டி.பி.எஸ். ஜெயராஜ்
கடந்த வாரம் பிரசுரமான ' கேணல் ' கிட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் பற்றிய இந்த கட்டுரையின் முதல் பாகத்தில் விடுதலை புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட தளபதியாக இருந்த அவரை நான் 1986 நவம்பரில் ' இந்தியாவின் புரொண்ட்லைன் ' செய்திச் சஞ்சிகைக்காக பேட்டி கண்டதைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதுவே கிட்டுவுடனான கலந்துரையாடல் ஒன்று ஆங்கில சஞ்சிகை ஒன்றில் வெளியான முதல் சந்தர்ப்பமாக அமைந்தது.
அவருடனான பேட்டி குறித்து நான் குறிப்பிட்டது வாசகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பேட்டியை மீண்டும் பிரசுரம் செய்யமுடியுமா என்பதை அறிவதில் ஆர்வம்கொண்டு பல வாசகர்கள் என்னுடன் தொடர்புகொண்டார்கள். அந்த 'புரொண்ட்லைன் ' பேட்டி நீண்ட ஒன்று அல்ல என்பதால், இந்த கட்டுரைக்குள் அவருடனான கலந்துரையாடலை சேர்க்கிறேன். 38 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் கூட, விடுதலை புலிகள் இயக்கம் மற்றும் அதன் யாழ்ப்பாணத் தளபதி பற்றி சில துல்லியமான உளநோக்குகளை அது வழங்குகிறது. இதோ அந்த பேட்டி --
புரொண்ட்லைன் பேட்டி
" நாங்கள் இறப்பதற்கு தயாராயிருக்கிறோம், அவர்கள் தயாரில்லை" -- யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகளின் கிட்டுவுடன் பேட்டி.
தமிழீழ விடுதலை புலிகளின் யாழ்ப்பாணக் குடாநாட்டு பிராந்திய தளபதி அவரைப்பற்றி நிலவுகின்ற அபிப்பிராயத்துக்கு பொருத்தமில்லாத ஒரு தோற்றத்தைக் கொண்டவர். சராசரிக்கும் சற்றுக் குறைவான உயரத்தைக் கொண்ட அவர் மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பார். நெற்றிக்கு மேலே முன்தலையில் மயிர் இருக்காது. 26 வயதான கிட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் இப்போது இலங்கையில் பெரிதும் தேடப்படும் ஒரு தீவிரவாதி. விடுதலை புலிகள் பொதுவில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தை தங்களது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த நாட்களில் இலங்கையில் மிகவும் பெருமளவுக்கு பேசப்படும் ஒருவராக கிட்டு விளங்குகிறார்.
கிட்டு மிகவும் மென்மையாகவும் மரியாதையான தொனியிலும் பேசுவார். ஒரு விடயத்தை அழுத்திக் கூறவேண்டும் என்றால் சில நேரங்களில் ஒரு புன்சிரிப்புடன் சைகைகளை காட்டுவார். அதேவேளை அவரது கண்களும் கூட சிரிக்கும். ஆனால், இயக்கத்திற்குள் ஒழுங்கு, கட்டுப்பாட்டை பேணுகின்ற விடயத்தில், அவர் மிகவும் கடுமையான பேர்வழி. யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் ஒருவரை அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கும்போது ' அர் ' என்ற விகுதியைச் சேர்த்துக்கொள்வது வழக்கம் இந்தியிலே 'ஜி' யைச் சேர்த்துக் கொள்வது போன்று. கிட்டுவை கிட்டர் என்று அழைப்பார்கள். யாழ்ப்பாணத்துச் சிறுவர்கள் அவரை கிட்டு மாமா என்று அழைப்பார்கள்.
கலந்துரையாடல் ஒன்றுக்காக டி.பி.எஸ். ஜெயராஜ் அவரைச் சந்தித்தார்.
பெயரை அவர் எவ்வாறு பெற்றார்?
" நான் இயக்கத்தில் இணைந்தபோது எனக்கு வெங்கட் என்ற பெயர் கொடுக்கப்படடது. அந்தப் பெயர் வெங்கிட்டுவாக மாறி விரைவாக கிட்டுவாகியது.
கிட்டு 1978 ஆம் ஆண்டில் 18 வயது பாடசாலை மாணவனாக விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்தார். " நான் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவன். வல்வெட்டித்துறை மக்கள் 1950 களில் இருந்தே இராணுவ அடக்குமுறைக்கு முகங்கொடுக்க வேண்டியாருந்தது. கடத்தலையும் சட்டவிரோத குடிவரவையும் தடுப்பது என்ற போர்வையில் இராணுவம் எங்களை கொடுமைப்படுத்தியது. அது விடயத்தில் எதையாவது செய்ய வேண்டும் என்று எப்போதும் நான் விரும்பினேன். இந்த உணர்வுடனேயே நான் வளர்ந்தேன். அதற்கு பிறகு தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை இடம்பெற்றது. அடக்குமுறைக்கு எதிராக நான் போராட வேண்டியிருந்தது. அதனால் நான் விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டேன். பிரபாகரனும் கூட வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவரே.அப்போது நான் முழு அளவில் அரசியல் உணர்வு கொண்டவனாக இருக்கவில்லை. ஆனால், ஒரு விடுதலைப் போராளி என்ற வகையில் எனது செயற்பாடுகளின் ஊடாக அரசியல் அறிவையும் உணர்வுகளையும் பெற்றுக்கொண்டேன். போராட்டத்தின் ஊடாக என்னை நான் வளர்த்துக்கொண்டேன்."
குறிப்பிட்ட ஒரு அரசியல் தத்துவத்தை அல்லது கோட்பாட்டை ஏற்றுக்கொள்கிறீர்களா?
" நல்லது. எனக்கும் சில அரசியல் கோட்பாடுகள் இருக்கின்றன. அடிப்படையில் அது விடுதலை புலிகளின் கோட்பாடேயாகும். அதை நான் முழுமையாகப் பின்பற்றுகிறேன். நான் பெருமளவுக்கு நடைமுறைச் சாத்தியமான முறையில் சிந்திப்பவன். வெறுமனே பேசுவதை அல்லது ஆராய்வதை விடவும் செயல்சாத்தியமுடைய நடவடிக்கைகளை நான் விரும்புபவன். அதுவே முக்கியமானது. நான் தத்துவங்களைப் பற்றி பேசுவதில்லை. எனக்கு தத்துவம் தெரியாது. செயலில் மாத்திரமே எனக்கு நம்பிக்கை."
நான் கிட்டுவிடம் அவரது நடைமுறைச் சாத்தியத்தை மையமாகக்கொண்ட அணுகுமுறைக்கு உதாரணம் ஒன்றைக் கூறுமாறு கேட்டேன். அவர் அதற்கு சாதிப் பிரச்சினையை பிரச்சினையை கூறினார்.
விடுதலை புலிகளின் அன்றாட வாழ்வில் சாதி என்ற விடயத்துக்கு இடமில்லை என்று அவர் கூறினார். ஆனால், இந்த பிரச்சினையில் பழமைவாத யாழ்ப்பாணச் சமூகத்தின் சிந்தனை தொடர்பில் கிட்டுவின் அணுகுமுறை வேறுபட்டது. " தாழ்த்தப்பட்டது என்று சொல்லப்படுகின்ற ஒரு சாதியைச் சேர்ந்த தகுதிவாய்ந்த உறுப்பினர் ஒருவர் எமது இயக்கத்தில் இருந்தால் , சாத்தியமாகும் வேளைகளில் எல்லாம் அவரை நான் ஒரு பிரதேசத்தின் பிரதிநிதியாக அல்லது முகாம் ஒன்றின் பொறுப்பாளராக நியமிக்கிறேன். அதனால் பொதுவில் சமூகம் அதன் தவறான எண்ணங்களைக் கைவிட்டு அவருடன் விவகாரங்களைக் கையாள வேண்டியிருக்கும். சமூகங்களுக்கு இடையில் பெருமளவுக்கு புரிந்துணர்வும் உறவுமுறையும் வளரும்."
" விடுதலை புலிகள் இயக்கம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது என்ற ஒரு உணர்வு குறிப்பிட்ட சில பிரிவினர் மத்தியில் இருக்கிறது " என்று கிட்டுவிடம் நான்கூறினேன்.
" ஆம், அவ்வாறு சிலர் கூறுகிறார்கள். சிலர் ஒரு படி மேலே சென்று எமது இயக்கத்தை குறிப்பிட்ட ஒரு சாதியே அதன் மேலாதிக்கத்தில் வைத்திருக்கிறது என்று கூறுகிறார்கள். சமூகத்தின் சகல பிரிவுகளும் எமககுக் கீழ் அணிதிரளுவதை தடுப்பபதை தடுக்கும் நோக்குடன் இதை சிலலர் தவறான பிரசாரங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். ஆனால், பிரபாகரன் தனது இயக்கத்தை ஆரம்பித்தபோது என்ன நடந்தது என்பதை உங்களுக்கு கூறுகிறேன். முதலில் இயக்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் யாராக இருந்திருப்பார்கள்? அவரது நண்பர்கள், பள்ளித் தோழர்கள், உறவினர்கள், அயலவர்கள் மற்றும் அவரது கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருப்பார்கள் இல்லையா? அதனால் அவர்கள் எல்லோரும் இயல்பாகவே வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருப்பர். எமது வளர்ச்சி படிப்படியானது. நாளடைவில் மற்றையவர்களும் இணைந்து கொண்டார்கள்.
" தலைவர்களை நியமிப்பதில் மூப்பு முறைமை ஒன்று எம்மம் இருந்ததால், வல்வெடடித்துறையைச் சேர்ந்த ஆரம்பக்கட்ட அணியினர் தலைமைப் பதவிகளில் இருக்கிறார்கள். ஆனால், வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் அத்தகைய பதவி நிலைகளில் இருக்கிறார்கள். மூப்பு மற்றும் ஆற்றல் ஊடாக மற்றையவர்கள் விரைவில் முன்னுக்கு வருவார்கள். அதற்கு பிறகு இந்த வல்வெட்டித்துறை படிமம் காணாமல்போய்விடும். ஆனால், சாதி தொடர்பான குற்றச்சாட்டு முற்று முழுதாக தவறானது."
விடுதலை புலிகள் இயக்கத்தில் தலைமைத்துவ போட்டி எதுவும் இல்லையா?
" இல்லை. ஏன் என்று உங்களுக்கு நான் சொல்கிறேன். விடுதலை புலிகளின் போராட்ட நடவடிக்கைகளில் இறந்தவர்களை நோக்குவீர்களாக இருந்தால், அவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் மேல்மட்ட அல்லது கீழ் மட்டங்களைச் சேராந்த தலைவர்களாக இருப்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். இதற்கு காரணம் வெறுமனே உத்தரவுகளை பிறப்பிப்பதில் அல்ல, எமது போராளிகளுக்கு தலைமைதாங்கிச் செல்வதில் நாம் நம்பிக்கை கொண்டவர்கள். அதனால், எமது இயக்கத்திற்குள் போட்டி இருப்பதாக இருந்தால் கூட அது இரு வசதியான வாழ்வுக்கானதாக இருக்கமுடியாது. மரணத்தை துணிச்சலுடன் எதிர்கொள்வதற்கான போட்டியாக மாத்திரமே அது இருக்க முடியும். அதனால் போட்டி என்பது வாழ்வதற்கா அல்லது சாவதற்கா என்பதற்கேயாகும்."
இந்த கட்டத்தில் நான் கிட்டுவிடம் அவர் எப்போதுமே ஆபத்துக்கு மத்தியில் நிற்பதாக யாழ்ப்பாண வாசிகள் சிலர் கூறியதைப் பற்றி கேட்டேன். ஒரு பிக் அப் வாகனத்தில் இருந்து கொண்டு ஒரு ஹெலிகொப்டரை நோக்கி கி்ட்டு சுட்டதைக் கண்டதாக ஒருவர் கூறினார். யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்து ஷெல் தாக்குதல் இடம்பெறுகின்ற வேளைகளில் எல்லாம் கிட்டு களத்தில் நிற்பார். தேவையில்லாமல் உங்களை நீங்கள் ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் சூழ்நிலைக்கு உள்ளாக்குகிறீர்கள் இல்லையா என்று நான் அவரிடம் கேட்டேன்.
அதற்கு அவர் அலட்சியமாகப் பதிலளித்தார். " எவ்வாறோ நான் இதுவரையில் அதிர்ஷ்டசாலியாக இருந்திருக்கிறேன். நான் இப்போது கூறப்போதே உங்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கக்கூடும். ஆனால், இஸ்ரேலிய ஜெனரல் ஒருவரின் ஆலோசனையையே நான் பின்பற்றுகிறேன். அந்த ஆள் ஒருபோதுமே போர் நிலைகளுக்கு பின்னால் நின்று உத்தரவுகளை பிறப்பித்ததில்லை என்று நீண்டகாலத்துக்கு முன்னர் நான் வாசித்தேன். அவர் எப்போதுமே முன்னரங்கத்தில் நின்றவாறு " முன்னே வாருங்கள்.... எனக்கு உதவியாக நில்லுங்கள் " என்றுதான் சத்தமிடுவார். பின்னரங்கத்தில் நின்றுகொண்டு " முன்னேறிச் செல்லுங்கள் " என்று அவர் ஒருபோதும் சொன்னதில்லை.
அவர் எவ்வாறு தனது அணியினர் மத்தியில் ஒழுங்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்தினார்?
" ஒருவரை நாங்கள் உடனடியாகவே படையணிகளில் சேர்த்துக் கொள்வதில்லை. அவரை அவதானித்து முதலில் சாதாரண பணிகளுக்கு அனுப்புவோம். அவர் தனது ஆற்றலை நிரூபித்தால் பிறகு பெரிய பொறுப்புக்கள் அவருக்கு கொடுக்கப்படும். இறுதியில் ஆயுதப் பயிற்சி வழங்கப்படும்."
" எனது ஆட்கள் ஒழுங்கு கட்டுப்பாடு இல்லாதவர்களாக இருந்தால், அது எனது தவறே நான் கட்டுப்பாடு இல்லாதவனாக இருந்தால் எனது தலைவர் பிரபாகனில்தான் தவறு. எமது ஒழங்கு கட்டுப்பாட்டு தராதரங்கள் காரணமாகவே நாம் வேறு இயக்கங்களில் இருந்து பிரிந்து வருபவர்களை அல்லது ஏனைய குழுக்களில் இருந்துவரும் அதிருப்தியாளர்களைச் சேர்த்துக் கொள்வதில்லை. அதேபோன்றே, எமது உறுப்பினர்களில் ஒருவர் தன்னல் எம்முடன் செயற்படமுடியாது என்று உணர்ந்தால் அவர் எம்மை விட்டு விலகிச் செல்வதற்கு சுதந்திரம் உண்டு. ஆனால், அவர் வேறு ஒரு குழுவில் இணையவோ அல்லது புதிய இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கவோ கூடாது."
தலைவர் பிரபாகரனுக்கும் களத் தளபதிகளுக்கும் இடையிலான உறவு நன்றாக இருந்ததாக கிட்டு கூறினார். அவர்கள் இடையறாது தொடர்பில் இருந்தார்கள். இடைக்கிடை ஆரோசனைகலப்பதற்காக அவரைச் சந்தித்தார்கள். அவர்களது கருத்துக்களை தலைவர் பிரபாகரன் மிகுந்த அக்கறையுடன் கவனத்தில் எடுத்தார்.
நான் கிட்டுவிடம் சமாதான முயற்சிகள் பற்றி கேட்டேன்.
" திம்புவில் வெளிப்படுத்தப்பட்ட எமது கோட்பாடுகளில் நாம் உறுதியாக நிற்கிறோம். இவை எமது குறைந்தபட்சக் கோரிக்கைகள். ஜெயவர்தன அவற்றுக்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை. எனவே எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை."
தனது போராளிகளினதும் அரச துருப்புக்களினதும் ஒப்பீட்டளவிலான பலம் குறித்து கிட்டு மனந்திறந்து வெளிப்படையாகப் பேசினார்." அவர்களிடம் கூடுதலான ஆட்கள் இருக்கிறார்கள். சிறந்த ஆயுதங்களும் தளபாடங்களும் இருக்கின்றன. ஆனால், எம்மிடம் தார்மீக பலமும் துணிச்சலுமே இருக்கிறது. நாம் சாவதற்கு தயாராக இருக்கிறோம். அவர்கள் அதற்கு தயாராக இல்லை. அவர்கள் முகாம்களில் இருந்து வெளியில் வருவதில்லை. ஏனென்றால், கடைசிப்போராளி இறக்கும் வரை நாம் போராடுவோம் என்பது தங்களுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படும் என்பதும் அவர்களுக்கு தெரியும்."
புலிகளின் குரல்
யாழ்ப்பாணக் குடாநாட்டின் பெருமளவு பகுதிகளை விடுதலை புலிகள் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த ஒரு நேரத்திலேயே கிட்டுவுடனான எனது இந்த கலந்துரையாடல் ஆங்கிலத்தில் பிரசுரமானது. கிட்டு அதை தமிழில் மொழிபெயர்ப்புச் செய்வித்தார். அது " புலிகளின் குரல் " என்று அறியப்பட்ட விடுதலை புலிகளின் ஒலிபரப்புச் சேவையில் ஒலிபரப்பானது. பேட்டி கண்டவருக்காகவும் பேட்டியை வழங்கியவருக்காகவும் இரு விடுதலை புலிகள் இயக்கப் போராளிகள் குரல் கொடுத்தார்கள்.
பிரபாகரனுக்கும் கிட்டுவுக்கும் இடையில் பகைமையை ஏற்படுத்தும் ஒரு சிறுபிள்ளைத்தனமான முயற்சியாக அந்த பேட்டியின் சில பகுதிகளை திரிபுபடுத்தி அன்று சென்னையில் இயங்கிக்கொண்டிருந்த போட்டிக் குழுக்கள் ஒரு அநாமதேய துண்டுப்பிரசுரமாக எவ்வாறு வெளியிட்டன என்பதை பல வருடங்கள் கழித்து விடுதலை புலிகளின் தத்துவவாதியும் அரசியல் மதியூகியுமான பாலா அண்ணை என்ற அன்ரன் பாலசிங்கம் என்னிடம் கூறினார்.
ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போனறு பண்டிதர் என்ற முன்னாள் யாழ்ப்பாணத் தளபதி ரவீந்திரன் யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகளின் இராணுவப் பிரிவுக்கும் அரசியல் பிரிவுக்கும் பொறுப்பாக இருந்தார். கிட்டுவும் திலீபன் என்ற இராசையா பார்த்திபனும் முறையே இராணுவப் பிரிவுக்கும் அரசியல் பிரிவுக்கும் பொறுப்பாக பண்டிதரால் நியமாக்கப்பட்டனர். திலீபன் 1987 செப்டெம்பரில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
கிட்டுவும் திலீபனும்
பண்டிதர் 1985 ஜனவரியில் கொல்லப்பட்டதை அடுத்து கிட்டு விடுதலை புலிகளின் யாழ்ப்பாணத் தளபதியானார். அரசியல் பிரிவு திலீபனின் பொறுப்பில் ஒப்படைக்கப்படைக்கப்பட்டது. திலீபனை ஒப்பீடடளவில் சுதந்தியமாக இயங்குவதற்கு கிட்டு அனுமதித்தார் அன்றைய நாட்களில் இருவரும் விடுதலை புலிகளை மேம்படுத்துவதற்கு ஒன்றாக தீவிரமாக இயங்கினர்.
விடுதலை புலிகள் இராணுவப் பிரிவு என்றும் அரசியல் பிரிவு என்றும் பிரிக்கப்பட்ட போதிலும், இரு பிரிவுகளையும் சேர்ந்த போராளிகள் சண்டைகளில் பெரும்பாலும் ஒன்றாகவே செயற்பட்டனர். ஆயுதப் போராளிகளுக்கும் அரசியல் செயற்பாட்டளர்களுக்கும் இடையில் ஒரு கண்டிப்பான பிளவு இருக்கக்கூடாது என்பதே கிட்டுவின் நிலைப்பாடாக இருந்தது. கண்டிப்பான பிளவு ஒன்று இருந்தால் போராளிகள் மத்தியில் தேவையற்ற பொறாமை ஏற்படவும் அதன் விளைவாக ஆயுதப் போராளிகள் " அறிவிலிகள் " என்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் " கோழைகள் " என்றும் ஒரு ஆரோக்கியமற்ற ஒரு பாரம்பரியமும் வளர்ந்துவிடும். அதனால், திலீபன் உட்பட அரசியல் செயற்பாட்டாளர்கள் இராணுவ நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றனர்.
விடுதலை புலிகளின் யாழ்ப்பாண அரசியல் பிரிவின் தலைவர் என்ற வகையில் திலீபன் கிட்டுவின் இணக்கத்துடனும் ஒத்துழைப்புடனும் புதிய வழிமுறையைக் கடைப்பிடித்தார். யாழ்ப்பாண குடாநாடு 23 அரசியல் உப பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு அரசியல் பொறுப்பாளரின் தலைமையில் செயற்பட்டன. சகல அரசியல் பொறுப்பாளர்களும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வெவ்வேறு இடங்களில் திலீபனின் தலைமையில் சந்திப்பார்கள். அறிக்கைகளும் மீளாய்வுகளும் சமர்ப்பிக்கப்பட்டு சகல பிரச்சினைகளும் விரிவாக ஆராயப்படும். அதற்கு பிறகு திலீபன் அரசியல் பிரிவின் நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றம் குறித்து கிட்டுவுக்கு விரிவாக விளக்கமளிப்பார்.
கிட்டு -- திலீபன் இரட்டையர்களினால் இன்னொரு அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைக்கப்படும் முறைப்பாட்டு பெட்டிகளின் ஊடாக மக்கள் தங்களது முறைப்பாடுகளை விடுதலை புலிகளுக்கு தெரிவிக்கக்கூடிய நடைமுறை ஒன்று வகுக்கப்ட்டது. மக்கள் தங்களது பிரச்சினைகளை எழுதி அந்த பெட்டிகளில் போடமுடியும். அநாமதேய முறைப்பாடுகளும் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய யாழ்ப்பாண மக்கள் விடுதலை புலிகள் இயக்கப் போராளிகளைப் பற்றிய முறைப்பாடுகளையும் கூட சமர்ப்பித்தனர். இந்த முறைப்பாடுகளின் விளைவாக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்பட்டு போராளிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விடுதலை புலிகள் மக்களுக்கு ஓரளவுக்கேனும் பொறுப்புக்கூறுவதற்கு தாங்களாக ஏற்படுத்திக்கொண்ட முதல் சந்தர்ப்பமாக இது அமைந்தது.
ஊடகங்கள் மீதான மதிப்பு
விடுதலை புலிகளின் முக்கியமான தலைவர்கள் பலரைப் போலன்றி கிட்டு ஊடகங்களை மதித்து நடந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்த மூத்த பத்திரிகையாளர்களுடன் அவர் தனிப்பட்ட முறையில் தொடர்புகளைப் பேணினார். குடாநாட்டில் இருந்த ஊடகங்களுடனும் ஊடகவியலாளர்களுடனும் தொடர்பாடலைச் செய்யும் பொறுப்பு விடுதலை புலிகளின் இரு உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கிட்டுவும் தனது " ஆட்சிக்காலத்தில் " யாழ்ப்பாணத்தில் பல ஊடக அமைப்புக்களை நிறுவினார். அது விடயத்தில் அவருக்கு திலீபன் சிறந்த முறையில் உதவியாகவும் ஆதரவாகவும் செயற்பட்டார். " புலிகளின் குரல் " ஒலிபரப்புச் சேவை மற்றும் " நிதர்சனம் " தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு புறம்பாக, " களத்தில் ", சுதந்திரப்பறவைகள் " என்ற இரு பிரசுரங்களும் வெளியிடப்பட்டன. யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகளின் ஊடக விவகாரங்களில் திலீபன் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை வகித்தார்.
1986 ஆம் ஆண்டில் பிரபலமான திரைப்பட நடிகரும் அரசியல் கட்சியின் தலைவருமான விஜய குமாரதுங்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் விளைவாக கிட்டுவும் யாழ்ப்பாணத்தில் அன்று விடுதலை புலிகளின் பேச்சாளராக இருந்த ரஹீமும் பெருமளவு பிரசித்தத்தை பெற்றனர். இந்த கட்டுரையின் முதல் பாகத்தில் குறிப்பிட்டதைப் போன்று ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் தலைவர் விஜயவுடன் ஒஸீ அபேகுணசேகரவும் பீலிக்ஸ் பெரேராவும் யாழ்ப்பாணம் வந்திருந்தனர். நல்ல முறையில் வரவேற்கப்பட்ட அவர்கள் கிட்டுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விஜயவின் யாழ்ப்பாண விஜயம் மற்றும் கிட்டுவுடனான அவரின் சந்திப்புகளை காண்பிக்கும் வீடியோ தென்னிலங்கையில் பரவலாக விநியோகத்தில் இருந்தது.
விஜய குமாரதுங்கவின் யாழ்ப்பாண விஜயம்
விஜய குமாரதுங்க யாழ்ப்பாணம் விஜயம் எவ்வாறு நடந்தது என்பது ஒரு சுவாரஸ்யமான கதை. 1986 ஆம் ஆண்டில் விடுதலை புலிகள் இலங்கைப் படைவீரர்கள் இருவரைப் பிடித்து தங்களது காவலில் வைத்திருந்தனர். தமிழர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பில் அனுதாபத்தைக் கொண்ட ஒரு முக்கியமான சிங்கள அரசியல் தலைவரிடம் அந்த இரு படைவீரர்களையும் ஒருதலைப்பட்சமாக விடுதலை செய்வதன் மூலமாக சில அரசியல் அனுகூலங்களைப் பெறுவதற்கு விடுதலை புலிகள் தீர்மானித்தார்கள். இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாசுதேவ நாணக்காரவைப் பற்றி யோசித்தார். ஆனால், கிட்டுவும் ரஹீமும் விஜயவை சிறந்த தெரிவு என்று உணர்ந்தனர்.
