எனக்கு ஷாருக்கான் தான் ரோல் மாடல்' - ஜெயம் ரவி

Published By: Digital Desk 2

13 Jan, 2025 | 03:58 PM
image

'' பொலிவுட் நடிகர் ஷாருக் கான் தான் எனக்கு ரோல் மாடல்': என ஜெயம் ரவி தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி, பொங்கல் திருநாளான ஜனவரி 14ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் 'காதலிக்க நேரமில்லை 'எனும் திரைப்படத்தில் நித்யா மேனன், ஜெயம் ரவி ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் பங்கு பற்றி பேசிய ஜெயம் ரவி, '' இயக்குநருடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம். இந்த உலகத்தில் பெண்கள் இல்லாமல் நம் உலகம் இல்லை. இந்தப் படத்தில் நடைபெற்ற விடயங்களை இனி பெண் இயக்குநர்கள் இயக்கும் படத்தில் தொடர்ந்து பின்பற்றுவேன். நான் நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை. 

இதில் என் தவறு என்ன? என யோசித்தேன். என் மீது எந்த தவறும் இல்லாத போது நான் ஏன் சோர்வடைய வேண்டும். இந்த ஆண்டில் நல்ல திரைப்படங்களில் நடித்து வருகிறேன். இந்தப் படத்தில் சக நடிகையான நித்யா மேனன் பெயருக்கு பிறகு தான் என் பெயர் இடம் பெறுகிறது இது தொடர்பாக கேள்வி எழுந்தபோது இதில் என்ன தவறு? நான் என்னுடைய திரையுலக பயணத்தில் ஏராளமான பழைய மரபுகளை உடைத்திருக்கிறேன். அதில் இதுவும் இணைந்திருக்கிறது.

இந்த விடயத்தில் பொலிவுட் நடிகர் ஷாருக்கான் தான் எனக்கு ரோல் மாடல். காதலிக்க நேரமில்லை எனும் வெற்றி பெற்ற கிளாசிக்கலான படத்தின் டைட்டிலில் நான் நடித்திருப்பதை பெருமிதமாக கருதுகிறேன். இந்தப் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right