அடர்ந்த காட்டுக்குள் இப்படி ஒரு அவலமா?  :  பொறுப்புக் கூறுவது யார்?

17 Jan, 2025 | 10:02 AM
image

எம்.டி. லூசியஸ்

'எங்களுடைய பாடசாலையை மூடி விடாதீர்கள்..."  

அடர்ந்த காட்டுக்குள் இருந்து ஒலிக்கும் சின்னஞ் சிறு மாணவச் செல்வங்களின் அன்புக் கோரிக்கையே இது.

ஆம்...!

இலங்கையின் சப்ரகமுவ மாகாணத்தில் கோகாலை மாவட்டத்தில் ருவான்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள சன்னிக்ரொப்ட் என்ற பாடசாலையானது, அடர்ந்த இறப்பர் காட்டுக்குள் முத்து போன்று காட்சியளிக்கின்றது.

ஆனால் இந்த பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களை ஒரு சில வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாதளவுக்கு மிகவும் கொடூரமானது.

1960 ஆம் ஆண்டு ஒரு ஆசிரியரை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலையானது படிபடியாக வளர்ச்சியடைந்து 150 மாணவர்கள் வரை கல்வி கற்கும் நிலைக்கு மாற்றமடைந்தது.

ஆனால் தற்போது  13 மாணவர்கள் மாத்திரம் கல்வி கற்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு இந்த பாடசாலை தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்பதை அறிய, எமது வீரகேசரி குழுவினர் குறித்த பாடசாலையின் கள நிலைமைகளை நேரில் சென்று ஆராய்ந்தோம்.

ருவான்வெல்ல நகரத்திலிருந்து நிட்டம்புவ நோக்கி செல்லும் பிரதான வீதியில் 22 கிலோமீற்றர் தூரத்தில் தலுவலான பிரதேசம் காணப்படுகின்றது.

இந்த பிரதேசத்திலிருந்து சுமார் 4 கிலோமீற்றர்   தூரத்தில் இந்த பாடசாலை காணப்படுகின்றுது.

பாடசாலையை எந்தவொரு வாகனத்தாலும் சென்றடைய முடியாதளவுக்கு பாதை மிக மோசமாக உள்ளது.

நாம் சென்ற வாகனத்தை தலுவலான பகுதியில் பிரதான பாதையின் ஒரு பகுதியில் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு பாடசாலைக்கு செல்லும் வழியில் நடந்து சென்றோம்.

இறப்பர் மரங்கள் நிறைந்த காட்டுக்கு மத்தியில் செல்லும் இந்த பாதையில் தண்ணீர் ஊற்றுக்களும் வெளிவந்த வண்ணமாய் இருந்தன.

ஒரு சில மாணவர்களும் பாடசாலை ஆசிரியர்களும் இந்த பாதையையை தான் தினமும் பயன்படுத்துவதாக அங்கிருந்த பொதுமகன் ஒருவர் எமக்கு தெரிவித்தார்.

ஒரு நாள் பயணித்த எமக்கே வேண்டாம் என்று ஆகி விட்டது.

ஆனால் தினமும் இந்த பாதையை பயன்படுத்தும் மாணவர்கள், ஆசிரியர்களின் நிலைமையை யோசித்தால் தான் சற்று தலையை சுற்றுகின்றது.

காரணம் அடர்ந்த காடுகளுக்குள் இந்த கரடுமுறடான பாதை நீண்டு செல்கின்றது. மக்களின் நடமாட்டமும் இல்லை. ஏதாவது ஒரு காட்டு விலங்கினம் தாக்கினாலும் கூட பொறுப்புகூற எவரும் இல்லை.

அவ்வாறானதொரு ஆபத்து நிறைந்த பாதையை, மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் கடந்து பாடசாலையை சென்றடைந்தோம்.

மலைத் தொடர்களில் இருந்து விழும் அருவிகளின் சத்தம், குயில் பாடும் குருவிகளும் இறச்சலுக்கு மத்தியில் மாணவச் செல்வங்களின் குரல்கள் எம் காதை வந்தடைந்தன.

பாடசாலை நெருங்கிய போது அங்கு ஆசியர் ஒருவர்  மாணவர்களுக்கு கற்பித்துக்கொண்டிருந்தார்.