பிறகு என்ன நடந்தது என்பதை சில வருடங்கள் கழித்து ரஹீம் என்னிடம் விபரமாகக் கூறினார். ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த விடுதலை புலிகளிடம் விஜயவின் தொலைபேசி இலக்கம் கூட இருக்கவில்லை. ரஹீம் தனது அடையாளத்தை வெளிக்காட்டாமல் முன்னாள் அமைச்சர் ரி.பி. இலங்கரத்னவுடன் தொலைபேசியில் பேசி விஜயவின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக்கொண்டார். பிறகு அவர் விஜயவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னை யார் என்று கூறினார். அதை ஒரு ஏமாற்று என்று சந்தேகித்த விஜய திருப்பி ரஹீமுடன் தொலைபேசியில் பேசினார்.
பல தொலைபேசி அழைப்புகளுக்கு பிறகு அது விடுதலை புலிகள் தான் என்று நம்பினார். அத்துடன் இரு படைவீரர்களையும் விடுதலை செய்வதற்கு விடுதலை புலிகள் விரும்புவது குறித்தும் அவர் மகிழ்ச்சியடைந்தார். விஜயவை மனைவி சந்திரிகா குமாரதுங்கவுடன் யாழ்ப்பாணத்துக்கு வருமாறு விடுதலை புலிகள் அழைப்பு விடுத்தனர். ஆனால், சில தனிப்பட்ட காரணங்களுக்காக சந்திரிகாவினால் வரக்கூடியதாக இருக்கவில்ரை. அதனால் ஒஸீ அபேகுணசேகரவுடனும் யாழ்ப்பாணம் வருவதற்கு விஜய திட்டமிட்டார். பிறகு பீலிக்ஸ் பெரேராவும் அவர்களுடன் இணைந்து கொண்டார்.
மூவருக்கும் விடுதலை புலிகள் அமோக வரவேற்பு அளித்தனர். காவலில் இருந்த படைவீரர்களையும் அவர்கள் சந்தித்தனர். அந்த இரு படைவீரர்களின் குடும்பத்தவர்களுடனும் சில மதத் தலைவர்களுடனும் சேர்ந்து விஜய மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. குடும்பத்தவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் முன்னிலையில் விஜரவிடம் படைவீரர்களை ஒப்படைப்பது என்பதே ஏற்பாடு என்று கூறப்பட்டது
விஜயவின் யாழ்ப்பாண விஜயமும் விடுதலை புலிகளுடனான அவரின் ஊடாட்டங்களும் விரிவான முறையில் ஔிப்பதிவு செய்யப்பட்டு வீடியோ கசட் தயாரிக்கப்பட்டது. அந்த நாட்களில் இன்டர்நெற் கிடையாது. இப்போதுள்ளதைப் போன்று ' வைறல்' என்ற சொல்லும் மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. ஆனால், விடுதலை புலகளைச் சந்திப்பதற்கு விஜய யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட விஜயம் பற்றிய வீடியோ மிகவும் பிரபல்யமானது. அதன் பிரதிகள் பரவலாக விநியோகிக்கப்பட்டன. இரவோடிரவாக விஜய ஒரு பெரிய அரசியல் ஹீரோவாக மாறினார். அந்த நேரத்தில் இன உறவுகள் மேம்படுவதற்கு வீடியோ உதவியது என்பது முக்கியமாக கவனிக்கத்தக்கது.
லலித் அத்துலத்முதலி கவலை
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலிக்கும் கவலையாகப் போய்விட்டது. விஜயவை மலினப்படுத்தி படைவீரர்களின் விடுதலைக்கான ' பெருமையை ' தனதாக்கிக் கொள்ளலாம் என்று லலித் நினைத்தார். விடுதலை புலிகளுடனான தனது தொடர்பு வழிகளைப் பயன்படுத்தி படைவீரர்களின் விடுதலைக்கு பிரதியுபகாரமாக பாதுகாப்பு படைகளின் காவலில் இருந்த இரு விடுதலை புலிகள் சந்தேகநபர்களை விடுதலை செய்ய முன்வருவதாக லலித் அறிவித்தார். எந்தவிதமான பிரதியுபகாரத்தையும் எதிர்பார்க்காமல் இரு படைவீரர்களையும் விஜயவிடம் விடுவிப்பதற்கு விடுதலை புலிகள் தயாராக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, வடக்கில் இன்னொரு ' திருப்பம் ' ஏற்பட்டது. விடுதலை புலிகளின் சிரேஷ்ட தலைவரும் தனது நெருங்கிய நண்பருமான அருணா யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை காலந்தாழ்த்தியே கிட்டு தெரிந்துகொண்டார். விடுதைலை புலிகளின் படகு ஒன்று மது இலங்கை கடற்படையின் கப்பல் கடலில் வைத்து நடத்திய தாக்குதலில் அருணா பலியாகி விட்டார் என்றே நம்பப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த அருணா விடுதலை புலிகள் இயக்கத்தின் மிகவும் மூத்த ஒரு தலைவர். விடுதலை புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட தளபதியாகவும் அவர் செயற்பட்டவர். ஆனால், விடுதலை புலிகளின் படகு ஒன்று கடலில் கவிழ்ந்ததை அடுத்து கடற்படையினரால் பிடிக்கப்பட்டபோது அருணா தனது உண்மையான அடையாளத்தை கடற்படையிடம் வெளியிடவில்லை. ' குஞ்சு குமார்' என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட அருணா புலிகள் தங்களின் படகை ஓட்டுவதற்காக தன்னை பணம் கொடுத்து அமர்த்தியதாக கூறினார். அதனால் தங்களிடம் பிடிபட்டவர் விடுதலை புலிகளின் முக்கியமான ஒரு தலைவர் என்பது பாதுகாப்பு படைகளுக்கு தெரியாத நிலையில் அருணா இராணுவ காவலில் இருந்துவந்தார்.
திட்டத்தை மாற்றிய கிட்டு
அருணா இராணுவக் காவலில் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதிசெய்து கொண்டதும் கிட்டுவின் திட்டம் மாறியது. விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவரை விடுவிக்கத் தயாராயிருப்பதாக அத்துலத்முதலி செய்த அறிவிப்பை பய்படுத்தி கிட்டு இரகசியமாகப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார். இரகசியப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருந்த அதேவேளை விஜய குமாரதுங்க இரு படை வீரர்களின் உறவினர்களுடனும் மதத்தலைவர்களுடனும் யாழ்ப்பாணம் வந்துசேர்ந்தார்.
அவர்களுக்கு விடுதலை புலிகள் அன்பான வரவேற்பு அளித்தனர். படைவீரர்களை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டதன் பிரகாரம் படைவீரர்களை விடுதலை செய்வதற்கு கிட்டு மறுத்தார்.
ஏமாற்றமடைந்த விஜய வெறுங்கையுடன் கொழும்பு திரும்பினார். விஜயவுக்கு ஏற்பட்ட அசௌகரியத்தினால் குதூகலமடைந்த தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி விடுதலை புலிகளுடனான கைதிகள் பரிமாற்றத்தை துரிதப்படுத்தினார். ஆனால், குஞ்சு குமார் என்பது உண்மையில் அருணா என்பது தெரியவந்தபோது அத்துலத்முதலிக்கு பெரிய அவமானமாகப் போய்விட்டது. அந்த நேரத்தில் அதுவரையில் பிடிபட்ட விடுதலை புலிகளின் மிகவும் மூத்த தலைவர் ஒருவரை விடயம் அறியாமல் அரசாங்கம் நழுவவிட்டது.
அருணா என்பதை தெரியாமல் அவரை விடுதலை புலிகளிடம் அரசாங்கம் ஒப்படைத்த செய்தியை சகல ஊடகங்களையும் முந்திக்கொண்டு ' த இந்து ' பத்திரிகையின் அன்றைய கொழும்பு செய்தியாளர் என்ற வகையில் நானே முதலில் வெளியிட்டேன். எனக்கு இதை கூறியது கிட்டுவே. அவருக்கு அருணாவின் விடுதலை பெரியதொரு வெற்றி.
பிறகு எனக்கு அத்துலத்முதலியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. என்ன நடந்தது என்பதை நான் கூறியபோது அவர் உள்ளூர சிரித்துச் சமாளித்துக்கொண்டார்.
யாழ்ப்பாணத்தின் முடிசூடா மன்னன்
அருணா விவகாரத்துக்கு பிறகு யாழ்ப்பாண மக்கள் மத்தியில் கிட்டுவின் செல்வாக்கும் மதிப்பும் துரிதமாக உயர்ந்தது. அப்போது அவர் யாழ்ப்பாணத்தின் முடிசூடாமன்னன். ஆனால் விதி வேறுவிதமாக அமைந்து விட்டது. யாழ்ப்பாண நகர மத்தியில் கிட்டுவை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியில் தனது ஒரு காலை அவர் இழந்தார். அந்த தாக்குதலை அறிந்து சீற்றமடைந்த அருணா யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரெலோ , ஈ.பி.ஆர். எல்.எவ். இயக்க உறுப்பினர்கள் பலரை படுகொலை செய்தார். அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதை இந்த கட்டுரையின் மூன்றாம் பாகத்தில் பார்ப்போம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM