நடிகர் சைஃப் அலிகான் மீது கத்திக் குத்து தாக்குதல்!

16 Jan, 2025 | 11:06 AM
image

வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபரொருவரின் கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த நடிகர் சைஃப் அலிகான் மும்பை லீலாவதி வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியிலுள்ள பொலிவுட் முன்னணி நடிகரான  சைஃப் அலிகானின் வீட்டினுள் இன்று (16) அதிகாலை 2:30 மணியளவில்  கொள்ளையிட சந்தேக நபரொருவர் நுழைந்ததாகவும் அப்போது நடந்த சண்டையில் சைஃப் அலிகான் காயமடைந்ததாகவும் மும்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில், சைஃப் அலிகானின் உடல் நிலை தொடர்பில் மும்பை லீலாவதி வைத்தியசாலையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் நீரஜ் உத்தமானி கூறுகையில், 

“சைஃப் அலிகான் அதிகாலை 3.30 மணிக்கு மருத்துவமனை அழைத்துவரப்பட்டார். அவருக்கு 6 இடங்களில் காயங்கள் இருந்தன. ஒரு காயம் அவரது முதுகுத் தண்டவடத்தின் அருகே உள்ளது. அதற்காக அறுவை சிகிச்சை செய்கிறோம். அவருக்கு நரம்பியல் அறுவை நிபுணர் நிதின் டாங்கே, காஸ்மடிக் அறுவை நிபுணர் லீனா ஜெயின், மயக்க மருந்து நிபுணர் நிஷா காந்தி உள்ளிட்டோர் இணைந்து அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னரே காயத்தின் தன்மை பற்றி மேலதிக தகவல்களைத் தெரிவிக்க முடியும்” என்றார்.

இச்சம்பவம் குறித்து மும்பை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right