நாம் பாடசாலை வாயிலை அடைந்தவுடன் அங்கிருந்த மாணவர்கள் எம்மை ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு  அருகில் இருந்த நண்பர்களுடன் ஏதோ பேசிக்கொண்டனர்.

இதனையடுத்து பாடசாலைக்கு வந்த காரணத்தை ஆசிரியரிடம் தெரியப்படுத்தியதை தொடர்ந்து, பாடசாலையில் உள்ள அனைத்து குறைப்பாடுகளையும் மிகுந்த  ஆதங்கத்துடன் ஆசிரியரும் அதிபருமான ஜீவித்தா தெரியப்படுத்தினார்.

 'பாடசாலை ஆரம்பிக்கப்பட்டகாலம் முதல் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வந்தது. குறிப்பாக பாடசாலையில் வளங்கள் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இதனால் மாணவர்களுக்கு சரியான முறையில் கற்பிக்க முடியவில்லை. இதனால் மாணவர்களாலும் சரியாக கல்வி கற்க முடியவில்லை.

இன்றைய தொழினுட்ப உலகில் எங்களுடைய பாடசாலையில் ஒரு கணினி கூட இல்லை. பாடசாலைக்காக பயன்படுத்தப்படும் போக்குவரத்து பாதைகள் மிகவும் மோசமாக உள்ளன. மாணவர்கள் காட்டுவழிப் பாதையையே பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு ஏதாவது ஆபத்து நிகழ்ந்தால் கூட பொறுப்பு கூற யாரும் இல்லை.

பெருந்தோட்டத்திலிருந்து பாடசாலைக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை. பாதைகள் எல்லாம் காடுமண்டி காணப்படுகின்றன.

குறிப்பாக புதிதாக நியமனம் பெற்று வரும் ஆசிரியர்களும் பாடசாலை காட்டுக்குள் காணப்படுகின்றது என கூறி வேறுபாடசாலைகளுக்கு நியமனம் பெற்று செல்கின்றனர். 

நானும் பல இன்னல்களுக்கு மத்தியிலேயே சேவையாற்றி வருகின்றேன்.

இந்த பாடசாலையில் உள்ள பிரச்சினைகளுக்கு பாடசாலையை மூடினால் கூட பரவாயில்லை. இருந்தாலும் மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு கல்வி கற்பதால் இந்த பாடசாலை தொடர்ந்து செயற்பட வேண்டும். ஏனென்றால் இந்த மாணவர்களுக்கு நகர்புறங்களில் சென்று கல்வி கற்கும் அளவுக்கு வசதியில்லை.

எனக்கும் அவசர நிலைமைகளுக்கு கூட விடுமுறை எடுக்க முடியாது. பாடசாலையில் அனைத்து நிர்வாக வேலைகளையும் கற்பித்தல் நடவடிக்கைகள் அனைத்தையுமே தனியாக செய்கின்றேன்.

பாடசாலையை இந்நிலைமையிலிருந்து மாற்றுவதற்கு பெற்றோரின் ஒத்துழைப்பு அவசியமாகும்.  

இதேநேரம் மழைக்காலங்களில் கூரைகளில் காணப்படும் துளைகள் மூலம் மழை நீர் ஒழுகுவதால் மாணவர்கள் பெரும் துன்பத்தை எதிர்நோக்குகின்றனர். குடிநீரை பெற்றுக்கொள்ள அருகில் உள்ள அருவிகளுக்கு மாணவர்கள் செல்கின்றனர். மழைக்காலங்களில்  வலுக்கும் நிலை காணப்படும்.  மலசல கூட வசதிகளும் இல்லை.

யாரும் எங்களுடைய நிலையை வந்து பார்ப்பதில்லை. குறிப்பாக 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் வலய கல்வி பணிமனை அதிகாரிகளுடம் வந்து எம்மை பார்வையிடவில்லை.

பாடசாலையில் உள்ள பொருட்களை சிலர் திருடிச் செல்கின்றனர். இதுதொடர்பாக ருவான்வெல்ல பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளோம் என மிகவும் கவலையாக ஆசிரியர் தெரிவித்தார்.

இதேநேரம் பாடசாலையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக ருவான்வெல பொலிஸ் நிலைய அதிகாரியை தொடர்பு கொண்டு வினவிய போது அதற்கு பதிலளித்த அவர்,

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

 இதேநேரம் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் சவால்களை சின்னஞ்சிறு மாணவர்கள் இவ்வாறு வெளிப்பிடுத்தினர்.

 எமது பாடசாலையை மூடிவிட வேண்டாம். எங்களுக்கு வேறுபாடசாலையில் சென்று படிப்பதற்கு வசதியில்லை. எங்களது அம்மா அப்பா இறப்பர் காட்டிலேயே வேலை செய்கின்றனர்.

இந்த பாடசாலையில் எவ்வித வசதிகளும் இல்லை. மலசலகூடத்துக்கு சென்றால் கூட அங்கு தண்ணீர் இல்லை. தண்ணீர் எடுப்பதற்கு அருகில் உள்ள அருவிக்கு தான் செல்லவேண்டும். ஒரு சில நேரத்தில் வழுக்கி கீழே விழுந்து விடுவோம்.

நகர்புற பாடசாலைகளில் எல்லா வசதிகளும் உள்ளன. ஆனால் எங்களுக்கு விளையாட கூட வசதி இல்லை. இந்த பாடசாலையை மூடிவிடாமல் அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும் என இந்த மாணவர்களாக தனது மழலை மொழிகளில் அன்பாக வேண்டுகோள் விடுத்தனர்.

இறப்பர் மரத்தில் பால் சேகரிக்கும் தொழிலை செய்யும் எங்களுக்கு குறைந்த வருமானமே கிடைகின்றது. இந்நிலையில் இந்த பாடசாலையை மூடினால் எங்களது பிள்ளையின் எதிர்காலம் என்னவாகும் என மணிமாலா என்ற தாய் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

இதேநேரம் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளை கைவிட்டு விட வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்

 இதேநேரம் எமக்கு உதவி செய்ய யாருமே இல்லை என இராஜேஸ்வரி என்ற தாய் ஒருவர் மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்தார். மேலும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒருவேளை உண்பதற்கே பெரும் கஸ்டமாக உள்ளது. இந்நிலையில் நகர்புற பாடசாலைக்கு அனுப்பி எவ்வாறு எமது பிள்ளைகளை படிப்பிக்க முடியும் என  மற்றுமொரு வயோதிப பெண் கேள்வியெழுப்பினார்.

குறிப்பாக அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் வருவதாகவும் எவ்வித உதவிகளை அவர்கள் செய்வதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பரம்பரையாக படித்து வந்த பாடசாலை மூடினால் எங்கள் பிள்ளைகள் எங்கு செல்லும் எனவும் தரமற்ற பாதையினால் பெண் ஒருவருக்கு பாதையின் இடைநடுவிலேயே குழந்தை பிறந்தாகவும் ஆர். ரவிக்குமார் என்ற தந்தை ஒருவர் தெரிவித்தார்.

ஏற்கனவே குறைப்பாடுகளுடன் காணப்படும்  இந்த பாடசாலையை போதை ஆசாமிகளும் விட்டு வைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பாடசாலையை எப்படியாவது அபிவிருத்தி செய்து தருமாறு பழைய மாணவரான விஜயகுமார் என்ற இளைஞர் ஒருவர் கோரிக்கை விடுத்தார்.

அரசியல்வாதிகள் அதிகாரிகள் என யாரும்; எங்களை கண்டுகொள்வதில்லை. இந்த மோசமான பாதையில் தினமும் நடந்து வந்து கல்வியை கற்பிக்கும் ஆசிரியருக்கு மேலதிகமாக ஒரு கொடுப்பனவை வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

 இந்த பாடசாலையின் நிலைமை தொடர்பில் தெய்யோவிட்ட வலய கல்வி பணிமணையை பல முறை தொடர்பு கொண்ட போதும் சரியான பதில் கிடைக்கவில்லை.

 இதேநேரம்  கல்வி என்பது இன்றைய மாணவர் சமுதாயத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே கல்வியை எமது சமூகத்திற்கு பெற்றுக்கொடுக்க அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.பாஸ்கரன் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். குறிப்பாக ருவான்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த பாடசாலையை மூடி விடக்கூடாது. ஒருவேளை பாடசாலையை மூடிவிட்டால் அப்பிரதேச மாணவர்கள் கல்வியை இழக்கும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். கிராமபுறங்களில் உள்ள மாணவர்களும் சிறப்பான கல்வியை பெற்றுக்கொள்வதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். இதனை செய்தால் மாத்திரமே எமது நாடு சமூகமும் முன்னேறும். இந்த பாடசாலை தொடர்பில் அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும் என கலாநிதி பாஸ்கரன் வலியுறுத்தினார்.

ஜனநாயக நாடொன்றில் அனைவருக்கும் சம அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும் என்ற கோட்பாடு உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை என்னவாக இருந்தாலும் அந்த மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையை அரசாங்கம் உறுதிபூண வேண்டும் கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தின் பேராசியர் கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் தெரிவித்தார்.

குறிப்பாக மலேசியா போன்ற நாடுகளில் தரம் ஐந்து வரை மாணவர்கள் தமது சுயக்கல்வியில் கற்கும் உரிமையை கொண்டுள்ளனர். குறிப்பாக மலேசியாவில் கேரத்தீவு என்ற இடத்துக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு சுமார் 25 மாணவர்கள் பத்தாம் தரம் வரை கல்வி கற்கின்றார்கள்.  அவர்கள் தமிழ் மொழியில் கற்பதற்கான சகல வசதிகளும் அந்நாட்டு அரசாங்த்தால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தாய் மொழியில் உயர் கல்விவரை காணப்படுகின்றது.

குறிப்பாக ருவான்வெல பிரதேசத்தில் காணப்படும் இந்த பாடசாலை மாணவர்கள் சுய மொழியில் கல்விகற்க அவர்களுக்கு வாய்ப்பை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கததிடம் உள்ளது.  இதேபோன்ற நிலைமை தெனியாய தோட்டப்புறங்களிலும் காணக்கூடியதாக உள்ளது. எல்பிட்டி பகுதியில் மாணவர்கள் இன்மையால் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதுவொரு தவறான விடயமாகும்.

ஜனநாயக நாட்டில் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் அனைவரும் தமது தாய் மொழியில் கல்வி கற்க வேண்டும் என்ற கட்டாயம் அரசாங்கம் ஏற்பாட்டில் உள்ளது. குட்டாபொல பிரதேச சபைக்குட்பட்ட ஒரு பகுதியில் மாணவர்கள் தங்களது கல்வியை முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளனர். அதேபோன்று எல்பிட்டிய உடுகம பிரதேசத்திலும் தமிழர்கள் வாழ்ந்தாலும் தமது பாடசாலை கல்வியை தமிழ்மொழி மூலம் தொடர முடியாத நிலையில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

இதேபோன்ற ஒரு நிலைமையே தற்போது ருவான்வெல பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கும் ஏற்பட்டுள்ளது. இது ஜனநாயக நாடொன்றில் சுதந்திரத்தை பழிக்கும் செயலாகும். மாணவர்கள் எண்ணிக்கை என்னவாக இருந்தாலும் அவர்களின் சுய மொழியில் கல்வி கற்கும் உரிமையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இவ்வாறான பட்சத்தில் இந்த பாடசாலை மாணவர்கள் கல்வி கற்பதற்கான அனைத்து வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இது ஜனநாயக விரோத செயற்பாடாகும்.  மாணவர்களின் எண்ணிக்கை கருத்திற்கொள்ளாமல் அவர்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.

மலேசியா போன்ற நாடுகளை உதாரணமாக கொண்டு இந்த மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஒரு வேளை இந்த பாடசாலை மூடப்பட்டால் சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய அநீதியாகும் என கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தின் பேராசியர் கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் வலியுறுத்தினார்.

எனவே சன்னிக்ரொப்ட் பாடசாலை மாணவர்களின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு உரிய அதிகாரிகளும், இம்மக்களை பிரதிநிதித்துவம்படுத்தும் அரசியல்வாதிகளும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து

என்ற திருக்குறளில் கல்வியின் புகழ் அழகாக கூறப்பட்டுள்ளது.

அதாவது ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் என திருவள்ளுவர் கூறுகிறார்.

ஒரு தலைமுறையையே தீர்மானிக்கும் சக்தியாக கல்வி காணப்படுகின்றது. எனவே சன்னிக்ரொப்ட் பாடசாலையை மூடி பல தலைமுறையினரின் வாழ்வை சீழரித்தவர்கள் என்ற வடுவை ஏற்படுத்திக் விடக் கூடாது என ஆணித்தரமாக கூற விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right