இலங்கையை 2 ஆவது போட்டியிலும் வெற்றிகொண்ட நியூஸிலாந்து ஒருநாள் தொடரை தனதாக்கியது

08 Jan, 2025 | 03:02 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கு எதிராக ஹெமில்டன் செடொன் பார்க் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (08) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 113 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை நியூஸிலாந்து 2 - 0 என தனதாக்கிக்கொண்டது.

மழை காரணமாக 2 மணி நேர தாமதத்தின் பின்னர் ஆரம்பமான இப் போட்டி அணிக்கு 37 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 37 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 255 ஓட்டங்களைக் குவித்தது.

ஒரு கட்டத்தில் நியூஸிலாந்து 300 ஓட்டங்களை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

போட்டியின் 31ஆவது ஓவரில் நியூஸிலாந்து 4 விக்கெட்களை இழந்து 217 ஓட்டங்ளைப் பெற்றிருந்தது.

ஆனால், மஹீஷ் தீக்ஷனவின் ஹெட் - ட்ரிக்குடன் 5 விக்கெட்கள் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில்  சரிந்ததால் நியூஸிலாந்தினால் 255 ஓட்டங்களையே பெற முடிந்தது.

ரச்சின் ரவிந்த்ரா, மார்க் செப்மன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 112 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தனர்.

ரச்சின் ரவிந்த்ரா 63 பந்துகளில் 79 ஓட்டங்களையும் மார்க் செப்மன் 52 பந்துகளில் 62 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களை விட டெரில் மிச்செல் 38 ஓட்டங்களையும் க்ளென் பிலிப்ஸ் 22 ஓட்டங்களையும் மிச்செல் சென்ட்னர் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஒரு நாள் அணிக்கு மீளழைக்கப்பட்ட மஹீஷ் தீக்ஷன ஆரம்பத்தில் மோசமாக பந்துவீசிய போதிலும் தனது கடைசி 2 ஓவர்களில் ஹெட் - ரிக்கைப் பூர்த்தி செய்து 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

போட்டியின் 35ஆவது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் நியூஸிலாந்து அணித் தலைவர் மிச்செல் சென்ட்னர், நேதன் ஸ்மித் ஆகியோரை ஆட்டம் இழக்கச் செய்த மஹீஷ் தீக்ஷன 37ஆவது ஓவரின் முதல் பந்தில் மெட் ஹென்றியை ஆட்டம் இழக்கச் செய்து ஹெட் - ட்ரிக்கை பூர்த்திசெய்தார்.

வனிந்து ஹசரங்க 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

மிகவும் கடினமான 256 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை, 30.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 142 ஓட்டங்களைப் பெற்று இரண்டாவது தடவையாக படுதோல்வி அடைந்தது.

நியூஸிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக இலங்கையின் முன்வரிசை வீரர்கள் மோசமாகத் துடுப்பெடுத்தாடி விக்கெட்களைத் தாரைவார்த்தனர்.

முதல் இன்னிங்ஸில் அரைச் சதம் குவித்த அவிஷ்க பெர்னாண்டோ இந்தப் போட்டியில் 10 ஓட்டங்களையே பெற்றார்.

பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், அணித் தலைவர் சரித் அசலன்க ஆகியோர் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர்.

கமிந்து மெண்டிஸ் தனி ஒருவராகப் போராடி 64 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரை விட ஜனித் லியனகே 22 ஓட்டங்களையும் சமிது விக்ரமசிங்க 17 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் வில் ஓ'றூக் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜேக்கப் டஃபி 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ரச்சின் ரவிந்த்ரா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருக்கோ T20 லீக் 2025 -...

2025-01-18 18:45:39
news-image

பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா வெற்றி

2025-01-18 17:16:04
news-image

ஆரம்ப நாளன்று ஆஸி. வெற்றி;  மூன்று ...

2025-01-18 15:21:59
news-image

ஈவா வலைபந்தாட்டத்தில் விமானப்படைக்கு 2 சம்பியன்...

2025-01-17 21:24:06
news-image

ITF ஆசியா அபிவிருத்தி சம்பியன்ஷிப்: சிறுமிகள்...

2025-01-17 20:50:01
news-image

இளம் பெட்மின்டன் வீரர்களுக்கு பண்டாரவளை சென்...

2025-01-17 17:29:38
news-image

எம்சிஏ டி பிரிவு 40 ஓவர்...

2025-01-16 20:03:33
news-image

ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20...

2025-01-16 18:13:11
news-image

மகளிர் சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்: ப்ரத்திகா,...

2025-01-15 18:24:23
news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40
news-image

டிசம்பர் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர்...

2025-01-14 18:34:07
news-image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா...

2025-01-14 17:02:04