என்னைத் தேட வேண்டாம் என்னை சந்தோஷமாக வாழவிடவில்லை. இத்துடன் என் வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றேன். எனது மரணத்திற்கு எவரும் காரணம் இல்லை என மன்னாரில் புகையிரதத்துக்கு முன்னால் பாய்ந்து தற்கொலைசெய்து கொண்ட மாணவியினால் எழுதப்பட்ட  3 பக்கங்கள் கொண்ட கடிதமொன்று பொலிஸாரிடம் கிடைத்துள்ளது.

மன்னார் பெரிய பலத்துக்கு அருகில் கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் குறித்த மாணவி நேற்று மாலை  பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர் இறுதியாக எழுதிய கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது.

உயிரிழந்த மாணவி மன்னாரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்கும் தயாளினி என அழைக்கப்படும் சண்முகலிங்கம் மிதுலா என தெரியவந்தள்ளது.

மாணவி தனது சொந்த இடமான முழங்காவில் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் மன்னார் உப்புக்களம் பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றபோதே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இந்த அனர்த்தம் இடம்பெறும் முன்னர் மூன்று பக்கம் அடங்கிய கடிதம் ஒன்றை மாணவி எழுதி வைத்துள்ளார்.

சம்பவம் பற்றிமேலும்தெரியவருவதாவது,

முழங்காவில் பகுதிக்குச் சேர்ந்த தயாளினி என அழைக்கப்படும் சண்முகலிங்கம் மிதுலா என்ற மாணவி மன்னார் நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்று வருகின்றார்.

குறித்த மாணவி முழங்காவிலில் உள்ள தனது கிராமத்தில் இருந்து உடைகள் அடங்கிய பொதியொன்றுடன் மன்னாரில் உள்ள தனது வாடகை வீட்டை நோக்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த மாணவி மன்னார் பெரிய பலத்துக்கு அருகில் கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயில் ஒன்றின் முன் நேற்று மாலை பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதன் போது மாணவி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மாணவியின் உடலம் அதே புகையிரதத்திலேயே ஏற்றப்பட்டு மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதோடு, அவர் தன்னுடன் எடுத்துவந்த பொதியும் சோதனை செய்யப்பட்டது.

இதன் போது குறித்த மாணவி மனதை வேதனைக்கு உள்ளாக்குகின்ற வகையில் சுமார் 3 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரியவந்தது.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

ஏன் அம்மா எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் சந்தோஷம் , அன்பு, பாசம் என்பவற்றை நான் இழந்து நிற்கிறேன். உங்களால் தான் அதை நான் இழந்து தனியாக தவிக்கின்றேன். அம்மா உங்களுக்குத் தெரியுமா நாள் அம்மா அம்மா என்று பாசமுடன் ஏங்கிக் கொண்டிருக்கிறேன் ஏன் அம்மா என்னை புரிந்து கொள்கிறீர்கள் இல்லை.

எனக்காக உள்ளவர்களுடன் சண்டையிட்டு என்னை அவர்களிடம் இருந்து பிரிக்க நினைக்கிறீர்கள். தொடர்ந்தும் எனக்கு துரோகம் செய்ய நினைக்கிறீர்கள் என 3 பக்கங்கள் கொண்ட குறித்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

இதேவேளை, எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும் தனது வாழ்க்கையில் சந்தோசம் இல்லை எனவும் இதன் காரணமாகவே குறித்த முடிவை எடுத்துள்ளதாகவும் நான் இறப்பதற்கு காரணம் என்று சொன்னால் எனது குடும்பமே காரணம் எனவும் அக்கடிதத்தில் மேலும் எழுதப்பட்டுள்ளது.

தற்போது மாணவியின் சடலம் மன்னார் பொதுவைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.