(துரைநாயகம் சஞ்சீவன்)
மூதூர் - மேன்காமம் குளத்தை புனரமைப்பதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மாத்திரமன்றி, நாட்டின் நெல் உற்பத்தியையும் அதிகரிக்க முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மேன்காமம் கிராமத்தில் அமைந்துள்ள மேன்காமம் குளமானது இருநூறு வருடங்கள் பழமை வாய்ந்ததும் சுமார் 600 ஏக்கர் விஸ்தீரணம் கொண்டதுமாகும். இதற்கு மகாவலி கங்கையினூடாக பாயும் நீரானது D6 வாய்க்காலின் வழியாக குளத்தினுள் சேமித்து வைக்கப்பட்டு சுமார் 500 ஏக்கர் வயல்நிலங்களுக்கு இரு போகத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது D6 வாய்க்காலானது அத்துமீறி குளத்தினுள் வேளாண்மை செய்வோரால் அழிக்கப்பட்டிருப்பதால் குளத்துக்கு நீரைக் கொண்டுசெல்ல முடியாமல் இருப்பதுடன் குளத்தினுள் பற்றைக்காடுகளும் நீர்த்தாவரங்களும் வளர்ந்து, குளத்தின் ஆழம் குறைந்து காணப்படுவதாலும் நீரைத் தேக்கிவைத்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இக்குளத்தின் கரையோரப் பகுதிகளை சிலர் அத்துமீறி கையகப்படுத்தி வேளாண்மை செய்வதனால் குளத்தில் நீரை தேக்கிவைக்க முடியாதுள்ளது. இதனால் நெற்பயிர்ச்செய்கையை ஜீவனோபாயத் தொழிலாக மேற்கொண்டுவரும் 250 குடும்பங்களுக்கு மேற்பட்ட விவசாயிகள் வருடாவருடம் இரு போகச் செய்கையிலும் மிகுந்த நட்டத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.
அதுமட்டுமன்றி, விவசாயிகள் தமது விவசாயத்துக்குத் தேவையான நீரை நேரடியாகவே பெற்று விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீர் தட்டுப்பாடான நேரங்களில் மகாவலி கங்கையின் அணைக்கட்டுக்குச் சென்று பலருடன் தகராறு செய்து, மண் மூடைகளை அடுக்கி நீரை திருப்ப வேண்டியுள்ளது. அதுமட்டுமன்றி, நீரை பகிர்ந்துகொள்வதில் விவசாயிகளுக்கிடையே முரண்பாடுகளும் ஏற்பட்டு வருகின்றன.
குளம் புனரமைக்கப்பட்டு அதனுள் போதியளவு நீர் தேக்கப்படுமாயின், குளப்பகுதியினுள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடுக்கப்படும்.
அத்துடன், இது விவசாயிகளுக்கு மாத்திரமன்றி, மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்டவர்களுக்கும், கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கும் உதவியாக அமையும்.
எனவே, மக்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு குளத்தை அத்துமீறி கைப்பற்றியுள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பினை நிரந்தரமாக தடைசெய்து, பல தசாப்த காலமாக புனரமைக்கப்படாமல் காணப்படும் குளத்தினை புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனர்.
இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் கிராம மக்களின் வாழ்வாதாரம், நாட்டின் பொருளாதாரத்தினை மேம்படுத்த முடியும் எனவும், எதிர்வரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக கவனம் செலுத்துமாறும் விவசாயிகள் உரிய தரப்பினரை கேட்டுக்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM