இஸ்லாமியர்களின் நோன்புக் காலம் ஆரம்பிப்பதை முன்னிட்டு அமெரிக்காவின் அரச அலுவலகங்கள் சார்பாக ஒரு நிகழ்வை நடத்துவதற்கு விடுக்கப்பட்ட ஒரு கோரிக்கையை ஐக்கிய அமெரிக்காவின் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் நிராகரித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இஸ்லாமியர்களின் புனித நோன்புக் காலம் இன்று ஆரம்பமாகிறது. இதையொட்டி ஒரு சமய நிகழ்வை நடத்துவதற்கு மாநிலச் செயலக அதிகாரிகள் இருவர் ரெக்ஸ் டில்லர்சனிடம் அனுமதி கோரியுள்ளனர். என்றபோதும், அந்தக் கோரிக்கையை நிராகரித்த ரெக்ஸ், இது குறித்து பொது இடங்களில் பேசவேண்டாம் எனவும் அவ்வதிகாரிகளிடம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

அமெரிக்காவில், கடந்த இருபது வருடங்களாக அமைந்த குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஆட்சிக் காலங்களில் இஸ்லாமியர்களின் நோன்புக் காலத்தைக் கௌரவிக்கும் வகையில் இஃப்தார் அல்லது அதற்கு நிகரான ஒரு நிகழ்வு அரச அலுவலகங்கள் சார்பில் நடத்தப்பட்டு வந்தது. எனினும், இந்த ஆண்டு நோன்பைக் கொண்டாடுவதற்கு தற்போதைய ட்ரம்ப் அரசு மறுதலித்துள்ளது. 

இஸ்லாமியத் தீவிரவாதத்தைத் தாம் கடுமையாக எதிர்த்துவருகின்றபோதும், இஸ்லாம் மீது அமெரிக்காவுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்றும், இதனால், வேறு வழிகளில் அமெரிக்க அரசு சார்பில் நோன்பை கௌரவிக்கும் வகையில் ஏதேனும் நிகழ்வை நடத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று தாம் ஆராய்ந்து வருவதாகவும் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.