சிரியாவில் ஐ.எஸ். நிலைகள் மீது எறிவதற்காக ரோயல் எயார் ஃபோர்சஸ் எடுத்துச் சென்ற ஒரு ஏவுகணையில், பழிக்குப் பழி என்பதைக் குறிப்பிடும் வகையில் ‘மென்ச்செஸ்டரில் இருந்து அன்புடன்...’ என்ற எழுதப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மென்ச்செஸ்டரில், பிரபல பொப் பாடகி அரியானா கிராண்டேயின் இசை நிகழ்ச்சியின்போது ஐ.எஸ். தற்கொலைப் படை இளைஞன் ஒருவன் நடத்திய தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் - குறிப்பாக இளைஞர், யுவதிகள் மற்றும் சிறுவர், சிறுமியர் - 22 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, சிரியாவில் நிலைகொண்டிருக்கும் ஐ.எஸ். இயக்கத்தின் முகாம்கள் மீது ஐக்கிய இராச்சியத்தின் ரோயல் எயார்ஃபோர்ஸ் படையினர் வான் தாக்குதல் நடத்தினர்.

இதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளுள் ஒன்றில், ‘மென்ச்செஸ்டரில் இருந்து அன்புடன்...’ என்று எழுதப்பட்டிருந்தது.

இது குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியானபோது, அது ‘ஃபோட்டோஷொப்’ மூலம் எழுதப்பட்டிருந்ததாகவே நம்பப்பட்டது.

என்றபோதும், அதைத் தமது படைவீரர் ஒருவரே எழுதியதாக ரோயல் எயார்ஃபோர்ஸ் படையின் தலைமை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

வீசப்படவிருக்கும் குண்டுகளில் தமது எதிரிகளை விமர்சித்தும், கேலி செய்தும் செய்திகளை எழுதியும் அனுப்புவது இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரால் ஆரம்பிக்கப்பட்டது. அது இன்றளவும் தொடர்கிறது.

2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் உலக வர்த்தக நிலையம் மீதான தாக்குதலையடுத்து ஈராக்கில் வீசப்பட்ட குண்டுகளில், ‘சதாம்... இது உங்களுக்கென விசேடமாக அனுப்பப்படுகிறது’ என்றும், ஒசாமா மீதான தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளில் ‘நரகத்தில் ஆறுதலடைவீராக’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.