புதிய அரசாங்கத்தின் நெறிமுறைகளுடன் அரச பொறிமுறைகள் பொருந்தியமைவது அவசியம்

15 Jan, 2025 | 10:08 AM
image

கலாநிதி ஜெகான் பெரேரா

கடந்த காலத்தில் இருந்து அரசாங்கம் இரு தொகுதி பிரச்சினைகளைப் பெற்றிருக்கிறது. ஒன்று உள்ளகமானது. மற்றையது வெளியகமானது. ஆனால், இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புபட்டவை. வெளியக பிரச்சினைகளில் பலவீனமான நிலையில் இருக்கும் பொருளாதாரமும் அடங்குகிறது. எந்த தராதரத்தில் பார்த்தாலும் பொருளாதாரம் இப்போது சீர்செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

ஆனால், அபிவிருத்தியின் பயன்கள் பரந்தளவில் விநியோகிக்கப்படாத பட்சத்தில் அரசாங்கம் அரசாங்கம் பொதுமக்களின் அதிருப்திக்குள்ளாகும்  போக்கு அதிகரிக்கும். சர்வதேச கடன்வழங்குனர்களுடன் கடந்த அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தைகளும் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையும்  அரசாங்கம் தனக்கு அனுகூலமான முறையில் தந்திரோபாயத்தைக் கடைப்பிடிப்பதற்கு இடமளிப்பதாக இல்லை. 

பேச்சுவார்த்தைகள் மூலம் கடனில் செய்யப்பட்ட குறைப்பு ஒட்டுமொத்த கடனில் சுமார் 20  சதவீதமேயாகும். இலங்கையைப் போன்று கடன் பிரச்சினையில் இருக்கின்ற நாடுகளினாால் பெறப்பட்டுவந்திருக்கும் கடன் குறைப்புடன் ஒப்பிடும்போது இது கணிசமானளவுக்கு குறைவானதாகும். ஆர்ஜன்டீனா 2020 ஆம் ஆண்டில் 65  பில்லியன் கோடி அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு பிளைமுறிகளை மறுசீரமைப்பு செய்ததுடன் அடுத்த தசாப்தத்தில் திருப்பிச் செலுத்தவேண்டிய கடனில் ஐம்பது சதவீத குறைப்பையும் பெற்றுக் கொண்டது.

அரசாங்கத்துக்கு இருக்கும் உள்ளகப்  பிரச்சினைகள் அரசியல் அதிகாரப் பதவி நிலைகளில் இருப்பவர்கள்  ஆட்சிமுறைக்கு பெரும்பாலும் புதியவர்களாக இருப்பதன் விளைவாக வருபவையாகும். இலங்கையில் இருப்பதைப் போன்ற சிக்கலான நிலைவரங்களில் தீர்மானங்களை மேற்கொள்வதில் உள்ள சூட்சுமங்களுடன் அவர்கள் பரிச்சயமாகிக் கொள்வதற்கு காலம் செல்லும். 

இதே பதவி நிலைகளில் முன்னர் இருந்தவர்களின் சுயநலப்போக்கு மற்றும் ஊழல் நடைமுறைகளின் விளைவாக  மூன்று வருடங்களுக்கு முன்னர் நாடு தாழ்ந்த நிலையை அடைந்தது. அதனாலேயே அரசாங்க அதிகாரத்தைக் கையாளுவதில் அறவே அனுபவமில்லாதவர்கள் தேர்தல்களில் அமோக வெற்றியைப் பெற்று ஆட்சிக்கு வரக்கூடியதாக  இருந்தது.

ஆட்சிமுறைக்கு புதியவர்களான ஒரு அணியினரை வைத்துக் கொண்டு பொருளாதாரத்தை மீளமைக்கும் சவாலை எதிர்நோக்க வேண்டியிருப்பதே புதிய அரசாங்கத்தின் பெரிய பிரச்சினையாகும். கடந்த காலத்தில் அரசாங்க தீர்மானங்களை மேற்கொள்பவர்களின் ஊழல் நடவடிக்கைகளுக்கும் குறுகிய நலன்களுக்கு முன்னுரிமை கொடு்பதில் அவர்கள் காட்டிய நாட்டத்துக்கும் அரச நிருவாகத்தில் இருந்தவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இருந்தது என்பது ஒரு துரதிர்ஷ்டவசமான யதார்த்தமாகும். 

அதனால் அரசாங்க இயந்திரத்துக்கு பொறுப்பாக புதிய நிருவாகிகள் அணியொன்றை நியமிக்க வேண்டிய அவசியத்தை புதிய அரசாங்க தலைவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் தொழிலை கற்றுக்கொள்வதற்கு  மற்றையவர்களை விடவும் கூடுதல் காலத்தை எடுக்கக்கூடும். அதன் விளைவாக குறுகிய காலத்தில் அரசாங்க இயந்திரம் பயனுறுதியுடைய முறையில் செயற்படவில்லை.

கிளீன் ஸ்ரீலங்கா 

கிளீன் ஸ்ரீலங்கா செயலணியின் ஆரம்பக்கட்ட முன்முயற்சிகள் எதிர்பார்க்கப்பட்ட நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அரசாங்க -- தனியார் கூட்டுப்பங்காண்மை தொடர்பான அதன் கருத்துக்களை எந்தவிதமான கலந்தாலோசனை நடைமுறைகளும் இல்லாமல் குறிப்பிட்ட சில குழுக்கள் மீது திணிக்க முயன்றமையே அதற்கு காரணமாகும். அந்த குழுக்கள் இந்த முன்முயற்சகளினால் பாதிக்கப்படுவதாக உணர்கின்றன. 

முதல் இலக்குகளாக அமைந்திருக்கும்  தனியார் பஸ் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர்களும் சாரதிகளும் ஜனாதிபதி செயலணியினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை எதிர்த்திருக்கிறார்கள். சுற்றுச்சூழல் மாசடைதல் மற்றும் வீதிப்போக்குவரத்து ஆபத்துக்களுக்கு அவர்களே  காரணம் என்று கருதப்படுவது குறித்து அவர்கள் விசனமடைந்திருக்கிறார்கள். 

அவர்களைப் பொறுத்தவரை  தங்களது வாகனங்களை அழகுபடுத்துவதற்கும் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை மேம்படுந்துவதற்கும் பணத்தை முதலீடு செய்திருக்கிறார்கள். அவர்களின் விடயத்தில் தற்போது அரசாங்கம் விட்டுக் கொடுப்புக்களைச் செய்வதற்கு இணங்கியிருக்கிறது. அதன் மூலமாக  உத்தேச சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மூன்றுமாத காலஅவகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

 கிளீன் ஸ்ரீலங்கா  திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு ஆரம்பக்கட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாக தோன்றிய பிரச்சினைகளை ஆக்கபூர்வமான முறைகளில்  கையாளுவதற்கு அரசாங்கம் சில புதிய அணுகுமுறைகளை தீர்மானித்திருக்கிறது. கிளீன் ஸ்ரீலங்கா செயலணியின் கோட்பாடு குறித்து கலந்துரையாடவும் கருத்துக்களை பெறவும் சிவில் சமூக அமைப்புக்களை அரசாங்கம் அழைத்திருப்பது அவற்றில் ஒன்று.

இது விடயத்தில் அரசின்  அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் செயலகம் மத்தியஸ்தராக செயற்பட்டு,  ஜனாதிபதி செயலணியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு குறிப்பிட்ட சில சிவில் சமூக அமைப்புக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அரசாங்கத்தின் பல முன்முயற்சிகளில் பங்கேற்பதற்கு சிவில் சமூகக் குழுக்கள் இதுவரையில் அழைக்கப்படாததை அடிப்படையாக வைத்து நோக்கும்போது இந்த முயற்சி ஒரு நேர்மறையான அம்சமாகும்.

அரசாங்க இயந்திரம் மற்றும் தனியார்துறையில் மாத்திரம் நம்பிக்கை வைத்து  புதிய அரசாங்கம்  தங்களை ஓரங்கட்டுகிறது என்ற ஒரு உணர்வு சிவில் சமூக அமைப்புக்களுக்கு ஏற்பட்டிருந்தது. இந்த அமைப்புக்களின் சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடிய ஒரு தொகுதி ஒழுங்குவிதிகளை அரசாங்கம் திடீரென்று கொண்டுவந்ததால் அந்த நேர்மறையான உணர்வு மேலும் வலுடைந்தது.

தலையீடுகளை மாற்றியமைத்தல் 

ஜனநாயக ஆட்சிமுறை அமைப்பில் சிவில் சமூக அமைப்புக்கள் ஒரு அங்கமாகும். குறிப்பாக, இன, மத சிறுபான்மைச் சமூகங்கள்,  பெண்கள்  மற்றும் மாறிய பாலின சமூகம் போன்ற ஓரங்கட்டப்படுகின்ற குழுக்களின் விவகாரங்களில் அரசாங்க மற்றும் தனியார்துறையினர் விட்டுச்சென்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் சிவில் சமூக அமைப்புகள் முக்கியமான பங்களிப்பைச் செய்து வருகின்றன.

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் செயன்முறைகளின் ஒரு அங்கமாகவும் சிவில் சமூக அமைப்புக்கள் செயற்படுகின்றன.

சிவில் சமூக அமைப்புக்களுக்கும் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்குமான செயற்பாட்டு இடப்பரப்பு  உலகம் பூராவும் தொடர்ச்சியாக ஆபத்துக்கு உள்ளாகியிருக்கிறது.  இந்த  அமைப்புககளை தங்களுக்கு பிரச்சினைகளைக் கொடுப்பவை என்றும் அசௌகரியமானவை என்றும் நோக்கும்  அதிகாரத்தில் இருப்பவர்கள் செயற்பாடுகளை  பெரும்பாலும் மெச்சுவதில்லை.

சிவில் சமூக அமைப்புக்கள் பல்வேறு காரணங்களுக்காக அவற்றின் சுதந்திரங்களை கட்டுப்படுத்துவதற்கான பெருவாரியான  முயற்சிகளுக்கு முகங்கொடுத்து வந்திருக்கின்றன. போர்க் காலகட்டத்தின் போது அந்த அமைப்புக்களில் சிலவற்றின் மீது விடுதலை புலிகளுக்கு ஆதரவானவை என்றும் அரசாங்கத்தின் போர் நடவடிக்கைகளை மலினப்படுத்துபவை என்றும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. 

போர் முடிவுக்கு வந்ததன் பின்னரான உடனடிக் காலப்பகுதியில் தமிழ் மக்கள் மத்தியில் கிளர்ச்சி உணர்வுக்கு புத்துயிர் கொடுக்க முயற்சித்ததாகவும் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதன் மூலமாக சர்வதேச சமூகத்தின் தடைவிதிப்புகளை அரசாங்கம் எதிர்நோக்கக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கியதாகவும் இந்த சிவில் சமூக அமைப்புக்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

பணச்சலவை செய்யும்  குற்றங்களை புரிவதன் மூலமாக அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் சர்வதேச சட்டத்துக்கு ஒரு அச்சுறுத்தலை தோற்றுவிப்பதாக தற்போது முறைப்பாடுகள் கூறப்படுகின்றன. அந்த நிறுவனங்கள் மீது அரசாங்கம் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதற்கு வழிவகுக்கும் புதியதொரு தொகுதி ஒழுங்குவிதிகளும் திடீரென்று கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

எவ்வாறெனினும், அரசாங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு  யதார்த்த நிலையைப் பற்றிய ஒரு நுணுக்கமான விளக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு வசதியாக அமைகிறது. சிவில் சமூக அமைப்புக்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாடு முறைப்படியாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுடன் நேசமான ஒரு நிலைப்பாட்டை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்ற விருப்பத்தை ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

புதிய அரசாங்கத்தின் தலைவர்களும் நிருவாகிகளும் பிரச்சினைகளுடன் தங்களை பரிச்சயமாக்கிக்  கொண்டு நாட்டை நிருவகிப்பதில் தங்களது விழுமியங்களையும் கோட்பாடுகளையும் பிரயோகிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில்,  இந்த நேர்மறையான உணர்வுகளும் நோக்கங்களும் தெளிவாக வெளிப்படுவதற்கு சிறுதுகாலம் செல்லும். 

அதேவேளை,  புதிய அரசாங்கத்தின் விழுமியங்கள் மற்றும் கோட்பாடுகளுடன் பொருந்திவரக்கூடியதாக கிளீன் ஸ்ரீலங்கா செயலணியின் திசைமாற்றங்கள் போன்று கடந்த காலத்தில் இருந்து வருகின்ற தலையீடுகளையும் மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்' என்ற...

2025-02-16 12:44:24
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறந்த வேட்பாளர்கள்...

2025-02-16 12:03:58
news-image

தையிட்டி விகாரை இனஅழிப்பின் குறியீடு

2025-02-16 12:03:38
news-image

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க உறுதியான நிலைப்பாடு...

2025-02-16 12:01:43
news-image

குழப்புகின்ற கட்டமைப்புகள்

2025-02-16 11:53:51
news-image

இழப்பீடு எனும் செஞ்சோற்றுக் கடன்

2025-02-16 10:43:21
news-image

அரசுக்கு சவாலான விகாரை

2025-02-16 10:42:10
news-image

மியன்மாரின் நிகழ்நிலை மோசடி நிலையங்கள்: நவீன...

2025-02-16 10:23:33
news-image

ஒரு வாரத்திற்குள் முழு உலகத்தையும் பகைத்துக்...

2025-02-16 10:11:16
news-image

குரங்குச் சேட்டையும் மின்சார மாபியாக்களும்

2025-02-16 10:09:30
news-image

ட்ரம்பின் கொள்கை இலங்கைக்கு பாதகமா?

2025-02-16 09:53:14
news-image

"ஸ்ரீலங்கா தாயே" ; தேசிய கீதத்தை...

2025-02-15 18:14:19