அருள்கார்க்கி
“முன்னர் மாதாந்தம் 55000 ரூபாயாக இருந்த எனது மின் கட்டணம் இப்போது பூஜ்யமாக இருப்பதற்கு காரணம் நான் சூரிய சக்தி படலங்களை பொருத்தியதாலேயே “ என்று கூறுகின்றார் நிஷாந்த. பண்டாரவளை கினிகம பிரதேசத்தில் வாழும் தொழில் முயற்சியாளரான இவர் சூரிய சக்தி மின்னுற்பத்தி மூலம் மேலதிகமாக மாதாந்த வருமானத்தையும் ஈட்டுகின்றார்.
கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப தொழில் துறைகளில் அபிவிருத்தியடைந்து வரும் ஒரு நாடாக இலங்கையின் சக்தி வலுத் தேவையானது நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. சமகாலத்தில் இலங்கையின் மின்சாரத் தேவையானது பெரும்பாலும் தீர்ந்துப்போகக்கூடிய சக்தி முதல்களில் தங்கியிருப்பதானது இத்துறையினை அதிக செலவு மிக்கதானதாக ஆக்கியுள்ளது. இதில் பிரதானமாக நீர் மின்சாரம், நிலக்கரி, டீசல் போன்ற உற்பத்தி முறைகள் இலங்கையின் மின்சார தேவையினை பூர்த்திச் செய்கின்றன. இவ்விடத்தில் மிகச் சிறியளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களான சூரிய சக்தி, காற்று மற்றும் உயிரியல் வாயு என்பன தேசிய தேவையினை பூர்த்திச் செய்ய பங்களிப்புச் செய்கின்றன. ஆனால் அவை இலங்கை மின்சார சபையினாலோ அல்லது வேறு அரச துறையினாலோ முன்னெடுக்கப்படவில்லை. சொற்ப அளவிலான தனியார் துறையினர் இதற்கு பங்களிப்புச் செய்கின்றனர்.
1969 நவம்பர் 01 ஆம் திகதி 1969 ஆம் வருட 17 ஆம் இலக்க பாராளுமன்ற சட்டத்தின் பிரகாரம் இலங்கை மின்சார சபை உருவாக்கப்பட்டது. இலங்கையின் 1950 ஆம் ஆண்டில் லக்சபான மின் நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதேபோல் லக்விஜய மின்னுற்பத்தி நிலையமானது முற்று முழுதாக நிலக்கரியினை (Bituminous coal) பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்யப்படுகின்றது. உலகில் இன்று மிகவும் அரிதாக கிடைக்கும் கறுப்பு நிலக்கரி (Lignite coal) இனை விடவும் உயர் தரம் கொண்ட சக்தி முதலாகும். Bituminous நிலக்கரியில் 77 – 87 சதவீதம் காபன் காணப்படும். அதேநேரம் anthracite நிலக்கரியில் 87 சதவீதத்துக்கு அதிகமான காபன் காணப்படுகின்றது. இது சூழலுக்கு மிகவும் பாதிப்பான ஒரு எரிசக்தி உற்பத்தியாகும்.
அதேபோல் இலங்கையின் மின்சார சேவையினை பூர்த்திச் செய்வதில் சமனல தொகுதியில் சமனலவெவ மின்னுற்பத்தி நிலையம், உடவளவ, இங்கினியாகல ஆகியனவும் மகாவலி தொகுதியில் கொத்மலை, போவதென்ன, மேல் கொத்மலை, விக்டோரியா ஆகிய மின்னுற்பத்தி நிலையங்களும் காணப்படுகின்றன.
மேலும் தம்பபவானி காற்று மின்னுற்பத்தி (Wind Power) நிலையமும் உள்ளது. மேலும் லக்சபான தொகுதியில் லக்சபான மற்றும் விமலசுரேந்திர ஆகிய நீர் மின்னுற்பத்தி நிலையங்கள் காணப்படும். அதேவேளை டீசல் எரிபொருளினை பிரதானமாக பயன்படுத்தி மின்னுற்பத்திச் செய்யும் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையமும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு உள்ளது.
இவை மிகவும் பொருட்செலவும், சூழல் பாதிப்புகளும் மிக்க மின்னுற்பத்தி முறைகளாகும். புதைபடிவ எரிபொருட்களை நம்பியிருப்பது காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் முக்கிய பல சவால்கள் உள்ளன. அதில் உலகளாவிய எண்ணெய் விலை அதிகரிப்பு, ஏற்ற இறக்கங்கள், அதன் நம்பகத்தன்மை, விநியோக தடைகள், டொலர் பெறுமதி ஏற்றம் என்பன நாட்டின் பொருளாதாரத்துக்கும், சுற்று சூழலுக்கும் நேரடியான பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
மேலும் காபன் வெளியிடக்கூடிய புதைபடிவ எரிபொருட்களை எரித்து மின்னுற்பத்தி செய்வதால் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவுக்கு வழிவகுக்கின்றது. காபன் பாதிப்புகள், அமில மழை, சுவாச நோய்கள் என்பன இலங்கை சமீப காலமாக அதிகமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளாக உள்ளமை அவதானிக்கத்தக்கது.
சுற்றாடல் பாதிப்புகளுக்கு மேலதிகமாக இலங்கையின் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு நாட்டின் கரியமில் வெளியேற்றம் (carbon foot print) என்பன உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கான பங்களிப்பை அதிகரித்துள்ளது. மேலும் இலங்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டுள்ளது. அவையாவன,
The Vienna convention for the protection of ozone layer – (1985) (UNEP)
Montreal protocol on substances that deplete the ozone layer – 1989
Kigali amendment to the Montreal protocol – 2016
United Nations framework convention on climate change – (UNFCCC) – 1993
Paris Agreement – 2016
Kyoto Protocol – 1992
United Nations convention on Biological Diversity – (CBD) – 1992
Cartagena Protocol on Biosafety – 2000
United Nations convention to combat desertification (UNCCD) – 1994
Basel convention on the control of transboundary movement of Hazardous waste and their disposal – 1989
மூலம்: சுற்றாடல் அமைச்சு
இந்த சர்வதேச உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ள இலங்கையானது சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்தை பேணி பாதுகாக்க நிலையான மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை நோக்கி நகர வேண்டிய தேவை உள்ளது.
இந்த சவாலை சாத்தியமாக எதிர்கொள்ள இலங்கை மின்சக்தி துறையில் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி முதல்களை நோக்கி நகர வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது. இலங்கையின் காலநிலை சூழ்நிலைகளுக்கேற்ப சூரிய சக்தி மூலம் மின்னுற்பத்தி செய்யக்கூடிய சோலர் படலங்களை பயன்படுத்துவது சாத்தியமானதாக காணப்படுகின்றது. எனவே இலங்கையில் சூரிய சக்தி மின்னுற்பத்தியை அனைத்து பிரதேசங்களிலும் முறையாக பயன்படுத்துவது குறித்தான தேசிய வேலைத்திட்டத்தினை நிறுவுவது நிலைபேறான ஒரு அபிவிருத்தியாகும்.
உலகின் மின் நுகர்வில் 16 சதவீதமான சக்தியானது மீள்புதுப்பிக்கத்தக்க வளப்பாவனை ஆகும். இலங்கையின் நாளாந்த மின்னுற்பத்தியில் 45.65 GWH ஆகும். இதில் 16.95 GWH அதாவது 37.13 சதவீதமானது தீர்ந்து போகும் எரிபொருளில் (fossil fuel) உற்பத்திச் செய்யப்படுவதாகும். அதேபோல் உச்ச தேவை நேரத்தில் (peak demand) 2541.6 MWH அளவிலான மின்சாரம் தேவைப்படுகின்றது. இதில் நீர் மின் உற்பத்தியில் 20.64 GWH உற்பத்திச் செய்யப்படுவதுடன் நிலக்கரி மற்றும் கனிய எண்ணெய் மூலம் 16.23 GWH மின்னுற்பத்தி செய்யப்படுகின்றது.
அதேபோல் 10 ஆறு (மெகாவோட்) சோலர் திட்டங்கள் மற்றும் தனியார் மேற்கூரை சோலர் படல்களின் மூலம் தேசிய நாளாந்த மின் தேவைக்கு 3.44 GWH மின்சாரம் வழங்கப்படுகின்றது. இது பெரும்பாலும் தனியாருக்குச் சொந்தமான மேற்கூரை சூரிய படல்களின் மூலம் உற்பத்திச் செய்யப்படுவதாகும். இலங்கைக்கு உள்ள காலநிலை வாய்ப்புகளைப் பயன்படுத்தி இத்தொகையை 10 மடங்கு அதிகமாக உற்பத்திச் செய்ய முடியும். ஆனால் இத்தொகை குறைவாக இருப்பதற்கான பல காரணங்கள் உள்ளன.
சூரிய சக்தி மின்படலங்கள் மூலம் மிக குறைந்த அலகு செலவுடன் மின்னுற்பத்தியினைச் செய்ய முடியும். மத்திய மலைநாட்டில் அதன் சாத்தியப்பாட்டை ஆராயும் நோக்குடன் மேற்கூரை சூரியப்படல்களை முதலீட்டு நோக்கத்துடன் பொறுத்தியிருக்கும் பண்டாரவளை கினிகம பிரதேச முயற்சியாளரான திரு. நிசாந்தவின் அனுபவங்களாவன,
“நான் இந்த சூரியப்படல்களை கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் பொருத்தினேன். இதனை ஆரம்பிக்கும் போது மத்திய மலைநாட்டின் காலநிலைக்கு இம்முயற்சி சாத்தியமாகுமா என சந்தேகம் நிலவியது. இதற்காக நான் ஆரம்ப கட்ட செலவீனமாக ரூ.15 இலட்சத்தினை முதலீடு செய்தேன்.
இதன் முதற்கட்டமாக 5 KW கொள்ளளவு கொண்ட 2 படல்களை பொருத்தினேன். இதன் மூலம் வீட்டு மின்பாவனை மின்நுகர்வு பூச்சியமாக ஆனது மேலதிக உற்பத்தியானது இலங்கை மின்சார சபைக்கு விற்பதன் மூலம் மாதாந்தம் சராசரியாக ரூபா 17000 அளவிலான வருமானம் கிடைக்கின்றது. மேலும் இந்த படல்களுக்கு 20 வருடங்கள் உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது என்கின்றார்.”
“ஆனால் இதன் ஆரம்ப செலவீனமானது மிக அதிகமாக காணப்படுகின்றது. இதற்கான தொகையை அனைவராலும் ஒதுக்க முடியாது. மேலும் இந்த முதலீட்டைப் பெறுவதற்கு எனது தனிப்பட்ட முதலீட்டை மட்டுமே செய்ய வேண்டியிருந்தது. இதற்காக அரச மானியங்களோ ஏனைய கடன் திட்டங்களோ இருந்தால் இதனை மேலும் பலர் முன்னெடுக்க வாய்ப்பாக இருக்கும்” என்று மேலும் நிசாந்த தெரிவிக்கின்றார்.
அதேபோல் பண்டாரவளை பிரதேசமானது அதிக பனிமூட்டம் மற்றும் தொடர் மழையால் பாதிக்கப்படும் பிரதேசமாகும். எனவே இவ்வாறான காரணிகளால் சூரியப்படல்களின் உற்பத்தித் திறன் ஒப்பீட்டளவில் குறைவடைவதாகவும் தெரிவிக்கின்றார்.
அதற்கு இவ்வாறான காலநிலையை சமாளித்து நீடித்து உழகை;கும் செயற்றிறன் கொண்ட படல்களை சந்தையில் இனங்கண்டு பொருத்துவது அவசியம் என்பதும் அவரின் கருத்தாக இருக்கின்றது. மேலும் தூசு, சுற்றுச்சூழலில் காணப்படும் மரங்களின் நிழல், வானிலை காரணிகள் போன்றவற்றை படலங்களின் செயற்றிறன் பாதிக்கப்படும் நிலைமைகளையும் இதன் சவால்களாக காணப்படுவதாக அவர் கூறுகின்றார்.
இலங்கை மின்சார சபையின் 2023 ஆம் ஆண்டறிக்கையின் புள்ளிவிபரங்களின் படி மேற்கூரை சூரியப்படல்களின் எண்ணிக்கையானது சமீப காலமாக கணிசமான அதிகரிப்பைக் காட்டுகின்றது. 2015 ஆம் ஆண்டு 9 GWH ஆக காணப்பட்ட மொத்த மின்னுற்பத்தியானது 2023 ஆம் ஆண்டு 632 GWH ஆக உயர்ந்துள்ளது. இது சோலார் மின்னுற்பத்தி தொடர்பாக ஒரு சிறந்த முன்னேற்றமாகும். ஏனைய புதுப்பிக்கத்தக்க சக்தி முதல்களின் மின்பிறப்பிக்கும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளமையை அட்டவணை இரண்டில் காணலாம்.
மேலும் இலங்கை மின்சார சபையின் நீண்டகால மின்னுற்பத்தி விரிவாக்கல் திட்டத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் 500 MW சோலார் படலங்களை அதிகரிக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளுத. இதன் மூலம் 2042 ஆம் ஆண்டளவில் 10739 MW மின்னுற்பத்தி மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. இது 70% புதுப்பிக்கத்தக்க சக்தி பயன்பாடாகும். இதில் முதன்மையானது சூரியப்படல மின்னுற்பத்தி முறைமையாகும். மேற்கூரை சூரியப்படலங்கள் மற்றும் திறந்தவெளி சூரியப்படலங்களின் பொருத்துகை மூலம் இவ்விலக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த திட்டத்துக்காக சராசரி ஆண்டு முதலீடாக 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தனியாளுக்கு மின்னுற்பத்தி வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் சோலர் மின்னுற்பத்தியை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல் சூரிய மின் உற்பத்தியை இலங்கை மின்சார சபை மேலும் வினைத்திறனாக ஆக்குவதற்காக பல்வேறு முறைமைகளை பின்பற்றுகின்றது. அவையாவன,
Ground mounted solar
Large and medium scale solar parks (10 – 100MW)
Scattered small scale solar projects (1 – 10MW)
Scattered small scale solar projects in LV network
Rooftop solar (Net metering, Net accounting, Net plus)
Floating solar
இதன் மூலம் கடந்த இரண்டு தசாப்தங்களில் சூரிய மின்னுற்பத்தி 46% உயர்வடைந்துள்ளதாகவும் மேலும் இத்தொகை கணிசமான அதிகரிப்பை காட்டும் எனவும் இலங்கை மின்சார சபையின் வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சூரிய சக்தி மின்னுற்பத்தி மூலம் வருடாந்த காபன் உமிழ்வை 0.3Kg / KWh ஆல் 2042 ஆம் ஆண்டில் குறைக்க முடியும் என்பது இலங்கை மின்சார சபையின் இலக்காகும். இதன் மூலம் இலங்கையின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தில் நேர்மறை தாக்கத்தைச் செலுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த முயற்சியை சாத்தியமாக்கிய பண்டாரவளை மகாநுவர பிரதேச ஒரு தொழில் முயற்சியாளரான சனத் கடந்த 5 வருடங்களாக மேற்கூரை சூரியப்படல்களைப் பொருத்தியுள்ளார். சிறியளவிலான வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ளும் சனத் தனது வர்த்தகம் மற்றும் வீட்டுப்பாவனைக்கு சோலர் மின்னுற்பத்தி மூலம் கணிசமான நன்மைகள் இருப்பதாக தெரிவிக்கின்றார்.
அவரின் வியாபாரத்துக்கும் வீட்டுப்பாவனைக்கும் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு மேலதிகமாக உற்பத்திச் செய்யப்படும் தொகையானது இலங்கை மின்சார சபையினால் ஒரு அலகுக்கு ரூபா 37 என்ற அடிப்படையில் கொள்வனவு செய்யப்படுகின்றது. இதன் மூலம் மாதாந்தம் சராசரியாக ரூபா 25000 வருமானம் கிடைப்பதாக தெரிவிக்கின்றார்.
மேலும் எனது தெரிவிப்பானது இதன் ஆரம்ப செலவீனம் அதிகமாக இருப்பதன் காரணமாக இதனை அனைவராலும் மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும், அரசினால் கடன் உதவிகள் வழங்கப்படும் போது இதனை மேலும் விரிவாக்கம் செய்ய முடியும் என்று கூறுகின்றார்.
மேலும் பண்டாரவளை பிரதேசத்தில் சூரியப்படல் சேவையை வழங்கும் தனியார் நிறுவனமான மைக்ரோ சோலர் பவர் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஆரியவன்ச இதனை கடந்த 10 வருட வருட காலமாக இப்பிரதேசத்தில் மேற்கொண்டு வருவதாகவும் சமீப காலமாக மக்கள் மத்தியில் இதற்கு அதிக வரவேற்பு கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றார்.
அதேபோல் மத்திய மலைநாட்டை பொறுத்த வரையில் சூரியப்படல் மின்னுற்பத்தியானது சாத்தியமாக மேற்கொள்ளப்படுவதற்கான அணுகுமுறைகளை தாம் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார். அதிக மழைவீழ்ச்சி உயரமான மரங்கள், பனிப்பொழிவு போன்ற சவால்களை சமாளிக்கக்கூடிய நீடித்து உழகை;கும் தரமான படலங்களை மக்கள் தெரிவு செய்வது முக்கியம் என்றும் அரச அனுசரனையும் நிதிசார் உதவிகளும் அவசியம் என்பதையும் வலியுறுத்துகின்றார்.
இலங்கையின் மத்திய மலைநாட்டில் சோலார் சக்தி பயன்பாட்டை மேம்படுத்துவது குறித்து சூழலியலாளர் ராஜித கமகே பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:
சூழல் பாதுகாப்பு: சோலார் சக்தி பயன்படுத்துவதன் மூலம், மத்திய மலைநாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கலாம். இது காடுகள் மற்றும் நீர்வளங்களைப் பாதுகாக்க உதவும்.
சூழலியல் சவால்கள்: சோலார் பேனல்கள் நிறுவும் போது, நிலப்பரப்பை மாற்றுவது மற்றும் காடுகளை அகற்றுவது போன்ற செயல்கள், உள்ளூர் உயிரினங்கள் மற்றும் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, திட்டமிடல் மற்றும் செயல்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும்.
சமுதாய நலன்: சோலார் சக்தி திட்டங்கள், உள்ளூர் சமூகங்களுக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி வாய்ப்புகளை வழங்க முடியும். அதே சமயம், சமூகத்தின் பாரம்பரிய வாழ்க்கை முறைகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
புவியியல் சவால்கள்: மத்திய மலைநாட்டின் மலைப்பாங்கான நிலப்பரப்பில் சோலார் பேனல்கள் நிறுவுவது சிரமமானதாக இருக்கலாம். எனவே, தொழில்நுட்ப ரீதியாக பொருத்தமான தீர்வுகள் தேவை.
இவ்வாறு, மத்திய மலைநாட்டில் சோலார் சக்தி பயன்பாட்டை மேம்படுத்துவதில் பல நன்மைகள் மற்றும் சவால்கள் உள்ளன. சூழலியலாளர் ராஜித கமகே, இந்த அம்சங்களை கவனத்தில் கொண்டு, திட்டங்களை முன்னெடுக்க அறிவுறுத்துகிறார்.
இவ்விடயங்கள் தொடர்பாக பண்டாரவளை இலங்கை மின்சார சபை சேவை நிலையத்தின் பிரதான பொறியியலாளரிடம் வினவியபோது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
“இலங்கை பல தடைவ மின் தடையை எதிர்கொண்ட ஒரு நாடாகும். அந்தவகையில் நாம் அதிகமாக எரிபொருளில் தங்கியிருந்தமை ஒரு காரணமாகும். மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி முதல்கள் எமது நாட்டில் அதிகமாகவே காணப்படுகின்றது. அதில் பிரதானமானது சூரிய சக்தி மின்னுற்பத்தியாகும். இன்று மத்திய மலைநாட்டிலும் அதிகமான மேற்கூரை சூரியப்படல்களை பொருத்தியுள்ளனர். இதன் மூலம் அவர்களுக்கு பிரத்தியேகமான வருமானமும் கிடைக்கின்றது அதேபோல் சூழலுக்கு பாதிப்பில்லாத இத்தொழில்நுட்பத்தின் மூலமாக காலநிலை மாற்றம் மற்றும் காபன் வெளியேற்றம் என்பன முறையாக முகாமைத்துவம் செய்யப்படுகின்றது. இலங்கை மின்சார சபையானது நீண்ட கால திட்டமொன்றின் அடிப்படையில் இதனை முகாமைத்துவம் செய்கின்றது. எதிர்காலத்தில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் இத்தொழில் துறையை முன்னேற்றுவது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். அதேபோல் தனியார் துறையுடன் இணைந்து இதனை மேலும் விரிவுபடுத்த முடியும் என்று தெரிவிக்கின்றனர்.
இலங்கை வங்கி வீட்டு மேற்கூரைகளில் சூரிய சக்தி உற்பத்தி அமைப்புகளை (Solar Panel Systems) பொருத்துவதற்காக சூரிய சக்தி அமைப்பின் மொத்த செலவில் 75% வரை கடன் வசதிகளை வழங்குகிறது. இந்த வசதி, மின்சார செலவுகளை குறைக்க விரும்பும் வீடுகளுக்கான உகந்த தீர்வாகும். மேலும், நீண்ட காலத்தில் மின் கட்டணச் செலவுகளைத் தொடர்ந்து குறைக்க முடியும்.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் சோலார் சக்தியை விரிவாக பயன்படுத்தி, தங்கள் மின்சார தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன. https://mnre.gov.in/en/solar-overview/ அவர்களின் அணுகுமுறைகளும் கையாளும் தொழில்நுட்பங்களும் வெவ்வேறுபடுகின்றன.
திட்டங்கள் மற்றும் முயற்சிகள்:
சூரிய மிஷன் (Jawaharlal Nehru National Solar Mission):
இலக்கு: 100 GW சூரிய சக்தி உற்பத்தி (2022).
சூரிய பூங்காக்கள் மற்றும் கடல் நீராச்சல் பகுதிகளில் (Floating Solar Plants) திட்டங்கள்.
கிராமப்புற மின்சாரமயமாக்கல்:
சூரிய மின்சாரம் மூலம் மின்சாரம் அணுகமுடியாத கிராமங்களுக்கு உற்பத்தி.
கிரீன் எரிசக்தி கழகம் (SECI):
பெரிய அளவிலான சூரிய மின் திட்டங்கள் ஊக்குவிக்கிறது.
பொரியோடோவோல்டாயிக் (PV) பேனல்கள்:
சூரிய ஒளியை மின்சாரமாக மாற்ற பயன்படும்.
கேன்ட்ரல் இன்வெர்டர்கள்:
மின்சாரம் தானியங்கி முறையில் ஒழுங்குபடுத்த பயன்படும்.
சோலார் டிராக்கர்கள்:
பேனல்கள் சூரியனை நோக்கி சுழல்வதை உறுதிசெய்யும்.
பங்களாதேஷ் சோலார் சக்தியின் பயன்பாட்டில் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது, குறிப்பாக கிராமப்புற மின்சாரம் குறித்த சேவைகளில். இதற்கு கீழே சில முக்கிய அம்சங்களும் தொழில்நுட்பங்களும் உள்ளன:
சூரிய வீட்டு அமைப்புகள் (Solar Home Systems - SHS):
SHS முறை, மின்சாரம் கிடைக்காத கிராமப்புறங்களில் தனி வீடுகளுக்கு சூரிய சக்தியை வழங்கும்.
6 மில்லியனுக்கும் மேற்பட்ட வீடுகள் சூரிய சக்தி மூலம் ஒளியுடன் கூடிய சேவைகளைப் பெறுகின்றன.
இந்த திட்டம் "Infrastructure Development Company Limited (IDCOL)" எனும் நிறுவனம் வழிவகுத்து முன்னெடுக்கப்பட்டது.
மின்னணு கிராமங்கள் (Solar Villages):
முழு கிராமங்களுக்கான சூரிய மின்சார திட்டங்கள்.
LED விளக்குகள், சிறிய கிராமப்புற தொழில்கள், மற்றும் நீர் பம்புகள் சூரிய சக்தி மூலம் செயல்படுகின்றன.
சூரிய வணிக திட்டங்கள்:
வணிக நிறுவனங்கள் மற்றும் காரியம் சந்தைகளுக்கான சூரிய மின் உற்பத்தி.
பிராந்திய பிரதான மின் பொறியியலாளர் திரு ஹ . குமாரதாஸ அவர்களிடம் இந்த விடயத்தை பற்றி வினவியபோது, “சூரிய சக்தி மின்னுற்பத்தியில் இலங்கையானது ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது தாமதமாகவே நுழைந்தது. மீள் பயன்படுத்தத்தக்க எரிபொருள் பயன்பாட்டில் சூரிய சக்தியானது இலங்கைக்கு மிகவும் வாய்ப்பான ஒரு விடயமாகும். மத்திய மலைநாட்டில் இதனை பயன்படுத்துவதில் சற்று சவால்கள் காணப்பட்டாலும் நாம் தனியாருடன் இணைத்து நுகர்வோருக்கு அதனை பயன்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்குகின்றோம்.
இலங்கையின் சூரிய சக்திக்கான மாற்றமானது நாட்டில் காணப்படும் எரிசக்தி கட்டமைப்பில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் நிலைபேறான தன்மை காலநிலை மாற்ற பாதிப்புகளை தணிப்பதற்காக அமைந்துள்ளது. இதன் மூலம் தீர்ந்துப்போகும் எரிசக்தி முதல்களில் தங்கியிருப்பதனை கட்டம் கட்டமாக குறைக்க முடியும். இதனால் நாட்டின் காபன் வெளியேற்றம் குறைவடைவதுடன் சூழல் பாதிப்புகளும் தணிக்கப்படுகின்றன.
மத்திய மலைநாட்டை பொறுத்தவரையில் நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களை விட சூரிய ஒளியின் நேரம் ஒப்பீட்டளவில் குறைவாகும். இது ஒரு சவாலாகும். மேலும் சூரிய படலங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சராசரியாக ஒரு கிலோமீட்டர் பரப்புக்குள் பயன்படுத்த வேண்டும். அதற்கான நுகர்வாளர்கள் இல்லாவிட்டால் அது தொழில்நுட்ப ரீதியாக உயர் மின் அழுத்தத்தை தோற்றுவிக்கும். எனவே குறுகிய நிலப்பரப்புக்குள் பலர் சூரிய படலங்களை பொருத்துவதற்கு விண்ணப்பிக்கும் போது எம்மால் அதை வழங்குவதில் சிரமம் ஏற்படுகின்றது.
நாம் சூரிய சக்தி படலங்களை பொருத்துவதற்கு இலங்கை தர நிர்ணய சபை மூலம் சான்றளிக்கப்பட்ட சாதனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கின்றோம் .மேலும் தனியாருக்கு மேற்கூரை படலங்களை பொருத்துவதற்கு மட்டுமே அனுமதியுண்டு.
மேலும் மிகை உற்பத்தியை அவர்கள் மின்சார சபைக்கு வழங்கி வருமானத்தையும் பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் சேமித்து வைத்தும் பயன்படுத்தக்கூடிய வசதிகள் உள்ளன. எவ்வாறாயினும் இது சூழலுக்கு உகந்த ஒரு திட்டமாகும். எனினும் காலப்போக்கில் இதன்மூலம் உருவாகும் இலத்திரனியல் குப்பைகளை முறையாக கையாள்வதற்கு தேசிய வேலைத்திட்டங்கள் அவசியம்” என்று கூறினார்.
மேலும் இந்த மாற்றமானது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் நுகர்வோருக்கு எரிசக்தி செலவுகளை குறைப்பதன் மூலம் பொருளாதார நன்மைகளையும் கொண்டு வருகின்றது. பரந்தளவான சூரியசக்தி மின்னுற்பத்தி தொழில்துறையானது சர்வதேசத்துடன் சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் போன்ற விடயபரப்புகளில் இலங்கைக்கு ஒத்துழைப்புகளையும் கூட்டாண்மையையும் வழங்குகின்றது. மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் முதலீடுகளையும் ஊக்குவிக்கின்றது. அதேபோல இலங்கை கைச்சாதிட்டுள்ள சர்வதேச சுற்றுச்சூழல், மற்றும் காலநிலை மாற்ற உடன்படிக்கைகளுக்கும் இது சாதகமான பங்களிப்பை வழங்குகின்றது.
இதன் மூலம் வளர்ந்து வரும் நாடுகளிற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இலங்கை ஒரு முன்னோடியாக மாற்றமடைய முடியும்.
சாராம்சமாக புதுப்பிக்கத்தக்க சக்தி முதல்களில் பிரதானமான சூரியசக்தி முதலை இலங்கை பயன்படுத்துவதனூடாக நிலையான அபிவிருத்தி உருவாகுவதோடு காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சாத்தியமான வாய்ப்புகளை அதிகரிக்கின்றது. நாட்டின் நிலைபேறான அபிவிருத்திக்கு இது இன்றிமையாததாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM