ஆர்.ராம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் கூட்டிணைந்து செயற்படுவதற்காக சாதகமான சமிக்ஞைகளை வெளியிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாதிரட்ன உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கு முன்னதாக சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்கள் தமக்குள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் கூட்டிணைந்து செயற்படுவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் இரு கட்சிகளின் தலைவர்களின் ஒத்துழைப்புக்கள் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் மீண்டும் இணைந்து கொள்ள வேண்டும் என்றகோரிக்கைகள் தொடர்ச்சியாக இருந்துவருகின்றன. விசேடமாக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய்க் கட்சியில் இணைய வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது. அதற்காக கடந்த காலங்களில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டும் உள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் மீண்டும் தாய்க்கட்சிக்கு வருவதற்கு தயாராக உள்ளனர். எனினும் அவர்கள் தங்களின் பிரதிநிதித்துவம் சம்பந்தமாக சிந்திக்கின்றார்கள்.
இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணியாக இணைந்து செயற்படுவதென்றும் இதனுடன் ஏனைய கட்சிகளையும் இணைத்து பரந்துபட்டதொரு அணியாக முன்னகர்வது குறித்து எதிர்பார்ப்புக்கள் உள்ளன.
விசேடமாக ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைகின்றபோது தேர்தல் வெற்றிகள் உள்ளிட்டவை சாதகமாக அமையும் என்பதை நடைபெற்று முடிந்த கூட்டுறவுத்துறைக்கான தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது. ஆட்சியில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் இருக்கும் தேசிய மக்கள் சக்தியே தோல்வி கண்டுள்ளது.
இந்த நிலைமையில் கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்கள் மீண்டும் இருதரப்பும் இணைந்து கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். அதன் ஒரு வெளிப்பாடாகவே கடுவல தொகுதியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் மீள் இணைவு காணப்படுகின்றது.
எனவே கட்சியின் அங்கத்தவர்களின் நிலைப்பாடுகளை கட்சிகளின் தலைவர்கள் உணர்ந்திருக்கின்றார்கள். அதனால் அவர்கள் கூட்டிணைவது குறித்து பேச்சுக்களை முன்னெடுப்பதற்கான சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுவொரு முக்கியமானதொரு மாற்றமாகும். ஆகவே, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக சாதகமான முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கை வெகுவாக உள்ளது.
அதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பதவிநிலைகளைத் தாண்டி இருதரப்பினரும் இணைந்து கொள்ளும் பட்சத்தில் தான் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை வெற்றிகரமாக முகங்கொடுக்க முடியும் என்ற புரிதல் இரு தரப்பினரும் நன்றாகவே உள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM