எழுத்தாளர், நாடகக் கலைஞர், முற்போக்கு சிந்தனையாளர், தொழிற்சங்க செயற்பாட்டாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர் என்கிற பன்முக ஆளுமையாளரான அந்தனி ஜீவா நேற்று வெள்ளிக்கிழமை (10) காலமான செய்தி கலை இலக்கியவாதிகளிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையக மக்களின் வாழ்க்கை மேம்பட கலையையும் இலக்கியத்தையும் வெகுவாக பயன்படுத்தி காத்திரமான சிந்தனைகளை சமூகத்தில் விதைத்தவர் அந்தனி ஜீவா.
மலையக இலக்கியவாதியாக தன்னை முன்னிலைப்படுத்தி, பல இளம் எழுத்தாளர்கள், படைப்பாளிகளை கலை இலக்கிய உலகில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
“கொழுந்து” என்ற மலையக சஞ்சிகையும் “மலையகமும் இலக்கியமும்”, “குறிஞ்சி மலர்கள்”, “குறிஞ்சிக் குயில்கள்”, “அம்மா'', “மலையக மாணிக்கங்கள்”, “முகமும் முகவரியும்”, “திருந்திய அசோகன்” ஆகிய நூல்களும் அவர் எழுதிய இன்னும் சில ஆக்கங்களும் இன்றளவில் இந்தப் படைப்பாளியின் பெயரை நினைவுபடுத்துகின்றன.
கலைகளையும் இலக்கியங்களையும் வெறும் படைப்புக்களாக மட்டுமன்றி, அவற்றை மனித வாழ்வியலோடு பொருத்திப் பார்ப்பது, அவற்றை மானுட சமூகத்தின் உயர்வுக்காக கையாள்வது இவரது சிறப்பு.
அந்தனி ஜீவாவால் அங்கீகாரம் பெற்ற இளம் எழுத்தாளர்கள், கலைஞர்கள் பலர்.
இவர் 1944ஆம் ஆண்டு மே 26ஆம் திகதி செபஸ்டியான் - லட்சுமி அம்மாள் தம்பதிக்கு மகனாக கொழும்பில் பிறந்தார்.
கொழும்பு சுவர்ண வீதியிலுள்ள தமிழ்ப் பாடசாலையிலும், பம்பலப்பிட்டி புனித மரியாள் கல்லூரியிலும் கல்வி கற்ற இவர், கொழும்பு நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் இதழியலில் டிப்ளோமா பட்டம் பெற்றார்.
1960 முதல் தனது எழுத்துப் பணியை ஆரம்பித்த இவர் சிந்தாமணி, சிரித்திரன், சுதந்திரன், வீரகேசரி, மாணவன், தமிழருவி, திருமகன், கலைமலர், மாணவ மலர், மாலைமுரசு, ஈழநாடு, அமுதம், தேசபக்தன், நவமணி, தினகரன் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதி வந்தார்.
மலையக இதழ்களான “கொழுந்து”, “குன்றின் குரல்”, “ஜனசக்தி” ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக பணியாற்றினார்.
நாடகத்துறையில் வலம் வந்த இவர் எழுதிய முதல் நாடகமான “முள்ளில் ரோஜா” 1970இல் மேடையேற்றப்பட்டது.
“அக்கினிப்பூக்கள்”, “வீணை அழுகின்றது” போன்ற சில நாடகங்கள் 1970களில் இவரால் எழுதப்பட்டவையே. இந்த நாடகங்கள் மலையகத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை பிரதிபலித்தன.
இவர் பத்துக்கும் மேற்பட்ட நாடகங்களை மேடையேற்றியதோடு, 80களில் வீதி நாடகங்களையும் அறிமுகப்படுத்தினார்.
இலங்கையின் மலையக எழுத்தாளர்கள், கவிஞர்கள், சிறுகதைகள், நாடகங்களை தனித்தனி தொகுப்பாக நூல் வடிவில் ஆவணப்படுத்தி தலைமுறை கடந்து இலக்கியகர்த்தாக்களின் புகழை ஓங்கச் செய்தவர்.
இவரது மறைவு இலங்கையின் கலை, இலக்கியத்துறைக்கு பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கை வரலாற்றில் கலைகளும் இலக்கியங்களும் நிலைபெறும் காலம் வரை இவரது நாமம் நிலைத்திருக்கும்!
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM