்காலத்திலும் வடக்கில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்தியா எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார். 

இந்தியாவைப் பொறுத்தவரையில் பிரதேசத்தின் அல்லது நாட்டின் எதிர்காலத்தினை அடிப்படையாகக் கொண்டு நிலைபேறான அபிவிருத்தியை அடைவதை இலக்காகக் வைத்தே தமது முதலீடுகளாக இருந்தாலும் சரி, நன்கொடைகளாக இருந்தாலும் சரி ஒட்டுமொத்த செயற்பாடுகளும் அமைகின்றன என்று குறிப்பிட்டார்.

இந்தியாவைப்போன்றே அமெரிக்கா, மேற்குலக நாடுகள் அவை கொண்டிருக்கின்ற இருதரப்பு உறவுகளின் அடிப்படையில் எந்தவொரு நாட்டிலும் முதலீடுகள் மற்றும் நன்கொடைகளை வழங்கம் போது ஆழமாக கரிசனை கொள்கின்றன என்றும் கூறினார்.

ஆனால், சீனாவைப் பொறுத்தவரையில் அவர்களின் முதலீட்டுத்திட்டங்கள் விரைவாக முன்னெடுக்கப்படுவதோடு அவை நிலைபேறான இலக்குகளை பெரிதாக மையப்படுத்துவதில்லை. ஆகவே அந்நாட்டின் நிலைபேறற்ற முதலீடுகள் எந்தவொரு நாட்டையும் அதீதமான கடன்சுமைக்குள்ளேயே கொண்டு செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனையடுத்து, இலங்கைக்கான சீனத்தூதுவர் யாழ்ப்பாணத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார தலைமயிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வாக்களித்தமையை வரவேற்கின்றேன்.  என்று கூறிமை தொடர்பிலும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

இராஜதந்திர வரமுறைகளின் அடிப்படையில் எந்தவொரு நாட்டின் இராஜதந்திரியும் மக்களால் வழங்கப்பட்ட ஆணை தொடர்பில் கருத்துக்களை வெளியிட முடியாது. அவ்வாறு வெளியிடுவதானது, தான் இராஜதந்திர சேவையை ஆற்றும் நாட்டின் உள்ளக விவகாரங்கள் தலையீடு செய்வதாகவே அமையும். ஆகவே அவரது பிரதிபலிப்புக்கள் தவறானவை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமன்றி, அங்கிருந்த தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களைப் பார்த்து, சீனத்தூதுவரின் கருத்தை நீங்கள் உங்களுக்குச் சாதகமாக தற்போது கருதினாலும், எதிர்காலத்தில் மாறுபட்ட நிலைமையொன்று ஏற்படுகின்றபோது அது உங்களுக்கும் பின்னடைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டதோடு தமது நாடு உட்பட வேறெந்த நாடுகளிலும் இத்தகைய கருத்துக்களை இராஜதந்திர சேவையில் இருப்பவர்கள் பகிரங்கமாக தெரிவிப்பார்களாக இருந்தால் வெளிவிவகார அமைச்சின் எச்சரிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், குறித்த சந்திப்பின்போது, ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கத்தில் ராஜபக்ஷக்களை விடவும் படுமோசமாக செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்று குறிப்பிட்ட கஜேந்திரகுமார், உதாரணமாக, துறைசார்ந்த குழுக்களுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான அங்கத்துவங்களை வழங்குவதில் பாரபட்சம் காண்பிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். 

தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அவ்விடயங்களை தெரியப்படுத்தும்போது தீர்வுகளை பெறமுடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்துள்ளதோடு, பவானந்தராஜா உள்ளிட்டவர்கள் இராஜதந்திர விடயத்தில் தமது அரசாங்கம் அனைத்து நாடுகளுடன் இருதரப்பு, பல்தரப்பு உறவுகளை சீராகப் பேணுகின்றது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-13 06:05:42
news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55