வணங்கான் - திரைப்பட விமர்சனம்

Published By: Digital Desk 2

13 Jan, 2025 | 03:55 PM
image

தயாரிப்பு : வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்

நடிகர்கள் : அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், ரிதா, மிஷ்கின், சமுத்திரக்கனி, சண்முகராஜன், அருள் தாஸ் மற்றும் பலர்.

இயக்கம் : பாலா

மதிப்பீடு : 2.5 / 5

நடிகர்களுக்கு தேசிய விருதை வாங்கித் தரும் படைப்பாளி பாலாவின் இயக்கத்தில் உருவான படம் - இப்படத்தின் தொடக்கத்தில் சூர்யா நடித்து பின் விவரிக்க முடியாத காரணத்தினால் விலகிய படம்  - அதன்பின் அருண் விஜய் நாயகனாக நடித்த படம் ,  என வெளியீட்டிற்கு முன் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய திரைப்படம் 'வணங்கான்'. பொங்கல் விடுமுறை நாளில் வெளியாகி இருக்கும் இந்தத் திரைப்படம் வழக்கமான பாலாவின் படமாக இருக்கிறதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

இந்தியாவின் தென் பகுதியும், தமிழகத்தில் தென் பகுதியுமான கன்னியாகுமரி தான் கதைக்களம். இங்கு சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக பணியாற்றுகிறார் டீனா ( ரோஷினி பிரகாஷ்) . இவருக்கு சுற்றுலா பயணிகளுக்கான படகு சவாரியில் ஒத்துழைப்பு வழங்கும் செவித்திறன் மற்றும் பேசு திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளியான கோட்டி ( அருண் விஜய்) மீது கொள்ளை காதல். இந்த கோட்டிக்கு தேவி ( ரிதா) என்றொரு தங்கை இருக்கிறாள். 

தங்கை தான் தன் உலகம் என்று அண்ணன் கோட்டியும் , அண்ணன் தான் உலகம் என்று தங்கை தேவியும் வாழ்ந்து வருகிறார்கள். இதில் தேவி சுற்றுலா பயணிகளுக்கு உடலில் டாட்டூ வரையும் பெண்ணாக பணிபுரிகிறார்.  கோட்டி தனக்கென்று ஒரு நியதியை உருவாக்கி, அதன் படி வாழ்ந்து வருகிறார். கண் எதிரே அநியாயங்கள் நடந்தால் அதனை வன்முறை மூலமே தீர்வு காண்கிறார். தங்கை மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தாலும் கோட்டியின் கண்ணெதிரே ஏதேனும் தவறு நடந்தால் அதனை துணிச்சலுடன் தட்டிக் கேட்கிறார். 

அவருடைய கட்டுக்கடங்காத கோபத்தை மடைமாற்றுவதற்காக அவருடைய நலம் விரும்பியான பாதிரியார்  அங்குள்ள ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் காவலாளி பணியை வாங்கித் தருகிறார். தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளான அவர்கள் மீது அக்கறையுடனும்  அன்புடனும் மனமுவந்து சேவை செய்கிறார் கோட்டி. இந்தத் தருணத்தில் அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் நடைபெறுகிறது. இதைக் கண்டு ஆத்திரம் அடையும் கோட்டி தன் பாணியில் அவர்களுக்கு தண்டனை தருகிறார். இது சட்டத்திற்கு முன் அவரை கொலைக் குற்றவாளியாக நிறுத்துகிறது. நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறுகிறது. அவருக்கு நீதிமன்றம் எம்மாதிரியான தீர்ப்பு வழங்குகிறது என்பதுதான் படத்தின் கதை.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் பாலியல் தொடர்பான துன்புறுத்தல் நிகழ்ந்தால் அதற்கு அனைவருக்கும் பொதுவாக இருக்கும் சட்ட விதிமுறைகள் பொருந்தாது. இவர்களுக்கென பிரத்யேக சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என  தன்னுடைய கருத்தை எண்ணத்தை பகிர்ந்து கொள்ள விரும்பிய பாலா அதனை அறிவுப்பூர்வமான உரையாடல்கள் மூலமாகவோ உணர்வுபூர்வமான உரையாடல் மூலமாகவோ நேரடியாக வழங்காமல் தன்னுடைய வழக்கமான அதீத வன்முறையை கலந்து சொல்லி இருக்கிறார்.

படத்தின் முதல் பாதியில் எதை நோக்கி கதை பயணிக்கிறது என்று அவதானிக்க முடியவில்லை. மேலும் நாயகன் கோட்டியின் அறிமுகம் தொடர்பான நீளமான சண்டைக் காட்சிகள் தங்கை தேவியின் அறிமுகம் மற்றும் காதலி டீனாவின் தொழில் சார்ந்த அறிமுகம் என முதல் பாதியில் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் சுவராசியத்திற்கு பதிலாக சோர்வை தருகிறது. அதிலும் எதிர்பார்த்த வகையில் திரைக்கதை பயணிப்பதால் பார்வையாளர்கள் தங்களின் அணைத்து வைத்த செல்போன்களை மீண்டும் உயிர்ப்பித்து அதனை காணத்தொடங்குகிறார்கள்.

இரண்டாம் பாதியில் அண்ணன், தங்கை உறவு தொடர்பான காட்சிகள் உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் ரசிகர்களுக்கு ஆறுதல் கிடைக்கிறது. இந்தத் தருணத்தில் நீதியரசராக நடித்திருக்கும் மிஷ்கினும், காவல்துறை உயரதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனியும் திரைக்கதையின் பரப்பரப்பிற்கு தங்களுடைய பங்களிப்பை நேர்த்தியாக வழங்குகிறார்கள். 

இருப்பினும் பாலாவின் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பிதாமகன் படத்தின் நாயகனுக்கான திரைத்தோற்றம் பார்வையாளர்களுக்கு நினைவிற்கு வருவதால் அருண் விஜயின் கடின உழைப்பு குறைகிறது. இருப்பினும் உச்சகட்ட காட்சியில் உரையாடல் இல்லாமல் தன்னுடைய அன்பை தன்னுடைய இழப்பை வெளிப்படுத்தும் போது அவருடைய தனித்துவமான நடிப்பு திறனும், நடிப்பில் அவருடைய அனுபவ தேர்ச்சியும் பக்காவாக தெரிகிறது. 

அதைவிட தன் சகோதரனிடம் அவருக்கு புரியும் சைகை மொழியிலும் தனக்குத் தெரிந்த பேச்சு மொழியிலும் ஒரே தருணத்தில் தங்கைக்கான பரிதவிப்பை வெளிப்படுத்தும் காட்சியில் நடித்திருக்கும் புதுமுக நடிகை ரிதா கவனம் ஈர்க்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகர்களுக்கு பாசம் மிகுந்த புதிய தங்கையாக இனி எல்லா படங்களிலும் தோன்றுவார்.

நாயகனை காதலிக்கும் நாயகியாக நடித்திருக்கும் ரோஷினி பிரகாஷ் முகத்தில் இளமையை தொலைத்து இருந்தாலும் நடிப்பில் துறு துறு. ஓரளவு நடிக்கவும் செய்கிறார்.

அருண் விஜய் ,ரிதா, ரோஷினி பிரகாஷ், இந்த மூவர்களை கடந்து மிஷ்கின் & சமுத்திரக்கனி ஆகிய இருவரும் இயல்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.

ஆர். பி. குரு தேவின் ஒளிப்பதிவில் கன்னியாகுமரியின் பின்னணி நேர்த்தியாக பதிவாகி இருக்கிறது. ஜீ. வி. பிரகாஷ் குமாரின் பாடல்களும் , சாம் சி எஸ் பின்னணி இசையும் படமாளிகையில் படத்தை ரசிக்கும் ரசிகர்களுக்கு இடையூறை ஏற்படுத்தவில்லை. 

படத்தில் லாஜிக் மீறல் உண்டு. திரைக்கதையில் அழுத்தம் இல்லை. பழைய பாணியிலான காட்சிகள் இவை அனைத்தையும் அருண் விஜய் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் மறக்கடிக்க செய்கிறார்.

வணங்கான் - மனதில் தங்கான்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right