நேரலையாக நடன நிகழ்ச்சி நடத்தும் 'நடனப் புயல்' பிரபு தேவா

Published By: Digital Desk 2

13 Jan, 2025 | 03:59 PM
image

முன்னணி இசைக் கலைஞர்கள்- திரை இசைக் கலைஞர்களின் நேரலையான மேடை இசை நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடத்தில் வரவேற்பும், ஆதரவும் அபிரிமிதமாக கிடைத்து வருகிறது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் முதன்முறையாக நேரலையாக நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

இந்நிகழ்வில் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் போற்றப்படும் நடனப் புயல் பிரபுதேவா நடனமாடுகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவிலும், வெளிநாட்டிலும் ஏராளமான இசை நிகழ்ச்சியை நடத்திய அனுபவம் மிக்க அருண் ஈவென்ட்ஸ் எனும் நிறுவனம் முதன்முறையாக சென்னையில் பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருக்கிறது.   

நடிகரும், நடன இயக்குநரும், முன்னணி நடன கலைஞருமான பிரபுதேவா இந்நிகழ்வில் நடனமாடுகிறார். இந்த நிகழ்ச்சி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதியன்று சென்னையில் உள்ள வை எம் சி ஏ மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த பிரத்யேக நிகழ்விற்கான நுழைவு சீட்டுகளை அறிமுகப்படுத்தும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த தருணத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு ,டொக்டர் ஐசரி கே. கணேஷ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர். 

இவர்களுடன் பிரபுதேவா, இந்த நிகழ்வை ஒருங்கிணைத்திருக்கும் அருண் ஈவென்ட்ஸ், விளம்பரதாரராக பங்குபற்றி இருக்கும் ஜி ஸ்கொயர் மற்றும் ஐஃபா ஆகிய நிறுவனத்தின் பிரதிநிதிகளும் பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் பிரபுதேவா பேசுகையில், '' இது போன்றதொரு நிகழ்ச்சியை  நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. இதற்கு நடிகரும், இயக்குநருமான ஹரிகுமார் தான் காரணம். அவருடைய ஆலோசனை ,திட்டமிடல் ,எண்ணம் , ஆகியவற்றை கேட்ட பிறகுதான் இதற்கு நான் ஒப்புக் கொண்டேன். 

இந்த நிகழ்ச்சி சினிமாவில் நான் நடனம் ஆடுவதை போல் இருக்காது. மேடையில் ரசிகர்களின் முன்னிலையில் நேரடியாக தொடர்ச்சியாக நடனமாட வேண்டும். இதற்காக எம்மை நான் தயார் படுத்தி வருகிறேன். ரசிகர்களை மகிழ்விப்பதற்காக தொடர்ந்து உழைத்து வருகிறேன். இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு வித்தியாசமானதாகவும், ஆச்சரியப்படுத்தும் அனுபவமாகவும் இருக்கும் என உறுதியளிக்கிறேன்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right