தொடர்மழையினால் ஏற்பட்டு வரும் வெள்ள மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 28 பேர் பலியாகியுள்ளதுடன் 41 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களே இந்த அனர்த்தங்களினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

புளத்சிங்கள போகஹாவத்த பகுதியில் ஆறு பேர் பலியானதுடன் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர். மேலும், தீவலகட பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் எட்டுப் பேரைக் காணவில்லை.

களுத்துறை, பதுரெலிய பகுதியில் நிகழ்ந்த மண்சரிவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக பலியாகினர்.

ஹெய்யந்துடுவை, சப்புகஸ்கந்தையில் மதில் சுவரொன்று சரிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர்.

இரத்தினபுரி நகரம் முழுவதும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது. இந்த அசாதாரண காலநிலையால் அப்பகுதியில் மட்டும் பத்துப் பேர் பலியாகியுள்ளதாக பேரிடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

பெலியத்தை - கஹாவத்தையில் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த அசாதாரணச் சூழலால் தெனியாய, மொரவக்க கந்தையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.