கவனிக்காமல் விடப்பட்ட முன்னுரிமைக்குரிய ஒரு விவகாரம் ; அரசாங்கத்தினால் சீர்செய்யமுடியும்

Published By: Digital Desk 7

09 Jan, 2025 | 11:02 AM
image

கலாநிதி ஜெகான் பெரேரா

ஊழல் மற்றும் விரயப் பிரச்சினைக்கு முடிவுகட்டுவது என்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் முக்கியமானது.2022 ஆம் ஆண்டில் அரசாங்கத்தை வீழ்த்திய அறகலய போராட்டத்தின் மையப் பொருளாகவும் பொருளாகவும் அதுவே இருந்தது.  எதிரணியில் இருந்தபோது வேறுபல வாக்குறுதிகளையும் அரசாங்கம் வழங்கியது.

ஆனால், வாழ்க்கைச் செலவைக் குறைப்பது போன்ற ஏனைய வாக்குறுதிகளைப் போலன்றி, ஊழலையும் விரயத்தையும் குறைக்கும் வாக்குறுதியை நிறைவேற்றுவது பெருமளவுக்கு அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக இருக்கிறது. வாழ்க்கைச் செலவைக் குறைப்பது என்பது உள்நாட்டுக் காரணிகளையும் விடவும் பெருமளவுக்கு வெளிக்காரணிகளினால் நிர்ணயிக்கப்படுகிறது. 

அரசாங்கம் அதன் செலவினங்களை கணிசமான அளவுக்கு குறைத்திருக்கிறது. தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களும் புதிய ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவியேற்பு வைபவங்களும் மிகவும் எளிமையாக அமைந்தன. தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமாக கடந்தமாதம் இந்தியாவுக்கு சென்ற ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தன்னுடன் ஒரு சிறிய தூதுக் குழுவையே கூட்டிச் சென்றார்.

அரசாங்கம் பதவியில் இருந்த முதல் நூறு நாட்களும் கூட குறிப்பிடத் தக்கவையாகவே அமைந்தன. அரசாங்க உறுப்பினர்கள் எந்தவிதமான நிதி ஊழலிலும் ஈடுபடவில்லை. முன்னர் அதிகாரத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு தரப்புடன் பேரத்தில் ஈடுபட்ட  பின்புலத்தில் நோக்கும்போது இது குறிப்பிடத்தக்க ஒரு சாதனையாகும்.

சமுதாயத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் ஊடுருவியிருக்கும் ஊழல் பிரச்சினையை கையாளுவது - அதுவும் குறிப்பாக,  நிலையான வருமானங்களைக் கொண்டிருப்பவர்கள்   தங்களது தற்போதைய சம்பளங்களை வைத்துக்கொண்டு வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கமுடியாமல் கஷ்டப்படுகின்ற  சூழ்நிலையில் -  கடுமையான சவால்மிக்கதாகும்.

வாழ்க்கைச் செலவைக் குறைப்பது மற்றும் சம்பளங்களை அதிகரிப்பது தொடர்பில்  வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அரசாங்கத்துக்கு இருக்கும் இயலாமை அது உருவாக்கிய பிரச்சினைகளின் விளைவானது அல்ல. முன்னைய அரசாங்கங்கள் செய்துகொண்ட உடன்படிக்கைகள் காரணமாக கட்டுப்பட வேண்டியிருக்கும் நிபந்தனைகளும் அந்த பிரச்சினைகளில் அடங்கும். 

இலங்கையை தூய்மையாக்குவதில் அரசாங்கத்துக்கு இருக்கும் பற்றுறுதி " கிளீன் ஸ்ரீலங்கா" திட்டத்துக்கான  ஜனாதிபதி செயலணி நியமனத்தில் வெளிப்பட்டது. இந்த செயலணியின நோக்கம் ஒரு  விரிவான சமூக, சுற்றுச்சூழல் மற்றும் ஒழுக்க நெறிமுறை மாற்றத்தின் ஊடாக நாட்டை மேன்மைப் படுத்துவதேயாகும். 

மாற்றம் என்பது உயர்மட்டத்தில் இருந்து அதாவது ஜனாதிபதியின் செயலாளர், ஆயுதப்படைகளின் தளபதிகள், பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட அரசாங்கத்தில் உயர்பதவி நிலைகளில் இருக்கும் உறுப்பினர்கள் போன்ற உயர்மட்டத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்திருக்கிறது போன்று தெரிகிறது.

ஆனால், ஜனாதிபதியின் உறுப்பினர்களின் வகைதொகை ( Composition ), சகல சமூகத்தவர்களையும் அரவணைத்தல், தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களின் நடைமுறைப்படுத்தலில் கவனத்தைச் செலுத்துதல், தெளிவான செயற்திட்ட விபரங்களை வழங்குதல் ஆகியவை தொடர்பில் வெளிப்படுத்தப்படும் அக்கறைகள் உரியமுறையில் கையாளப்பட வேண்டியது அவசியமாகும்.

எதிர்மறையான மூன்று பண்புக்கூறுகள்

ஊழலையும் விரயத்தையும் ஒழிப்பதற்கு புறம்பாக சமூகத்தில் இனவெறியையும் தீவிரவாதத்தையும் ஓழிப்பதையும் தனது முக்கியமான ஒரு பணியாக அரசாங்கம் பொறுப்பேற்றிருக்கிறது. இதை கருத்தூன்றி கவனிக்கவேண்டிய ஒரு விவகாரமாக அரசாங்கம் கருதுகின்றது போன்று தெரிகிறது.

சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் தேசிய மக்கள் சக்தி பெற்ற ஆணையில் அரசாங்கம் இனவாதப் போக்குடையது அல்ல என்ற மக்கள் நம்பிக்கையை காணக்கூடியதாக இருக்கிறது.

ஆனால், கிளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி (Presidential Task Force) இன, மத சமூகங்களின் முக்கியத்துவத்தை கவனிக்காமல் விட்டுவிட்டது. அந்த செயலணியின் உறுப்பினர்களை நியமிப்பதில் சகல சமூகங்களையும் அரவணைக்கும் போக்கை கடைப்பிடிக்க அரசாங்கம் தவறியமை பல்வகைமை கொண்ட சனத்தொகையின் மத்தியில் அந்த செயற்திட்டத்தின் ஏற்புடைமை மற்றும் பயனுடைத்தன்மைக்கு குந்தகமாக அமையக்கூடும்.

ஊழல், விரயம் மற்றும் இனவெறி ஆகியவற்றை நாட்டை அவலத்திற்குள் தள்ளிவிட்ட மூன்று எதிர்மறையான பண்புக்கூறுகள் என்று கூறமுடியும். தேசிய வளங்கள் தனிப்பட்ட நோக்கங்களுக்காக எடுக்கப்பட்டதனாலும் போரில் நிர்மூலம் செய்யப்பட்டதனாலும் நாடு அதன் வருமானத்தினதும் செல்வத்தினதும் ஒரு கணிசமான பகுதியை இழந்தது.

தாங்கள் மதிக்கப்படவில்ல என்றும் அரவணைக்கப்படாமல் பாரபட்சத்திற்குள்ளாக்கப்படுவதாகவும் இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் மத்தியில் காணப்படும் உணர்வே நீண்டகாலப் போராக இறுதியில் மாறிய இனநெருக்கடி தீவிரமடைந்ததற்கு முக்கியமான ஒரு காரணமாகும்.

அமைச்சரவை, பிரதியமைச்சர்கள் மற்றும் மிகவும் அண்மையில் கிளீன் ஸ்ரீலங்கா செயலணி போன்று கொள்கைகளை  வகுத்து தீர்மானங்களை எடுக்கும் முக்கியமான அமைப்புகளுக்கு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது சிறுபான்மைச் சமூகங்களுக்கு கடந்த கால நினைவுகளை தூண்டிவிடக்கூடும். 

 சிங்களவர்களை மாத்திரம் தெரிவு செய்யும் ( 1936 டொனமூர் அரசியலமைப்பு காலப்பகுதியில் கூட இடம்பெற்றதைப் போன்று ) தனது செயலை நியாயப்படுத்துவதற்கு  தகுதி மற்றும் நிரூபணமான  அர்ப்பணிப்பின் அடிப்படையிலேயே தெரிவுகள் செய்யப்படுவதாக அரசாங்கம் நியாயம் கற்பிக்கக்கூடும். சொந்த இனத்தவர்கள் மீதான நம்பிக்கைக்கு முன்னுரிமை கொடுக்கும் போக்கு நீண்ட வரலாற்றைக் கொண்டது. 

பிரிட்டனிடமிருந்து சுதந்திரத்தைக் கோருவதற்கு சிங்களவர்களில் நம்பிக்கை வைப்பதே சிறந்ததாக இருக்க முடியும் என்று சிங்கள தலைவர்கள் உணர்ந்ததால் பிரிட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முழுவதும் சிங்களவர்களைக் கொண்ட அமைச்சரவையை அவர்கள் தெரிவு செய்தனர். அதேவேளை, இலங்கை ஒரு பன்முக சமுதாயம் என்பதையும் இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் நாட்டின் சனத்தொகையில் சுமார்  30 சதவீதத்தினராக வாழ்கிறார்கள் என்பதையும் கவனத்தில் எடுக்கவேண்டியது அவசியமாகும்.

இனவெறி அரசியல் 

பெரும்பான்மைச் சமூகத்தவர்கள்  விவகாரங்களை நோக்குகின்ற முறையில் இருந்து வேறுபட்டதாக  சிறுபான்மைச்  சமூகத்தவர்கள் அவற்றை நோக்கக் கூடும். கொள்கைகளை வகுத்து தீர்மானங்களை எடுக்கும் அமைப்புக்களில் பல்வேறு இன, மத சமூகத்தவர்களையும் வேறுபட்ட பால்நிலை பின்னணிகளை கொண்டவர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதற்கு அது ஒரு முக்கிய காரணமாகும். தீர்மானங்களை எடுக்கும் அமைப்புக்களில் பெருமளவுக்கு பல்வகைமை கொண்ட பிரதிநிதித்துவம் இருப்பது தீர்மானங்களை எடுக்கும் வேகத்தில் தணிவை ஏற்படுத்தவும் கூடும். 

ஆனால், அவ்வாறு கலப்பான சிந்தனைகளையும் நலன்களையும் கொண்ட அமைப்புக்களில் இடம்பெறக்கூடிய கலந்தாலோசனைகளும் விவாதங்களும் பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு ஏற்புடையதும் நிலைபேறானதுமான தீர்வுகளை பெரும்பாலும் கொண்டுவரும் வாய்ப்பு இருக்கிறது. தீர்மானங்களை எடுக்கும் அமைப்புக்களில் இருந்து புறந்தள்ளி வைக்கப்படுகிறவர்கள் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களில் தங்களுக்கு எந்த உரித்தும் இல்லை என்று பெரும்பாலும் உணருவார்கள்.

தீச்மானங்களை மேற்கொள்ளும் செயன்முறைகளில் ஒரு அங்கமாக இல்லாதவர்கள் தீர்மானங்களில் அதிருப்திகொண்டு உண்மையில் நடந்ததைப் பற்றி திரிபுபடுத்தப்பட்டதும் தவறானதுமான ஒரு விளக்கத்தைக் கொடுப்பதில் அக்கறை காட்டுவதற்கான  வாய்ப்புகள் இருக்கின்றன.

நடைபாதை வியாபாரிகள் தங்களது  பொருட்களை வீதிகளில் பரவிவைத்து விற்பனை செய்வதை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானம் தொடர்பில் ஏற்கெனவே  கிளன் ஸ்ரீலங்கா செயலணி மீது தவறான விமர்சனம் வந்துவிட்டது.

கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்திலும் இவ்வாறு நடந்தது. வீதியோர வியாபாரத்தை உடனடியாக நிறுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு காரணமாக ஆயிரக்கணக்கான நிறிய வியாபாரிகள் பெரும் இடர்பாடுகளுக்கு உள்ளானார்கள். அரசாங்கத்தை அரசியல் ரீதியில் எதிர்ப்பவர்கள் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்ற  கிளீன் ஸ்ரீலங்காவின் ஆணையை திரிபுபடுத்தி பிரசாரங்களைச் செய்கிறார்கள்.

அரசாங்கத்தின் தீர்மானங்களை எடுக்கும்   அமைப்புக்களில் இன, மத சிறுபானமைச் சமூகங்களின் பிரதிநிதித்துவம் இருந்தால் அரசியல் அனுகூல நோக்கங்களுக்காக செய்யப்படுகின்ற தவறான பிரசாங்களை முறியடிக்கக்கூடியதாக இருக்கும் . இது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

சிறுபான்மைச் சமூகங்களை தீர்மானங்களை எடுக்கும் அமைப்புக்களில் உள்ளடக்கத் தவறியதன் மூலம் அரசாங்கம் இந்த தடவை வடக்கு,  கிழக்கு மற்றும் மலையக வாக்காளர்கள் நிராகரித்த இன, மத அடிப்படையிலான எதிர்ப்பு அரசியல் மீண்டும் மேலெழுவதற்கு  கதவை திறந்து விடுகின்றது.

இந்த குறைபாட்டைச் சீர்செய்வது  நேர்மையைப் பற்றியது மாத்திரமல்ல, நீண்டகால அடிப்படையில் தேசிய ஐக்கியத்துக்கும  உறுதிப்பாட்டுக்கும் அத்தியாவசியமானதாகும். இனவெறி அரசியல் மீண்டும் தலையெடுக்காமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு  அரசாங்கம் அதன் ஆட்சிமுறையின் கட்டமைப்புக்களின் சகல மட்டங்களிலும் இன, மத சிறுபானமைச் சமூகங்களை உள்வாங்குவதில் கருத்தூன்றிய அக்கறை செலுத்தவேண்டியது அவசியமானதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மைக்காக மௌனமாக்கப்பட்டார்:பத்திரிகையாளர் சுகிர்தராஜனிற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது.

2025-01-24 20:40:09
news-image

அமைதியான தொற்றுநோயாக  மாணவர்களிடையே காணப்படும் மனநலச்...

2025-01-24 13:53:49
news-image

யாழ்ப்பாண கலாசார மையத்தின் பெயர் திடீரென்று...

2025-01-24 13:31:38
news-image

விவசாய தொழில்முனைவு / வேளாண்மை நோக்கி...

2025-01-23 16:12:24
news-image

புதிய அரசியலமைப்பில் செனட் சபை? தவறுகளிலிருந்து...

2025-01-23 16:49:05
news-image

இலங்கையில் சமூக பணி

2025-01-23 11:56:18
news-image

'எனது பிள்ளைகள் இன்னமும் இடிபாடுகளிற்குள்ளேயே உள்ளனர்...

2025-01-23 10:45:23
news-image

சர்வதேச உதவிகளை அவற்றின் தகுதியின் அடிப்படையில்...

2025-01-22 11:00:46
news-image

கெரவலப்பிட்டிய, புளுமென்டல் பகுதிகளில் புதிய கொள்கலன்...

2025-01-21 16:42:53
news-image

நுவரெலியாவையும் யாழ்ப்பாணத்தையும் பஸ் மார்க்கத்தால் இணைக்கும்...

2025-01-21 19:49:27
news-image

கிட்டு மீதான கொலை முயற்சி

2025-01-21 14:07:54
news-image

காசா பள்ளத்தாக்கு போர்நிறுத்தம் நின்றுபிடிக்குமா?

2025-01-21 14:08:15