(அபிலாஷனி லெட்சுமன்)
ஜுவைரியா மொஹிதீன் என்ற பெயர் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் மிகவும் பரீட்சயமான பெயர். 1990இல் தனது சொந்த ஊரில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜுவைரியா மொஹிதீன், இடம்பெயர்ந்தவர்களில், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக உழைத்து வருகிறார்.
“முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம்” (MWDT) என்ற அமைப்பின் மூலம் பல சேவைகள் புரியும் சமூக ஆர்வலராகவும் மனித உரிமை செயற்பாட்டாளராகவும் மக்கள் மத்தியில் அறியப்பட்டுள்ளார்.
ஜுவைரியா மொஹிதீன் வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணல் மூலம் தன் வாழ்வில் எதிர்நோக்கிய இன்ப துன்பங்களையும் தன் வாழ்வில் எதிர்கொண்ட சவால்களையும் எம்மோடு பகிர்ந்துகொண்டார்.
கேள்வி - முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் நிறுவுனரான உங்களைப் பற்றிய அறிமுகம்?
பதில் - நான் ஜுவைரியா மொஹிதீன் மன்னார் மாவட்டத்தில் எருக்கலம்பிட்டி கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட நான் மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றேன்.
1990இல் வடக்கு பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் இலங்கையின் வடமேற்கில் உள்ள புத்தளத்திற்கு குடிப்பெயர்ந்தோம். எங்கள் வீட்டில் ஒன்பது பேர் வசித்துவந்தோம். அன்றைய வறுமையின் போது எங்களுக்கு சிறியளவிலான வருமானத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டிய தேவை காணப்பட்டது. அப்போது பரிதாபத் என்ற அகதிகள் முகாமில் மருந்து வழங்கும் சேவையில் இணைந்தேன். இதுவே எனது முதல் சேவை. அதிலிருந்து பல சேவைகளோடு என் வாழ்க்கை நகர்ந்து செல்கிறது.
கேள்வி - சமூக செயற்பாட்டாளராக பரிணமிக்கும் எண்ணம், யோசனை எவ்வாறு, எந்த சூழ்நிலையில் உங்களுக்கு ஏற்பட்டது?
பதில் - சிறு வயதிலிருந்தே சிறியளவிலான சேவைகளில் ஈடுபட்டதோடு, காலப்போக்கில் அவை பெரியளவிலான சேவைகளை புரிய எனக்கு வழிவகுத்தது.
கிராம அபிவிருத்தி நிறுவனத்தில் (RTF) இணைந்து தன்னார்வலராக பணிபுரியத் தொடங்கினேன். இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்ட 120 முகாம்களில் உள்ள பெண்களை வலுவூட்டுவதோடு, சுயதொழில் புரிய உதவி செய்யும் வகையில் சேவைகளை தொடர்ந்தேன். திருமண வாழ்க்கையினை தொடர்ந்து 15 வருடங்களாக கிராம அபிவிருத்தி நிறுவனத்தில் பணியாற்றிய பின் பெண்களை மையப்படுத்தியதாக திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
இதன் அடிப்படையில், “முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம்” என்ற நிறுவனத்தை அமைத்தோம். ஆனாலும் தற்போது காணப்படும் வசதி வாய்ப்புகள் அன்றைய காலப்பகுதியில் காணப்படவில்லை. ஒரு கதிரை, ஒரு மேசை என்றவாறு தான் காணப்பட்டது. இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே எனது பணி ஆரம்பிக்கப்பட்டது.
“முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம்” என்ற நிறுவனம் மூலம் பல்வேறு திட்டங்களை வேறு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தியுள்ளேன். வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ், முஸ்லிம் பெண்களை ஒன்றிணைத்து பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். இதன்போது அவர்களுடைய ஒத்துழைப்பும் எனக்கு பெரியளவில் கிடைத்தது.
வருமானம் என்று பாராது சமூக உணர்வு என்ற ரீதியில் எங்களுடைய சேவைகளை நாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளோம். “முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம்” என்ற நிறுவனத்தை நிறுவி, பெண்களுக்கான திட்டங்களை முன்னெடுத்த பின்னர் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் சீர்திருத்தங்களை கொண்டுவரவேண்டிய தேவை ஏற்பட்டது.
முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் மூலம் அதிகளலான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய தேவையினை இந்த அமைப்பின் மூலம் நடைமுறைபடுத்தினோம்.
முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தை பற்றிய கருத்தரங்குகள் மூலம் பல விடயங்களையும் சட்டங்களையும் அறிந்துகொண்டமையினால் தான் இவ்வாறான சேவைகளை நடைமுறைப்படுத்தவேண்டிய தேவையும் சூழ்நிலையும் ஏற்பட்டது.
கேள்வி - ஒரு சமூக செயற்பாட்டாளராக விளங்குவது என்பது அதிலும் முஸ்லிம் பெண் என்ற ரீதியில் எவ்வளவு சவாலானது?
பதில் - சமூக செயற்பாட்டாளராக விளங்குவது என்பது பெண் என்ற ரீதியில் மிகவும் சவாலானது. சட்ட திருத்தம் தொடர்பாக பணியாற்றும்போது மதத்துடன் தொடர்புகொண்டவையா அல்லது சட்டத்துடன் தொடர்புகொண்டவையா என்ற புரிந்துணர்வு இல்லாத தன்மையோடு காணப்பட்ட மக்களுடன் சேர்ந்து நாமும் அவை தொடர்பாக பிரித்தறிய வேண்டிய தேவையோடு பயமும் காணப்பட்டது.
இவ்வாறான பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் கொண்டுசெல்ல முடியுமா என்ற பயமும் காணப்பட்டது. ஆனால் அவற்றை மீறியும் பல திட்டங்களை நடைமுறைபடுத்தினோம். இதன்போது சிலரினால் பல சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
பெண்ணொருவரின் முன்னேற்றம் என்பது நிறைய தடைகளையும் நிறைய சவால்களையும் கடந்தது என்பது அறிந்தவொன்றே. நாங்கள் 1990ஆம் ஆண்டு வலுக்கட்டாயமாக வடக்கு, கிழக்கு பகுதிகளை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னர் அப்போதைய சூழ்நிலையினை புரிந்துகொள்ளாத பலரினால் பல இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.
புத்தளம் தொடர்பாக தவறான விடயங்களை யாரேனும் பகிர்ந்துகொள்ளும்போது அந்த விடயத்தை நான் கூறினேன் என்று கூறி, ஒரு பெண் என்று பாராது சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிடக்கூடாத விடயங்களை பதிவிட்டு கீழ்த்தரமான செயற்பாட்டில் ஈடுபட்டு அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.
இவ்வாறான சூழ்நிலையில் இந்த நிறுவனத்துக்கு பணிபுரிய பெண்கள் வருகை தரும்போது பிரச்சினைக்குரிய நிறுவனம் என்று பெயர் கொடுத்த போதிலும் இந்நிறுவனத்தினால் மேற்கொள்ளும் சேவைகளினால் பல விருதுகளை பெற்றுக்கொண்டுள்ளோம்.
முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் பல சேவைகளை மேற்கொள்ளும்போது சில அரசியல்வாதிகளினால் ஏற்றுக்கொள்ள முடியாமல் பல சவால்களை சந்திக்க நேரிட்டது. சட்டம் தொடர்பான அறிவற்றவர்களினாலும் ஆழம் புரியாதவர்களினாலும் தான் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனினும் நிறைய மக்கள் எம்மோடு இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும்போது சமூகத்தில் எந்தவொரு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளமுடியாத நிலையில் பயங்கரவாதி போல இந்த சமுதாயம் எங்களை பார்வையிட்டது. சமுதாயத்துக்கு எடுத்துக்காட்டான ஒரு நபர் ஒரு விடயத்தை கூறுவதற்கும் சாதாரண பெண்ணாகிய நான் கூறுவதற்கும் வித்தியாசம் உள்ளது.
நாங்கள் அனுபவித்த துன்பம் என்பது வார்த்தைகளால் கூறிவிடமுடியாது. இருப்பினும் நான் கற்றுக்கொண்ட உள ரீதியான கற்கை எனக்கு இன்றைய காலம் வரைக்கும் துணைகொண்டு காணப்படுகிறது.
கேள்வி - பல இன்னல்களுக்கு மத்தியில் உங்களுடைய சேவைக்கு துணைபுரிபவர்கள் யார்? அதனால் இன்று நீங்கள் மேற்கொண்ட சேவை எட்டியிருக்கும் உச்சம் பற்றி கூறுங்கள்?
பதில் - பல தடைகளும் பல சவால்களும் காணப்பட்ட போதிலும் 30 வருடங்களுக்கு மேலாக நாங்கள் மேற்கொண்ட சேவை மேலும் உச்சத்தை தொட்டதாகத்தான் காணப்படுகிறது. என் வாழ்வில் என் தந்தை எனக்கு தைரியத்தை கற்றுக்கொடுத்துள்ளார். நான் வளர்ந்த சூழலும் அவ்வாறுதான்.
அன்றைய சூழ்நிலையில் நாங்கள் மேற்கொண்ட சேவைகள் மீது வெறுப்பு கொண்டவர்கள் என் குடும்பத்தை இலக்கு வைத்து என் சேவைகளை அழிக்க திட்டமிட்டார்கள். ஆனால், அவை கைகூடாத நிலையில் வேறு வேறு வழிகளில் பல தடைகளை ஏற்படுத்தினார்கள்.
அதன் பின்னர், என் வாழ்வில் திருமணம் என்ற கட்டத்தை எட்டிய பின் இன்று வரைக்கும் எனது கணவர் எனது சேவைகளுக்கு துணையாக இருக்கிறார். என் வாழ்வில் வரும் ஒவ்வொரு சோர்வுக்குப் பின்னாலும் ஒரு வலுவூட்டலாக என் கணவர் தான் காணப்படுகிறார்.
பல வருடங்களை கடந்த நிலையில் எனக்கு இறைவன் அருளால் ஒரு மகனும் மகளும் பிறந்தார்கள். அன்றைய காலப்பகுதியில் பிள்ளைகளை அவர் பார்த்துக்கொள்வதாக கூறி என் சேவைகளுக்கு உதவி புரிந்துள்ளார். தற்போது என் பிள்ளைகளும் அவ்வாறுதான்.
அத்தோடு, எனக்கு மூத்த சமூக ஆர்வலர்களும் என்னோடு பணிபுரியும் சக பெண்கள் மற்றும் சில ஆண்களும் இன்று வரை நான் மேற்கொள்ளும் சேவைகளுக்கு துணையாகத்தான் இருக்கிறார்கள்.
பல தடைகளை கடந்தும் இன்று “முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கை” என்ற அமைப்பினால் பல பெண்களின் வாழ்க்கை சிறப்பாக காணப்படுகிறது. இன்று பல பெண்கள் சுய தொழில் புரிகின்றார்கள். கணவன் என்னை விட்டுச் சென்றாலும் எனக்கும் என் பிள்ளைக்கும் என்னிடத்தில் சுயதொழில் காணப்படுகின்றது என்ற நம்பிக்கையில் பல பெண்கள் சிறப்பாக வாழ்கின்றார்கள். சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக பல பெண்களை உருவாக்கிய பெருமை “முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம்” என்ற அமைப்பை சாரும். பல சிறுவர்களின் வாழ்க்கையும் இன்று சிறப்பாக காணப்படுகிறது. சில ஆண்களுக்கும் உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நிறுவனமாக காணப்படுகிறது. இந்நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்ட நாளில் இருந்து பல தடைகள் காணப்பட்டபோதிலும் இன்று பல முன்னேற்றங்களை எட்டியுள்ள நிலையில் பெண்கள் உட்பட பலரது பிரச்சினைகளை தீர்த்துள்ளோம்.
கேள்வி - சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தீவிரமாக முயற்சி செய்துள்ளீர்கள்... அது பற்றி தெரிவியுங்கள்?
பதில் - குறிப்பிட்ட மக்கள் மத்தியில் வடக்கு, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கும் புத்தளத்தில் உள்ள சமூகத்தினருக்குமிடையில் சில முரண்பாடுகள் காணப்பட்டன. இவ்வாறான சூழ்நிலையில் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைவுச் சின்னம் வைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது “வந்தோரை வாழவைத்த புத்தளம்” என்ற நினைவுச் சின்னம் வாழ்த்துக் கவிதையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
1990இல் வடக்கு, கிழக்கு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களுக்காக நிறைய செயற்பாடுகளை புத்தள வாழ் மக்கள் முன்னேடுத்திருந்மைக் குறிப்பிடத்தக்கது. அதனால் அவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நினைவுச் சின்னம் வைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அன்றைய காலகட்டத்தில் நிலவிய போர் காரணமாக நாங்கள் வெளியேறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் உறவை பலப்படுத்த வேண்டும்.
ஒரு பெண்ணுக்கு பிரச்சினை ஏற்படும்போது அவர் தமிழ், முஸ்லிம் என்று பாராது ஒரு பெண் என்ற ரீதியில் நாங்கள் உணர்வுபூர்வமாக உதவிகளை செய்து வருகிறோம்.
கேள்வி - பெண் சமூக செயற்பாட்டாளராக திகழும் நீங்கள் உங்கள் அனுபவத்தின் ஊடாக பெண்களுக்கு தெரிவிக்க விரும்புவது என்ன?
பதில் - முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினூடாக ஒரு சிறிய பகுதியில் எந்தவொரு வளமும் இல்லாமல் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. அவ்வாறே இளைஞர் சமூகத்தினரும் வளங்களை எதிர்பார்க்காது சிறிய விடயங்களையும் விருப்புடன் மேற்கொள்ள வேண்டும்.
இன்றைய காலத்தில் தேடியறிந்து கற்பதற்கு நிறைய விடயங்கள் உள்ளன. அவற்றை தேடியறிந்து கற்க வேண்டும். அது பற்றிய தெளிவினை பெற்றுக்கொண்டு மற்றவருக்கும் தெளிவுபடுத்தவேண்டும்.
நான் பணம், புகழ் என்று எதையும் எதிர்பார்த்து பணிபுரியவில்லை. நான் செய்வேன், என்னால் முடியும் என்று ஒரு விடயத்தை செய்ய முற்படும்போது பணம், புகழ் என்பவற்றை நீங்கள் நாடவேண்டிய தேவை ஏற்படாது. அனைத்தும் உங்களை நாடிவரும்.
அத்தோடு, தன் பிழைகளை ஒருவர் சுட்டிக்காட்டும் போதும் தனக்கு நல்ல விடயங்களை கூறும்போதும் நாம் அவற்றை ஏற்றுக்கொண்டாலே வாழ்வில் முன்னேற்றமடைய முடியும். இன்றைய இளைஞர்கள் கலாசார ரீதியான சமூகத்திலிருந்து வெளிவந்து சாதனை புரிய வேண்டும். பெருமைக்காக வாழ்வது வாழ்க்கை அல்ல. வாழ்ந்ததற்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திவிட்டு செல்ல வேண்டும் என்பது தான் வாழ்க்கை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM