அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லை சந்தித்தார்.

அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லின் அழைப்பையேற்று மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியா பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கென்பராவிலுள்ள பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்  இன்று காலை வரவேற்றார்.

அதன்பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்திரேலியப் பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லுக்குமிடையில் கென்பராவிலுள்ள பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்றது.

இப் பேச்சுவார்த்தையில் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் இருதரப்பு கூட்டுறவை மேலும் விரிவுபடுத்துவதற்கான கருத்துக்கள் பரஸ்பரம் பரிமாறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இரண்டு நாடுகளுக்குமிடையே வர்த்தகம், விவசாயம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளை மேம்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.