‘இராவணனார்’ தெய்வீக மானிடர் (லங்கா பாங்கு - வரலாறு) - நூல் அறிமுகம்

15 Jan, 2025 | 03:51 PM
image

ட இந்தியாவில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட இராமகாதையில் லங்காவில் இருந்த இராவணனார் முக்கிய கதாபாத்திரமாக சித்திரிக்கப்பட்டுள்ளதை எல்லோரும் அறிவர். லங்காவில் ஆட்சி செய்த இராவணனாரின் இராஜதானி எங்கு இருந்தது, அவர் எப்படி வாழ்ந்தார், அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றிய பல விபரங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

கி.பி. 07ஆம், 08ஆம் நூற்றாண்டுகளில் அதாவது இற்றைக்கு 1200 வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவில் சோழர்களுடைய ஆட்சி எழுச்சி பெற்றிருந்த காலத்தில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டிருந்த இராமகாதையை தமிழில் மொழிபெயர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சோழ அரசவையின் வேண்டுகோளுக்கிணங்க அவைப் புலவர்களான ஒட்டக்கூத்தர் மற்றும் கம்பர் ஆகியோரிடம் இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டது. 

ஓட்டக்கூத்தர் குறுகிய காலத்துக்குள் மொழிபெயர்த்துள்ளார். தமிழ்ப் புலமை மிக்க கம்பர் இராமகாதையை காவியமாக பாடியுள்ளார்.

வரலாறுகள் எழுதப்படும்போது அதற்கான காலக்கணிப்புகள் குறிப்பிடப்படுவது வழக்கம். 

புராதன காலத்தில் “லங்கா” என அழைக்கப்பட்டுள்ள இலங்கையின் காலக்கணிப்புகள், தமிழில் “பஞ்சாங்கம்” என்று அழைக்கப்படுகிறது. லங்கா தமிழ் காலக்கணிப்பின்படி, கிருதயுகம், திரேதாயுகம்,  துவாபரயுகம் மற்றும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலியுகம் எனப் பிரிக்கப்பட்டிருந்தன.

பிரளயகாலம் : ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் கடைசி நூற்றாண்டு பிரளய காலம் என அழைக்கப்படும். பிரளய காலத்தில் அழிவுகள் அல்லது மாற்றங்கள் ஏற்பட்டு புதுயுகம் பிறக்கும் என்று காலக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இரண்டாவது யுகமாக கணிக்கப்பட்டுள்ள திரேதாயுகத்தின் முடிவில் வந்த பிரளய காலத்தில் தென்னிந்தியாவைச் சுற்றி ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் லங்கா தீவகம் பிரிந்தது என்ற விடயம் அடையாளமாக குறிப்பிடப்படுகிறது.

அதற்குப் பின்னர், ஆரம்பித்த துவாபரயுகத்தில் தென்னிந்தியாவிலிருந்து லங்காவின் வடமேற்குக் கரைக்கு வந்து குடியேறிய மக்கள் மத்தியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை துவாபரயுகத்துக்கான பிரளயம் என்று குறிப்பிடலாம். 

இவை அனைத்தும் புராணக்கதைகளாக எழுதப்பட்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

திரேதாயுகம் : காலக்கணிப்பில் இரண்டாவது யுகமான திரேதாயுகத்தின் முடிவில் ஏற்பட்ட பிரளயத்தின்போது இந்தியாவின் தென்முனையில் இருந்த நிலப்பிரிவு கடலால் (ஆற்றினால்) பிரிக்கப்பட்டு, தீவகமாக மாறியது. தீவகமாக பிரிக்கப்பட்ட நிலப்பகுதியில் பூர்வீகவாசிகள் வாழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரிக்கப்பட்ட தீவக நிலப்பரப்பின் வடமேற்குப் பிரதேசத்தில் இருந்த முனைப்பகுதிக்கு குறுக்கே, ஆற்று நீரோட்டங்களினால் ஏற்படுத்தப்பட்ட பரவைக் கடலால் பிரிக்கப்பட்டு, மற்றுமொரு சிறிய தீவகமும் உருவாகியிருந்தது. பிரித்த ஆற்றின் இடையிடையே மண்மேடுகள் இருந்த காரணத்தினால் இந்த ஆறு “மண்ணாறு” என அழைக்கப்பட்டுள்ளது. அத்தோடு பிரிக்கப்பட்ட நிலப்பகுதி பாரம்பரியப்படி, ‘மண்ணாறு தீவகம்’ (மன்னார் தீவகம்) எனப் பெயர் பெற்றது. அதுவே பிற்காலத்தில் “மன்னார்” எனப் பெயர் மாற்றம் பெற்றது.

துவாபரயுகம் : அதற்குப் பின்னர் ஆரம்பித்த துவாபரயுகத்தில் தென்னிந்தியாவின் தேக்கன் பிரிவில் வாழ்ந்தவர்களில் ஒரு பிரிவினர் தியானம் செய்து அதன் மூலம் அருவமாக  இருக்கும் பரம்பொருளை வழிபடுபவர்களாக இருந்துள்ளார்கள். இவர்கள் இயக்கர் குலத்தவர்கள் என அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடைய வரலாற்றில் குறிப்பிடப்படும் நிகழ்வுகளுக்கு ஏற்ப அவர்கள், பல பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளனர்.

இலிங்க வழிபாடு : அருவமாக இருக்கும் பரம்பொருளை மனதிருத்தி, தியானம் செய்வதற்காக இலிங்க வடிவத்தை உருவகப்படுத்தி, இயக்கர்கள் வழிபாடுகளை நடத்தி வந்துள்ளார்கள் என்பது வரலாறுகளில் இருந்து தெளிவாகிறது.

சமகாலத்தில் தென்னிந்தியாவின் தேக்கன் பிரிவில் வாழ்ந்த மக்கள் பிரிவினர் வேறு பலவித வழிபாடுகளை பின்பற்றி வந்தமையும் தெளிவாகிறது. அவர்களுள் ஐந்து தலை நாகத்தை வழிபட்ட நாகர்களும் விஷ்ணு கடவுளை வழிபட்ட வைணவர்களும் (பார்ப்பனர்கள்) முக்கிய பிரிவுகளாக இருந்துள்ளனர். ஏனையவர்கள் துர்த்தேவதைகளை வழிபடுபவர்களாக வாழ்ந்துள்ளார்கள் என்று ஆங்கில வரலாற்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இலிங்க வழிபாட்டை பின்பற்றிய இயக்கர்கள் மற்றும் ஐந்து தலை நாக வழிபாட்டை பின்பற்றிய நாகர்கள் ஆகிய பிரிவினர்களுக்கும் விஷ்ணு கடவுளை வழிபட்ட வைணவர்களுக்கும் இடையில் வழிபாடுகள் பற்றி ஏற்பட்ட கருத்து மாறுபாடுகள், மோதல்களாக மாறி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வந்துள்ளன. வழிபாடுகளைக் காரணமாக வைத்து தொடர்ச்சியாக தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன. இதனால் தேக்கன் பிரிவில் வாழ்ந்த இயக்கர் குலத்தவர்களும் நாகர் பிரிவினரும் நாட்டை விட்டு வெளியேறியமை யுக மாற்றத்தின் அடையாளங்களாக கூறப்பட்டுள்ளன.

துவாபரயுகத்தில் தென்னிந்திய தேக்கன் பிரிவில் வாழ்ந்த இலிங்கத்தை வழிபட்ட இயக்கர் குலத்தவரும் மற்றும் ஐந்துதலை நாகத்தை வழிபட்ட நாக குலத்தவரும் அங்கிருந்து வெளியேறி திரேதாயுகத்தின் பிரளய காலத்தில் நீரிணையால் பிரிக்கப்பட்டிருந்த நிலப்பரப்பில் குடியேறியமை முக்கிய நிகழ்வாக கணிக்கப்பட்டுள்ளது.

பிரிக்கப்பட்டிருந்த தீவக நிலப்பரப்பில்  வடமேற்குக் கரையில் இயக்கர் குலத்தவர்கள் குடியேறிய பகுதி ‘மாதோட்டம்’ என்றும் அவர்களது தலைநகரம் ‘லங்கா நகரி’ எனவும் அழைக்கப்பட்டது. 

இயக்கர்களின் நிர்வாகத்தில் இலிங்க வழிபாட்டையும் ஆரம்பித்திருந்தனர். அந்தப் பிரதேசம் செழிப்புள்ள பகுதியாகவும் மாறியிருந்தது.

சமகாலத்தில் ஐந்துதலை நாகத்தை வழிபட்ட நாகர்களும் இயக்கர்கள் குடியேறியிருந்த மாதோட்டம் நிலப் பிரிவுக்குத் தெற்கே குடியேறியதோடு இராஜதானியையும் அமைத்திருந்தனர். அந்தப் பிரதேசம் “நாகதாழ்வு” என அழைக்கப்பட்டதாக தெரிய வருகிறது. அதன் புராதன பெயர் ஆய்வுக்குரியதாகும்.

குவேரன் : அக்காலத்தில் தென்னிந்திய தேக்கன் பிரிவிலிருந்த புலஸ்திய முனிவருடைய பேரனான குவேரன் ஆகாயத்தேரில் வான் மார்க்கமாக லங்கா வந்து, யுத்த உயிரிழப்புகள் எதுவும் இன்றி மாதோட்ட நிர்வாகத்தை பொறுப்பேற்றுக்கொண்டார். நிர்வாகத்தை நடத்திய இயக்கர் குலத்தவர்கள் லங்கா நகரி இராஜதானியில் இருந்து வெளியேறியதோடு விரக்தியும் அடைந்திருந்தனர். இயக்கர்கள் தமது வாரிசாகப் பிறந்த ஒருவரையே லங்கா நகரி இராஜதானியில் பொறுப்பாக நியமிக்க வேண்டும் என்று திடமான எண்ணம் கொண்டவர்களாக இருந்தனர்.

இயக்கர்கள் தமது எண்ணத்தை நிறைவேற்ற போட்ட திட்டத்தின்படி, இயக்கர் குலத்தில் பிறந்த பெண் ஒருவரை குவேரனுடைய தந்தையாருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்தனர். முனிவருக்கும் இரண்டாவது மனைவிக்கும் நான்கு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களுக்கு இராவணன், கும்பகன்னன், விபீஷணன் மற்றும் சூர்ப்பனகை என்று பெயர்கள் வைக்கப்பட்டன.

இராவணனார் : தேக்கன் பிரிவில் இயக்கர் குலப் பரம்பரையில் பிறந்து, வளர்ந்த இராவணனார் நீண்டகாலம் தியானம் செய்த தவத்தின் மூலம் பல சக்திகளைப் பெற்றிருந்தவராகும். தவம் செய்து முடித்த பின்னர் தேக்கன் பிரிவுக்கு மகாயோகியான இராவணனார் திரும்பியபோது விஷ்ணு வழிபாட்டை பின்பற்றியவர்கள் அவர் மீதும் தாக்குதல்களை ஆரம்பித்திருந்தனர்.

முற்றும் துறந்து தெய்வீக மானிடராக மாறியிருந்த இராவணனார் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் யுத்தத்தை தவிர்க்க விரும்பியிருந்தார். சமய வழிபாடுகளை முன்னிறுத்தி குழப்பங்கள் நிறைந்ததாக இருந்த தேக்கன் பிரிவிலிருந்து வெளியேறி, நீரிணையால் பிரிக்கப்பட்டிருந்த தீவக நிலப்பரப்பில் தனது முன்னோடிகள் வாழும் மாதோட்டம் பிரிவுக்கு தெய்வீக மானிடரான இராவணனார் வந்து சேர்ந்தார்.

மேற்காட்டிய விபரங்கள் புராணக்கதைகளில் இருந்து தொகுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து இராவணனாருடைய லங்கா பாங்கு வரலாறு ஆரம்பிக்கிறது என்று கூறலாம்.

‘இராவணனார்’ லங்கா-பாங்கு வரலாறு  

மாதோட்டம் லங்கா நகரி இராஜதானியிலிருந்து வெளியேறியிருந்த இயக்க குலத்தவர்கள், இராவணனாரைத் தமது தலைவராக ஏற்றுக்கொண்டனர். அதனால் மாதோட்டம் லங்கா நகரி இராஜதானியில் ஆட்சிக்குப் பொறுப்பாக இருந்த குவேரனும், யுத்தம் செய்யாமல் தனது செல்வங்களையும் அதிகாரத்தையும் இராவணனாரிடம் கையளித்தார்.

குவேரனுடைய செல்வங்களையும் ஆகாயத்தேரையும் மலர்த்தோட்டங்களையும் பாதுகாக்கும் பொறுப்பை இராவணனார் ஏற்றுக்கொண்டார். இதனால் இயக்கர் குலத்தினர் ‘இரட்சதர்கள்’ என அழைக்கப்பட்டனர். லங்காவில் இயக்கர் குலத்தவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளில் அவர்கள் “இரட்சதர்கள்” என அழைக்கப்பட்டுள்ளனர். இதனை “லங்கா பாங்கு வரலாறு” என்று கூறலாம்.

இலிங்க வழிபாடும் இராவணனாரும் :

இராவணனார் நிர்வாகத்தில் இலிங்க வழிபாடு மேலும் வளர்ச்சி கண்டது.

அவரது ஆட்சியில் தீவகத்தைச் சுற்றி இடம்பெற்ற கப்பல் போக்குவரத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார். இதற்கு அடையாளமாக தீவகத்தைச் சுற்றி வடமேற்குக் கரையிலும் தென்திசை மற்றும் கிழக்குக் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் மகா-இலிங்க சிலைகளை பிரதிஷ்டை செய்திருந்தமையும் ஆய்வுகளில் வெளிவந்துள்ளன. இலங்கை வரலாற்றில் வடமேற்குக் கரையில் மாதோட்டம் - லங்கா நகரி இராஜதானியில் நிர்வாகம் செலுத்திய இராவணனார் இலிங்க வழிபாட்டை வளர்த்ததோடு அதனை மக்கள் மத்தியில் பிரபலம் அடையவும் செய்திருந்தார்.

இராமர் பிறப்பு : 

லங்காவில் இராவணனாரது இலிங்க வழிபாட்டு வளர்ச்சியும் கப்பல் போக்குவரத்திற்கான அதிகாரமும் விஷ்ணு வழிபாடு சிறப்புற்றிருந்த வடஇந்திய அயோத்தி இராஜதானிக்கு பெரும் இடையூறாக இருந்தன. இதனால் லங்கா மீது படையெடுத்து அதனைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, அயோத்தி அரசவையில் ஆலோசகர்களாக இருந்த ரிஷிகளும் அமைச்சர்களும் தீர்மானித்தனர்.

வரவிருந்த கலியுகத்துக்கு ஏற்ப அயோத்தி தசரத சக்கரவர்த்திக்கு மனித குலத்தில் நான்கு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் மூத்தவரான இராமரை அயோத்தி இராஜதானிக்கு சக்கரவர்த்தியாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. சக்கரவர்த்தியாக இராமர் முடிசூடுவதற்கு முன்னர் அயோத்தி இராஜதானிக்கு இடையூறாக இருக்கும் தென்திசைப் பிரிவுகளையும் இலிங்க வழிபாட்டை சிறப்படையச் செய்து இராவணனார் ஆட்சி நடத்தும் லங்கா நாட்டையும் அயோத்தி இராஜதானிக்குக் கீழ் கொண்டு வரவேண்டும் எனவும் அதற்கான காலக்கெடு 14 வருடங்கள் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

ரிஷிகளின் ஆலோசனைப்படி, மனிதகுல இராமர் தபசிகள் போல் மரவுரி தரித்து, தனது மனைவி சீதை மற்றும் சகோதரர் இலட்சுமணன் ஆகியோருடன் தென்திசை நோக்கி புறப்பட்டு வந்தபோது தென்னிந்தியாவில் இருந்த பூர்வீகவாசிகளும் மற்றும் வானர குலத்தவர்களும் அவருடன் சேர்ந்துகொண்டனர்.

அவர்கள் தெற்கு நோக்கி வருவதையும் லங்கா மீது படையெடுக்க தயாராவதையும் இராவணனார் அறிந்துகொண்டார்.

பணயப்பொருள் : யுத்தத்துக்கான அறைகூவலை தாங்களே முந்தித்தொடுக்க வேண்டும் என்று லங்கா இராஜதானியில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கு எதிரியிடமிருந்து பணயப்பொருள் ஒன்றைக் கொண்டுவந்து தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு யுத்த அறைகூவலை விடுக்க வேண்டும் என்ற பாரம்பரியத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்துக்கு அமைய இராவணனார் தென்முனைக்குச் சென்றார். அங்கு இராமருடைய மனைவி சீதை மட்டும் தனித்திருந்தார். அவர் மீது தனது கைவிரல் கூடப் படாமல், பர்ணசாலையுடன் சேர்த்து தூக்கி வந்து மாதோட்டப் பிரிவின் லங்கா நகரி இராஜதானிக்கு கிழக்குப் பகுதியில் சிறை வைத்தார்.

படையெடுப்பு : 

இதனையறிந்த இராமர், கடலால் பிரிக்கப்பட்டிருந்த லங்கா மீது படையெடுக்கத் தயாரானார்.

இயற்கையாக பரவைக்கடலால் மூடப்பட்டிருந்த தொடுப்பைத் திருத்தி, அதன் ஊடாக லங்கா - மண்ணாறு (மன்னார்) தீவகத்தை வந்தடைந்தார்.

உயிரிழப்புகளை தவிர்க்க விரும்பிய மகாயோகி இராவணனார் இராமரை நேரடி யுத்தத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். லங்கா நிலப்பரப்பிலிருந்து பரவைக்கடலைக் கடந்து தலைமண்ணாறு பகுதியில் தீர்மானிக்கப்பட்டிருந்த யுத்தகளத்துக்கு இராவணனார் தனியாகச் சென்றார்.

நீண்ட காலம் தவம் செய்து பெற்றிருந்த சக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொண்டு, களத்தில் தனியாக நின்ற மனிதகுல இராமருடன் இராவணனார் யுத்தம் செய்ய விரும்பாமல் ஆயுதங்களையும் வீரத்தையும் நிலத்திலே போட்டுவிட்டு யுத்த களத்திலிருந்து வெளியேறினார்.

தலைமண்ணாறு தீவகத்திலிருந்து கடல் கடந்து திரும்பி வருவதற்கு முன்னர் இராவணனார் தோற்றுவிட்டார், உயிரிழந்துவிட்டார் போன்ற தகவல்கள் லங்காவில் பலவிதமாக பரவியிருந்தன. லங்கா நாடு கைப்பற்றப்பட்டு விட்டதாக தெரிவித்து வைணவத்தை ஏற்றுக்கொண்டிருந்த விபீஷணனிடம் லங்கா ஆட்சிப்பொறுப்பு அயோத்தி இளவரசரால் ஒப்படைக்கப்பட்டது.

இராவணனார் சமாதியிருந்தமை : 

லங்கா நாட்டுக்கு திரும்பி வந்த இராவணனார், லங்கா நகரி இராஜதானிக்கு செல்லாமல் வடமேற்கு கடற்கரையில் இருந்த அவரது கோட்டையொன்றில் சமாதியிருந்தார். அவருடைய ஆதரவாளர்கள், அவர் சமாதியிருந்த கோட்டைக்குள் மனித குலத்தைச் சேர்ந்தவர்களை வரவிடாமல் காவலிருந்தனர்.

அத்தோடு இராவணனாருடைய சமாதியையும் மக்கள் வழிபடத் தொடங்கியிருந்தனர்.

இராவணனாருடைய ஆதரவாளர்களின் வெளியேற்றம் : இதேநேரம் லங்கா நகரி இராஜதானிக்கு உட்பட்ட பிரதேசத்திலிருந்த இராவணனாருடைய ஆதரவாளர்களான இயக்கர் மற்றும் நாகர் குலத்தவர்கள் அங்கிருந்து வெளியேறி, லங்கா நகரிக்கு கிழக்கேயிருந்த பகுதிகளுக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் குடியேறிய பகுதிகள் மேற்குமூலை, கிழக்குமூலை என அழைக்கப்பட்டன.

கி.மு.05ஆம் நூற்றாண்டுகளில் இராவணனார் சமாதியிருந்து நீண்ட காலத்தின் பின்னர், சைவ சமயத்தின் 18 சித்தர்களில் ஒருவரான காலாங்கிச் சித்தர், லங்காவின் வடமேற்குக் கரைக்கு வந்து, இராவணனாரது சமாதியைத் தரிசிக்கச் சென்றபோது ஏற்பட்ட அனுபவங்களை அவர் வாயால் கேட்ட போகர்சித்தர், அவற்றைப் பாடல்களாக பாடியுள்ளார். இராவணனார் சமாதியிருந்தமைக்கான சான்றுகளாக போகர் சித்தர் பாடிய 17 பாடல்கள் அமைந்துள்ளன.

போகர் சித்தரால் பாடப்பட்ட பாடல்கள் வேறு வரலாறுகளில் குறிக்கப்படாமல் தவிர்க்கப்பட்டமை துரதிர்ஷ்டமானதாகும். ஆனால், போகர்சித்தர் பாடல்களே ‘இராவணனார் - லங்கா பாங்கு வரலாற்றுக்கு’ முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளன. திருமூலரின் முக்கிய சீடர்களில் ஒருவரான காலாங்கிச் சித்தர், இராவணனாருடைய சமாதிக்கு வந்து தரிசனம் செய்து, ஆசி பெற்றுச் சென்றமை இராவணனாருடைய லங்கா பாங்கு வரலாற்றில் முக்கிய அம்சமாகும்.

கி.மு.253களில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இராவணனார் சமாதியிருந்த கோட்டையையும் மாளிகைகளையும் கடல் காவு கொண்ட பின்னர் நிலப்பகுதி வெறும் திடலாக மாறியிருந்தது. இதனால் அந்த நிலப்பகுதி “மாளிகைத்திடல்” என அழைக்கப்பட்டுள்ளது.

இலிங்க வழிபாடுகள் : ஏற்கனவே வடமேற்கில் மாதோட்டம், செட்டிக்குளம்-கப்பச்சி மற்றும் சிலாபத்துறை, கோணமாமலை போன்ற இடங்களில் மகா-லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று வந்துள்ளன.

இராவணனார் சமாதியிருந்ததும் லங்கா நகரியிலிருந்து வெளியேறி கிழக்குமூலை மற்றும் மேற்குமூலைப் பகுதிகளில் குடியேறியிருந்த இரட்சதர்கள் என அழைக்கப்பட்ட இயக்கர் குலத்தவர்கள்  மற்றும் நாகர்கள் ஆகியோர் தாம் குடியேறிய பகுதிகளிலும் இலிங்க வழிபாட்டுத் தலங்களையும் ஐந்துதலை நாக வழிபாட்டையும் தொடர்ந்துள்ளமை தெளிவாகிறது.

லங்கா நகரிக்கு கிழக்கே, பாணன்கமம் பஞ்சலிங்க ஆலயம், வவுனிக்குளம் போன்ற இடங்களிலும் மேற்குமூலை (மேல்பற்று வடக்கு) ஒட்டுசுட்டான், கற்சிலைமடு போன்ற இடங்களிலும் வாவெட்டைமலை,  மண்ணாகண்டல்மலை, குருந்தனூர்மலை, கும்பகன்னன்மலை போன்ற மலைக்குன்றுகளிலும் மகாலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இலிங்க வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அநேகமான மலைக்குன்றுகளில் இடம்பெற்ற இலிங்க வழிபாடுகள் அருகி விட்டாலும், அடங்காப்பற்று மலைக் குன்றுகளில் தொடர்ச்சியாக இலிங்க வழிபாடுகள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

அடங்காப்பற்று - வன்னி வரலாறு : 

கிழக்கு மூலை, மேற்கு மூலைப் பகுதிகளில் வாழ்ந்த இயக்கர் குலத்தவர்கள் விவசாயச் செய்கையில் ஈடுபட்டனர். அதற்குத் தேவையான நீர்ப்பாசனத்தை வழங்குவதற்கான வசதிகளை நாகர்கள் செய்ததினால் செழிப்புள்ள பிரதேசமாக மாறியது.

மாதோட்டம் லங்கா நகரியில் இருந்தவர்களே கிழக்குமூலை, மேற்குமூலைப் பிரதேசங்களில் குடியேறியிருந்த காரணத்தினால் லங்கா நகரி இராஜதானிக்கு அவர்கள் திறை செலுத்தவேண்டும் எனக் கட்டளை பிறப்பித்தனர்.

அந்தக் கட்டளைக்கு அடிபணியாமல் இருந்தவர்களின் நிலப்பகுதி ‘அடங்காதவர்கள் வாழும் பிரதேசம்’ என்று அழைக்கப்பட்டது.

தென்னிந்தியாவில் இருந்து வன்னிய குலத்தவர்கள் வரவழைக்கப்பட்டு அடங்காத பிரதேசத்தில் இருப்பவர்களை அடக்கி, நிர்வாகம் செலுத்த அமர்த்தப்பட்டனர். லங்கா நகரி இராஜதானியினால் வழங்கப்பட்டிருந்த பாணன்கமம் தவிர்ந்த ஏனைய பகுதிகளை வன்னிய குலத்தவர்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. அதனால் அவர்கள் உயிரிழப்புகளைச் சந்திக்க நேரிட்டது. எஞ்சியவர்கள் நாடு திரும்பியதும் தென்னிந்தியாவிலிருந்து வந்த மாப்பாண குலத்தவர்கள் வன்னியர் பதவிகளை வகித்து, சில பிரிவுகளை நிர்வகித்து வந்தனர்.

அந்நியர் ஆட்சி ஆரம்பித்த காலத்தில் நிலப்பிரிவுகள் பிரிக்கப்பட்டு பற்றுக்கள் எனப் பதிவு செய்யப்பட்டன. அதனால் இந்தப் பிரதேசம் “அடங்காப்பற்று” எனப் பெயர் பெற்றது. அந்நியருடைய நிர்வாக காலத்தில் வன்னியனார் என்ற பதவிகள் வழங்கப்பட்ட காரணத்தினால் ‘வன்னி’ என்ற காரணப்பெயரால் அழைக்கப்பட்டது. 

அந்நியருடைய ஆட்சியில் ‘வன்னி’ என வரலாறுகளும் எழுதப்பட்டுள்ளன. அந்நியர் ஆட்சியில் ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் குறிப்புகளில் குன்றுக்கடவுள் (Rock God) என்ற பதம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். ‘மலைக்கடவுள் அல்லது குன்றுக்கடவுள்’ என்றால் அது முருகக் கடவுளையே குறிக்கும் என்பது தமிழர்களின் பொதுவான பாரம்பரியம். ஆனால், அடங்காப்பற்று வன்னிப் பிரதேசத்தின் மலைத்தொடர்களில் இலிங்க வழிபாடுகள் மலைக்குன்றுகளில் இடம்பெற்றுள்ளமை புராதன வரலாற்றின் சான்றுகளாக உள்ளன. இதனால் இந்தப் பிரதேசத்தை “இலிங்க பூமி” என  அழைப்பதும் பொருத்தமானதாகும்.

குருந்தனூர் மலை, கும்பகன்னன்மலை, வாவெட்டிமலை, மண்ணாகண்டல் மலை போன்ற மலைகளின் உச்சியில் இடம்பெற்ற இலிங்க வழிபாடுகள் பற்றி ஆங்கிலேயருடைய ஆய்வுக் குறிப்புகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை வரலாற்று ஆதாரங்களாகும். இந்தப் பிரதேசங்களில் தமிழ் பௌத்தர்களும் வாழ்ந்துள்ளார்கள் என்று ஆங்கில அறிக்கைகளில் எழுதப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கி.பி.2012ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை அடங்காப்பற்று - வன்னி பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்கள் உள்ள அநேக இடங்களுக்குச் செல்ல ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த காலத்தில் தடைகளையும் தாண்டிச் சென்று விபரங்களைச் சேகரித்து வீரகேசரிப் பத்திரிகையில் எழுதிய  111 கட்டுரைத் தொடருக்கு ‘ஒரு ஊடகவியலாளனின் ஊடறுப்பு’ என்று உபதலைப்பிட்டமை பொருத்தமானது என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.

இராவணனார் சமாதியிருந்த வரலாறு மற்றும் லங்காவில் இலிங்க வழிபாடு பற்றிய விபரங்கள் “`இராவணனார்' தெய்வீக மானிடர் (லங்கா பாங்கு - வரலாறு)” என்ற தலைப்பில் வரலாற்று நூலாக தற்போது வெளியிடப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

- இலிங்க பூமியிலிருந்து தமிழ்நிதி அருணா செல்லத்துரை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனவுத் தேசம் - அனுபவப் பகிர்வு

2025-02-07 19:09:06
news-image

வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையிலான 150ஆவது அரங்கேற்றத்தில்...

2025-02-07 10:25:38
news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-24 12:07:15
news-image

ஈழத்தமிழரங்கினை அந்திம காலம் வரை நேசித்த...

2025-01-18 16:50:18
news-image

‘இராவணனார்’ தெய்வீக மானிடர் (லங்கா பாங்கு...

2025-01-15 15:51:30
news-image

மலையக மக்களின் வாழ்வியலை, காத்திரமான சிந்தனைகளை...

2025-01-11 17:11:02
news-image

10 வயது சிறுமியின் நாட்டியப் பரிமாணம்!

2025-01-10 17:07:30
news-image

கலைகள் இருக்கும் வரை தமிழர்களின் பண்பாடும்...

2025-01-06 14:52:09
news-image

நாட்டியம் என்பது பெருங்கடல் : நான்...

2025-01-03 12:08:49
news-image

“வாழ்க்கைப் பயணத்துக்கான நம்பிக்கைத் துளியை கொடுப்பதே...

2024-12-29 13:27:25
news-image

அரச நாடக விருது விழா -...

2024-12-28 12:47:17
news-image

“சாகித்திய ரத்னா” உயர் அரச விருது...

2024-12-28 12:49:25