கரடியின் தாக்குதலில் இருந்து வேட்டைக்காரர் ஒருவர் தப்பிய சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது.

ரிச்சர்ட் வெஸ்லி என்பவர் கனடாவின் ஒன்டாரியோவைச் சேர்ந்தவர். சிறு விலங்குகளை வேட்டையாட எண்ணிய இவர், ‘ஃபயர் ரிவர்’ என்ற புற நகர்ப் பகுதியொன்றுக்குச் சென்றார்.

தூரத்தில் ஒரு கரடியைக் கண்ட அவர், அது போதுமானளவு நெருங்கி வந்த பின்பு அம்பெய்து தாக்கலாம் என்று எண்ணினார். தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்த கரடியை, ரிச்சர்ட் வெஸ்லியின் கூக்குரல் குழப்பவே, படு வேகமாக வந்து வெஸ்லியைத் தாக்கியது.

திடீரென கரடி வேகமாகத் தன்னை நெருங்கி வருவதைக் கண்ட வெஸ்லி பதற்றத்தில் அம்பை எங்கோ எய்துவிட, உயிர் பிழைப்பதற்காக ஓடித் தப்ப எண்ணினார். அதற்கு இடமளிக்காத கரடி அவரை வேகமாக முட்டித் தள்ளியது. 

இந்தக் காட்சியை வெஸ்லியின் கெமரா காட்சிப்படுத்தியபடி இருந்தது. எனினும், கரடி தாக்கியதில் கெமரா கீழே விழுந்துவிட்டது. ஒரு சில நொடிகளின் பின் சுதாகரித்துக்கொண்ட வெஸ்லி மீண்டும் கெமராவைக் கையில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.