ம.ரூபன்
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் 51வது ஆண்டாக இன்று (10) நினைவுகூரப்பட்டு வருகிறது.
1974 ஜனவரி 10ஆம் திகதி உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று இடம்பெற்ற பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டையும் மிருகத்தனமான செயல்களையும் இன்று வரை மறக்கமுடியாது.
வீரகேசரி யாழ். நிருபரான எஸ்.செல்லத்துரையை இந்நாளில் நினைவில் நிறுத்தவேண்டும். இம்மாநாட்டு நிகழ்வுகளை வீரகேசரி அன்றைய நாட்களில் காத்திரமாக வெளியிட்டமை சிறப்பம்சமாகும்.
அருட்தந்தை தனிநாயகம் அடிகள் மாநாட்டு நிகழ்வுகளை விரிவாக வெளியிட்டதற்கு வீரகேசரியை பாராட்டினார். வீரகேசரி பிரதிகளையும் அவர் சேகரித்து வைத்திருந்தார். சுகயீனமாக இருந்தபோதும் அவரை சந்திக்க வருபவர்களுக்கு வீரகேசரி பத்திரிகையை காண்பித்தார். இன்றும் பலரிடம் மாநாடு தொடர்பான செய்திகளோடு வெளியான வீரகேசரி பத்திரிகையின் பிரதிகள் உள்ளன.
கைடக்கத்தொலைபேசி, மின்னஞ்சல், Fax வசதிகள் இல்லாத அக்காலத்தில் யாழ்.நிருபர் எஸ்.செல்லத்துரையின் ஊடகப் பணியை பாராட்டவேண்டும். இன்றைய ஊடகவியலாளர்களைப் போல அவர் நீளக்காற்சட்டை அணிவதில்லை. வேட்டியும் சேர்ட்டும்தான் அணிவார். தொலைபேசி மூலமும் தபால் மூலமும் செய்திகளை அனுப்புவார்.
அன்று செய்தியாக வெளிவராத பல துயர சம்பவங்களையும் தகவல்களையும் பின்னர் பலரிடம் உணர்வு மேலிடக் கூறி வந்தவரையும் அவர் சொன்னவற்றையும் எப்படி மறப்பது!
வீரகேசரி புகைப்பட ஊடகவியலாளர் கைலை வாசனையும் இத்தருணத்தில் மறக்கமுடியாது. அன்றைய தினம் பொலிஸாரின் தாக்குதல்களுக்கு மத்தியிலும் சன நெரிசலில் மக்களுடன் ஒருவராக ஓடி ஓடி நிலத்தில் படுத்து, பதுங்கி, புரண்டு பல புகைப்படங்களை எடுத்த அவரின் துணிச்சலை பாராட்டவேண்டும்.
அவர் அன்று எடுத்த பல கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் இன்றும் உள்ளன. இன்று போல நவீன கமரா அன்று அவரிடம் இருக்கவில்லை. பலாலியில் வாழ்ந்த அவரும் பின்னாளில் ஒரு நாள் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அரசுக்கு எதிராக தெற்கில் வீதிகளில் பகல் வேளைகளில் போராடும் பல்கலைக்கழக மாணவர்களிடம் பொலிஸார் நடந்துகொள்ளும் விதத்தையும் வடக்கு, கிழக்கில் மக்கள் போராடும் தருணங்களில் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பதையும் அண்மைக்காலங்களில் காண்கிறோம்.
அரகலய போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடும் கடந்த அரசின் ஆதரவு அரசியல்வாதிகளின் வீடுகளும் சொத்துக்களும் எரிக்கப்பட்டபோதும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீடு தாக்கப்பட்டபோதும் ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி பலர் நுழைந்தபோதும் பொலிஸார் அமைதியாகவே இருந்தனர். அந்த சந்தர்ப்பங்களில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை.
1974 ஜனவரி 10 அன்று யாழ். நகரில் தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிஸார் கண்ணீர்ப்புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் ஈடுபட்டதுடன் குழுமியிருந்த மக்களை மிருகத்தனமாக தாக்கினர்.
எங்கும் இருள் சூழ்ந்தது. பெண்கள் மற்றும் ஆண்களின் ஆடைகளை உருவப்பட்டன. உள்ளாடைகளுடன் பல பெண்கள் பதறி ஓடினர். ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்.
நிலத்தில் இருந்தவர்களை சப்பாத்துக் கால்களில் மிதித்து பொலிஸார் சித்திரவதை செய்தனர். அவ்வேளைகளில் பலர் திரையரங்குகளிலும் நகர மண்டபத்திலும் பொது வைத்தியசாலை முதலான பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து இரவைக் கழித்தனர்.
வீரசிங்கம் மண்டபம், திறந்தவெளியரங்கு, மத்திய கல்லூரி மைதானம், கோட்டையை சூழவுள்ள பகுதிகளில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் செய்வதறியாமல் நாலாப் பக்கங்களும் பாதுகாப்பு தேடி சிதறி ஓடினார்கள்.
பிள்ளைகளை கைவிட்டு கலங்கிய பெற்றோர் தப்பியோட வழி தெரியாமல் பரிதவித்து, அருகில் உள்ள குளத்தில் விழுந்தவர்கள் பலர்.
யாழ். பிரதான வீதியில் சுதந்திரக் கட்சி அலுவலகம் சிலரால் தாக்கப்பட்டதால் சென்.ஜேம்ஸ் தேவாலயத்துக்கு அருகில் சென்றவர்களையும் பொலிஸார் தாக்கினர். சிலரின் வாகனங்களும் தாக்கப்பட்டன.
யாழ். பஸ் நிலையத்தில் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டது. பயணிகளையும் விட்டுவைக்கவில்லை. நள்ளிரவு 2 மணிக்கும் தூர இடங்களுக்கான பஸ்கள் சேவையிலிருக்கும் என ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டும், மக்கள் பொலிஸாருக்கு அஞ்சி பஸ் நிலையத்துக்குச் செல்லவில்லை.
விடிந்ததும் காலையில் பஸ் நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது நகர வீதிகளில் பொலிஸாரின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.
அமைதியான யாழ்ப்பாணத்தில் பணியாற்றியபோது நிகழ்ந்த இத்துயரங்களை என்றுமே மறக்கமுடியாது என யாழ். அரசாங்க அதிபர் விமல் அமரசேகர கவலையோடு தெரிவித்திருந்தார். அவரும் சம்பவ இடத்தை இரவில் சென்று பார்வையிட்டார்.
மறுநாள் 11ஆம் திகதி கைவிடப்பட்ட நூற்றுக்கணக்கான சைக்கிள்கள், பாதணிகள், உடைகள், கைப்பைகள், சேதமாக்கப்பட்ட வாகனங்கள் வீதியில் காணப்பட்டன. அப்போது சில தங்க நகைகளும் மீட்கப்பட்டன.
அதனை தொடர்ந்து, யாழ்ப்பாணம் நீதிவான் (Magistrate) கே.பாலகிட்னர் மரண விசாரணைகளை (வழக்கு இல.3427) மேற்கொண்டிருந்தார்.
இச்சம்பவத்துக்கு நீதியான விசாரணையை நடத்த ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு சிறிமாவோ அரசிடம் யாழ் மக்கள் குழு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், ஓய்வுபெற்ற நீதியரசர்களான ஓ.எல்.டீ.கிறெட்சர், வி.மாணிக்கவாசகர், முன்னாள் ஆயர் கலாநிதி எஸ்.குலேந்திரன் தலைமையிலான குழுவை யாழ். பிரஜைகள் அமைப்பு நியமித்து விசாரணையும் நடைபெற்றது.
“இந்த மாநாட்டை கொழும்பில் நடத்தியிருந்தால் இந்த அழிவுகள் ஏற்பட்டிருக்காது. அரச ஆதரவும் உதவியும் கிடைத்திருக்கும்” என தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சர் செல்லையா குமாரசூரியர் அச்சம்பவத்துக்குப் பின்னர் கூறினார்.
வண.தனிநாயகம் அடிகளாருக்கு அவரது இறுதிக்காலத்தில் நோய் ஏற்படுவதற்கும் இந்த மோசமான தாக்குதல் சம்பவமே காரணம் எனவும் கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM