(மா.உஷாநந்தினி)
பாதங்கள் ஜதி போடுகையில் மனங்களில் அசைவை, அதிர்வை ஏற்படுத்தும் பரதநாட்டியக் கலை, உருவத்தில் சிறுத்த, பத்து வயதேயான ஒரு சிறுமியின் தலை முதல் பாதம் வரை ஊடுருவி வெளிப்பட்டபோது கண்களை அகல விரிக்காதவர்கள் எவருமில்லை!
உருப்படிகளுக்கு தகுந்தாற்போல் எட்டு வித நடனங்களை ஒரே மேடையில், தனியொரு ஆடல் நாயகியாக நாட்டியமாடி வெற்றிகரமாக தனது அரங்கேற்றத்தை நிகழ்த்தியிருந்தார், நிதீஷா நவநீதன்.
6 வயதில் சுந்தரேசர் கலைக்கோயில் நடனப்பள்ளியில் இணைந்து, “பரதநாட்டிய நன்மணி" ஸ்ரீமதி சுகன்யா நித்தியானந்தனிடம் பரதநாட்டியக் கலையை கற்க ஆரம்பித்த நிதீஷாவின் அரங்கேற்றம் கடந்த 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பிஷப்ஸ் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
ஞானப்பிரகாசம் நவநீதன் - வேலுசாமி அனுசியா தம்பதியின் மகளான நிதீஷா, வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையில் கல்வி கற்கிறார். கற்றலில் திறமைசாலியான இவர், நாட்டியக் கலையிலும் தான் கொண்ட வித்துவத்தை அரங்கேறி நிரூபித்திருந்தார்.
ஸ்ரீமதி சுகன்யா நித்தியானந்தனின் நெறியாள்கையில் அமைந்த முதல் அரங்கேற்றம் இது.
திருகோணமலை தென்கயிலை ஆதீன குருமுதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் முன்னிலையில் நிகழ்ந்த நிதீஷாவின் அரங்கேற்றத்தை காண பிரதம அதிதியாக தியாகராஜர் கலைக்கோயில் நடனப்பள்ளியின் இயக்குநர் “நாட்டிய கலைமணி” ஸ்ரீமதி பவானி குகப்ரியா, கௌரவ அதிதிகளாக எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் பத்திரிகை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம். செந்தில்நாதன், வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை அதிபர் ஸ்டெல்லா அன்டன், சிறப்பு அதிதிகளாக அகில இலங்கை கம்பன் கழகதத்தின் ஸ்தாபகர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், வத்தளை பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் சமிளா ரூபசிங்க உட்பட கலைஞர்கள், கலாரசிகர்கள் என பலர் வருகைதந்திருந்தனர்.
பார்வையாளர்கள் ஆர்வம் மேலிடக் காத்திருக்க, அணிசேர் கலைஞர்களின் இசையும் குரலும் நட்டுவாங்கமும் சேர்ந்து அலாரிப்பை தொட, ஆடல் நாயகி நிதீஷா மேடையில் பாதம் பதித்தார்.
கழுத்து, கண், கைகள், கைவிரல்கள், கால்கள் என அந்தச் சின்னஞ்சிறு உடல் அசைந்தாடிய அலாரிப்பு நடனம் எடுத்த எடுப்பிலேயே சிலிர்ப்பூட்டியது. அதேவேளை, எந்தப் பிசகும் ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற பதைபதைப்பும் அரங்கத்தில் பலருக்குள் இருந்திருக்கும்!
இருந்தபோதும், முழுமையான ஒரு அரங்கேற்ற மார்க்கத்தை நிதீஷா தொய்வோ பிசகோ இல்லாமல் வெற்றிகரமாக ஆடி நிறைவு செய்வாள் என்ற நம்பிக்கை அலாரிப்பின் நிறைவில் கிடைத்தது.
தொடர்ந்து, ஜதீஸ்வரத்தில் இன்னும் அவரது ஆடல் மிளிர்ந்தது.
துர்க்கை அம்மனைப் போற்றும் துதிப் பாடலுக்கு திரிசூலம் ஏந்தி ரௌத்திர பாவத்தோடு கௌத்துவ நடனமாடினார்.
அடுத்து, “நீ மனமிரங்கி...." வர்ணம் உருப்படியில் முருகப் பெருமானின் அற்புதக் கதைக் காட்சிகளை நாட்டியத்தினூடாக காண்பித்தார்.
நாட்டியத்தோடு லயித்து ஆடியபோது கழுத்தில் அணிந்த ஆபரணம் அறுந்துத் தொங்கியபோதும் கால் இடறி விழுந்தபோதும் ஆடலை விட்டு நிதீஷாவின் கவனம் சிதறவில்லை. அந்த சில நொடிகளில் ஒரு முழுமையான நடனக் கலைஞருக்கே உரிய தகைமையை சிறுமியிடம் பார்க்க முடிந்தது.
அரங்கேற்ற நாயகிக்கு சவாலான, மிக நீண்ட உருப்படியான வர்ணத்தை ஆடி முடித்தபோது சபையில் கரவொலி சில வினாடிகள் நீடித்தது!
திருக்கேதீச்சரத்தான் புகழ் பாடும் கீர்த்தனையும் அடுத்து பதமும் ஆடப்பட்டன.
இந்த இரண்டு உருப்படிகளுக்கான பாடல் வரிகளையும் தவத்திரு அகத்தியர் அடிகளார் எழுதிக் கொடுக்க, அந்த பாடல்களுக்கு கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தின் ஆசிரியை தாரணி இசை அமைத்திருந்தார்.
குறத்தி வேடமணிந்து “பிரம்மம் ஒன்றுதான்" என நிதீஷா ஆடிய குறவர் மரபு நடனம் பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது.
அடுத்து, தில்லானாவில் விறுவிறுப்பூட்டும் ஸ்வரங்களும் ஜதிகளும் சேர அதற்கு தகுந்தாற்போல் ஆடல் நாயகியின் நாட்டியம் அமைந்தது.
இந்த அரங்கேற்ற நிகழ்வில் நாட்டிய குரு சுகன்யா நித்தியானந்தன் நட்டுவாங்கம் இசைக்க, கர்நாடக இசைக்கலைஞர்களான ஸ்ரீ. திவாகர் செல்வரட்ணம் - இரா. ஸ்ரீவத்ஸலா திவாகர் தம்பதி பாடியிருந்தனர்.
அத்துடன், ஸ்ரீ.இ.நிறோஜன் (வயலின்), ஸ்ரீ. ஷண்முகலிங்கம் நாகராஜன் (மிருதங்கம்), “விஷாரத" ரட்ணம் ரட்னதுரை (தாள தரங்கம்), சிவஞானசுந்தரம் ஜூட் (புல்லாங்குழல்), காயத்ரி சுந்தரமோஹன் (வீணை) ஆகியோரும் இசைப் பங்களிப்பு வழங்கினர்.
ஆடல் நிகழ்வுகளுக்கு நடுவே அணிசேர் கலைஞர்களின் தனியிசைக் கச்சேரியும் செவிக்கு விருந்தானது.
முடிவில், மங்களம் ஒலித்தபோது குரு - சிஷ்யை இருவரும் இணைந்து மேடையில் தோன்றி சபைக்கு நன்றி தெரிவித்தனர்.
அரங்கேற்றத்தில் பங்குகொண்ட அகத்தியர் அடிகளார் உரையாற்றுகையில், நடன ஆசிரியை சுகன்யா நித்தியானந்தன் இந்நாட்டியக் கலையை பிதுக்கல், நசுக்கலின்றி ஜதிகளை, கோர்வைகளை சிறப்பாக நிகழ்த்துவதாக கூறியதோடு நிதீஷாவின் நாட்டியம் அழகுற அமைந்திருப்பதாக பாராட்டினார்.
சில காலங்களாக சிலப்பதிகார காலத்துக்கு எம்மை அழைத்துச் செல்லும் வகையில் சிறுமியரின் அரங்கேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய நடனப் பணிகள் ஆடற்கலையை செப்பனிடும் வகையில் தொடரப்பட வேண்டும். ஜதிகளையும் சொற்களையும் நசுக்கிவிடாமல், பரதநாட்டியத்தை அதன் வடிவிலேயே ரசிகர்களுக்குத் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நடனக் கலைஞர் பவானி குகப்ரியா தனது உரையில், ஆடல் மங்கை நிதீஷா ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு ஜீவாத்மா என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “வரலாற்று விழிப்புணர்வு நிகழ்வுகள் ஆமை வேகத்திலும் வரலாற்று அழிப்பு முயற்சிகள் முயல் வேகத்திலும் களமிறங்கியிருப்பது காலத்தின் கோலமாகியிருக்கிறது.
பொதுவாக, மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அறிவையும் ஆற்றலையும் குறிக்கும் செயல், திறமை, பயன், அழகு, சுவை ஆகிய அம்சங்களை கலைகளில் காண்கிறோம். அழகியல் கலைகள் வெறும் பண்பாட்டுச் சின்னங்களாக மட்டுமன்றி அவை இன்றைய சமுதாயத்தின் ஜீவனுள்ள கலைகளாக விளங்குகின்றன.
அழகியல் கலைகளை கற்றவர்கள் அக்கலையின் மரபை அறிந்தால் மட்டும் போதாது. அக்கலைக்கும் சமுதாயத்துக்கும் இடையே நிலவவேண்டிய உறவையும் சமுதாயப் பணியையும் இனங்காண வேண்டும்.
இல்லையேல், ஆடம்பர விழாக்களிலும் அரங்க நிகழ்வுகளிலும் சமுதாயத்தில் தன் பெயரையும் புகழையும் தக்கவைத்துக்கொள்கிற, பரீட்சைகளுக்கும் போட்டிகளுக்கும் பட்டங்களுக்கும் என புறத்தேவைகளுக்கு மட்டுமே கையிலெடுத்து பயன்படுத்திக்கொள்கிற வெறும் பொழுதுபோக்குச் சின்னங்களாக கலைகள் ஆகிவிடும்.
ஆடல் என்பது அசையும் அல்லது இயங்கும் கலை. ஆடிக்கொண்டிருக்கும்போதுதான் அது ஆடலாகும்.
பிறப்பெடுத்து வந்த நாள் முதல் நம்முள் அசைந்துகொண்டிருக்கும் ஜீவனான சிவம் தன் அசைவை நிறுத்துவதற்கு முன், நம் உள்ளே நிகழ்த்தும் ஆடலை, உயிரின் அசைவை, உயிரின் ஆடலை நிறுத்துவதற்கு முன், நமக்குள் நாமே சிவேகமாக கொண்டு மகிழ்வாக வாழ முற்பட நாட்டியக் கலையை சிறார்களுக்கு கற்றுக்கொடுக்க பெற்றோர்கள் முன்வர வேண்டும்.
கற்பவர்கள் எல்லோரும் அரங்கேற்றம் காண வேண்டும் என்பதல்ல. அது இன்னுமொரு பரிமாணம்.
ஆனால், ஒவ்வொரு குழந்தையும் இப்பிறப்பின் நோக்கையும் இலக்கையும் செயல்திட்டத் திறனையும் ஆளுமையையும் கண்டறிய, தன்னைத் தானே நேசிக்க, தனக்கான ஆனந்தமயமான உலகை உருவாக்க இந்தக் கலைகள் துணை நிற்கும்...” என்றார்.
“சிலப்பதிகாரத்தில் மாதவி 12 வயதில் அரங்கேற்றம் நிகழ்த்தினாள். அரங்கேற்றத்துக்கு வயது முக்கியமல்ல. நேர்த்தியாக நாட்டியமாடும் ஆற்றலையும் தொடர்ச்சியாக மூன்று மணித்தியாலங்கள் ஆடக்கூடிய திறனையும் கொண்ட ஒருவரே, அரங்கேற்றம் நிகழ்த்தத் தகுதியுடையவர்” என்ற தனது குருவின் கூற்றுக்கு நியாயம் சேர்ப்பவராக, ஒரு முழுமையான மார்க்கத்தை ஆடி நிறைவு செய்த நிதீஷாவை ஒரு நடனக் கலைஞராக, எதிர்காலத்தில் மின்னப்போகும் நடனத் தாரகையாக அரங்கமே அங்கீகரித்துப் பாராட்டியது.
படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM