அளவுக்கதிகமான அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள் உட்பட 34 பேர் பலியாகினர்.

லிபியாவுக்கு 20 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த இந்தப் படகில் சுமார் ஐந்நூறு பேர் இருந்ததாகவும், அலை ஒன்று மோதியதில் படகில் பயணித்துக்கொண்டிருந்த சுமார் 200 பேர் கடலில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் இத்தாலி கரையோரப் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களுக்கு உயிர்காப்பு அங்கிகளை வழங்கியதுடன் அவர்களை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

எவ்வாறெனினும், 34 பேரின் இறந்த உடல்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர்களுள் பத்துப் பேர் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகில் இருந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து தகவல் எதுவும் குறிப்பிடப்படவில்லை.