இருந்தாலும் அவர்கள் முயன்றார்கள்

06 Jan, 2025 | 10:42 AM
image

சிவகஜன்

சிதறிப் போயுள்ள சிவில் சமூகம் ஏனைய தமிழ்த் தரப்புக்களை எப்படிக் கூட்டிக்கட்டும்? நடந்து முடிந்த சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழ் அரசியற் கட்சிகளை மாத்திரம் பார்த்துப் பரிகாசம் செய்வதில் பயனில்லை. தமிழ் சிவில் சமூகத்திற்கும் அதில் பெரும் பங்கு உண்டு.

தமிழ் அரசியல் கட்சிளைக் கை காட்டி குற்றஞ்சாட்டுவதற்கு முன் தமிழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புக்களின் கருத்தியல் மற்றும் கட்டமைப்புப் பலத்தை கேள்விக்குள்ளாக்கிய ஆண்டாக கடந்து போயுள்ளது 2024. சிவில் சமூகத்தை கூட்டிக்கட்டுவதிலும் அவர்களை அமைப்பாக்குவதிலும் செயல் முனைவோரிடையேயுள்ள வெற்றிடத்தால் முன்தள்ளப்பட்டவர்கள் தான் பத்தியாளர்கள்.

எமது சமூகத்தின் பொதுப் புத்தியில் உறைந்த பிரம்மை — பத்தியாளர்களுக்கு புத்திஜீவிகள் எனும் தோற்றப் பொலிவை அளித்தது. செயல் வாதம் என்பது அவர்களிடம் கிடையாது. மக்களிடையே புதிய முற்போக்குக் கருத்துக்களை உருவாக்க கருத்தியல் பின்னணி கிடையாது. மக்களிடம் கருத்துக்களைக் கொண்டு சேர்க்க செயற்பாட்டுக் கட்டமைப்புக் கிடையாது. அவற்றை உள்வாங்குவதற்கான சித்தமும் கிடையாது! யாரேனும் மேடையமைத்துக் கொடுத்தால் பேசுவார்கள் இல்லையேல் எழுதுவார்கள். அவை தான் அவர்களால் அதிகபட்சம் இயலுமானதொன்று!

சமூகப்பரப்பில் ஆங்காங்கே பேசப்படுபவற்றை எழுதுங்கள் என்று யாரும் கேட்பவற்றை ரசனை கொண்ட வார்த்தைகளால் கோர்த்து படிக்க கேட்க நமக்குத் தருவார்கள். அதன் சாரத்தில்ப் போய்த் தேடினால் அதனை வழிநடத்துவது தத்துவமாக இருக்காது வெறும் ஊறிப் போன சொந்தக் கருத்துக்களின் விமர்சனங்களாகவே இருக்கும்.

தமது சக்திக்கு அப்பால் தமிழ்ப் பொது வேட்பாளருக்காக பத்தியாளர்கள் முன்னின்றனர். வேட்பாளரை நிறுத்துவதிலும் அவர்கள் வெற்றியும் கண்டனர். ஆனால் அவர்களால் தமிழ் மக்களை ஒன்று திரட்டுவதில்த் தான் இயலாமற் போனது. அவர்களிடம் இரண்டு விடயங்களில் இயலாமை காணப்பட்டது ஒன்று கருத்தியல் மற்றொன்று செயற்பாட்டுக் கட்டமைப்பும் சமூகப் பயிற்சியும். சிவில் சமூக அமைப்புக்களையே கூட்டிக் கட்ட முடியாதவர்கள் தமிழ் மக்களை திரட்ட முயன்றார்கள்! இருந்தாலும் அவர்கள் முயன்றார்கள் !!!

தேர்தலை இலக்காகக் கொண்டு “தமிழ் மக்கள் பொதுச் சபை” எனும் பெயரில் சிவில் அமைப்புக்களை ஒன்றாக்கினார்கள். அதில் யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் மாணவர் அமைப்புக்களும் இடம்பெற்றிருந்தன. அவை தமிழ்ப் பொது வேட்பாளர் எண்ணக்கருவினை முழுமையாக ஆதரித்தன. இருப்பினும் கட்சிகளை உள்ளடக்கிய கட்டமைப்பு நிறுத்திய பொது வேட்பாளரை முழுமையாக ஆதரிப்பதில் அதிகம் சிந்தித்தன.

பல்கலைக்கழகங்களின் மாணவர் அமைப்புக்கள் நிறுத்தப்பட்ட பொது வேட்பாளரிற்கு இறுதி நேரத்தில் தார்மீக ஆதரவினை மட்டுமே அளித்தனர். எதற்கும் தயங்கியிராத பல்கலைக்கழக சமூகத்தினர் பொது வேட்பாளர் விடயத்தில் முன்னணியில் நிற்காததற்கு காரணங்கள் இல்லாமலில்லை.

முதன்மையானது தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்திய உடன்நின்ற தரப்புக்களின் கடந்த காலங்களும் நிகழ்காலங்களுமே! அவர்கள் கடந்த காலங்களில்வெளிநாட்டு அரசின் வழிநடத்தல்களுடன் அல்லது ஆசீர்வாதங்களுடன் தமிழ்ச் சமூகப்பரப்பில் வலம் வந்தவர்கள் வருபவர்கள். அவர்களின் பின்னால் பல்தேசிய வணிக நிறுவனம் ஒன்று தனது அரசியல் நிகழ்ச்சி நிரல்களுடன் நிதியளித்துக் கொண்டிருந்தது. அது பல்கலை சமூகத்தை சிந்திக்க வைத்தது.

பத்தியாளர் ஒருவர் அடிக்கடி நகைச்சுவையாகச் சொல்வார்“ஆமையொன்று மதில் மேல் அமர்ந்திருக்கிறது என்றால் அதனை யாரோ மேலே தூக்கி வைத்திருக்கிறார்கள்”. அவ்வாறு தான் கருத்தியலில் தளம்பும் செயற்பாட்டுக் கட்டமைப்பற்ற பத்தியாளர்கள் தமிழ் அரசியலின் முன்னணியில் வந்திருக்கிறார்கள் என்றால் மேற்சொன்ன பின்னணிகள் இல்லாமலில்லை. அவர்கள் கருத்துருவாக்கம் எனும் பேரில் கருத்துத் திணிப்புக்களை பொதுப் புத்தியில் உள்நுழைக்கின்றார்கள். ஆழநோக்கினால் கருத்துக்களில் எடுகோள்களோ தரவுகளோ கருத்தியற் தெளிவோ இலக்கு நோக்கிய சிந்தனைகளோ இருப்பதில்லை.

தேர்தல் அரசியலில் தங்களின் செயற்பாட்டு வெளி தொடர்பாக புரிதல் மாணவர் அமைப்புக்களிற்கு இருக்கிறது. தமிழ்த் தேசிய அரசியலை தேர்தல் அரசியலிற்குள் சுருக்கி விடக் கூடாது என்பதில் அவர்களிற்கு போதிய கருத்தியல் புரிதல் இருந்திருக்கின்றது. அதனால் தான் சிவில் சமூக அமைப்புக்களை சனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலிலும் களமிறக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை தடுத்து நிறுத்துவதில் முன்னின்றிருக்கிறார்கள். சனாதிபதித் தேர்தலால் ஒன்று திரட்டிய தமிழ் மக்களை பாராளுமன்றத் தேர்தல் சிதறடிக்கும் என்று சிந்தித்திருக்கிறார்கள்.

தமிழ் அரசியலில் பொது வேட்பாளரையும் தேர்தல் புறக்கணிப்பையும் அனைவரும் எதிர் எதிர்த் துருவத்தில் நிறுத்திய போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் அமைப்புத் தான் இரண்டையும் தமிழ்த் தேசிய நோக்குநிலையில் அணுகியது. (29.05.2024 அன்றைய ஊடக அறிக்கை). பொது வேட்பாளர் தெரிவு எவ்வாறாக இடம்பெற வேண்டும் என்பதற்கு நிபந்தனைகளை பொதுப் பரப்பில் வைத்ததோடு அவற்றிற்கேற்ப வேட்பாளர் தெரிவு நடைபெற்றால் ஆதரவளிப்பதற்கும் தங்கள் சித்தத்தை அவர்கள் முன்வைத்திருந்தனர். வேட்பாளர் தெரிவோ அவ்வாறன்றி அரசியற்சார்புடன் நடந்தேறியது.

கடந்த காலங்கள் போலன்றி நடப்பிலுள்ள மாணவர் அமைப்பு சிறிலங்காவின் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தமிழ் மக்களிற்கான தீர்வோ ஆரம்ப புள்ளியோ கிடையாது என்பதில் இறுக்கமானதும் உறுதியானதுமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. அவர்கள் ஒரு கருத்தியலின் வழி செயற்பாட்டுக் கட்டமைப்பில் முன்நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பொது வேட்பாளரிற்காக முன்னின்ற பத்தியாளர்கள் உள்ளிட்ட சில அமைப்புக்கள் மற்றும் தமிழ் அரசியற்கட்சிகள் அனைத்தும் 13ஆவது திருத்தத்தினுள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு முயற்சிகளை ஏற்றுக் கொண்டு பயனிப்பதில் சித்தமாயிருந்தனர். தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுத்திருந்தன. மக்களால் நிராகரிக்கப்பட்ட 13ஆம் திருத்தத்தை ஏற்றுக் கொண்ட மற்றும் கடந்த காலங்களில் அரசுடன் இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட தரப்புக்களிற்கு வெள்ளையடித்து விடக்கூடாதென்ற எச்சரிக்கை தான் தமிழ்த் தேசிய நிலைப்பாடுடைய மாணவர் அமைப்பிற்கு மட்டுப்பாடுகளை விதித்தது.

சிவில் அமைப்புக்களின் கூட்டிணைவான “தமிழ் மக்கள் பொதுச் சபை” தேர்தல் முடிவடைந்ததும் உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படக் கூடிய அச்சம் மாணவர் அமைப்புக்களிடம் காணப்பட்டது. தமிழ் மக்கள் பேரவையின் வரிசையில் தமிழ் மக்கள் பொதுச் சபையும் இடம்பெற்றால் மக்களை நட்டாற்றில் விட்டதற்குச் சமமாகும். மக்களுக்கு வரும் காலங்களில் தமிழ்த் தேசிய அரசியலின் மீது நம்பிக்கையற்ற சூழல் உருவாகும். அவ்வாறு மக்கள் அமைப்புக்களினுடைய தோல்வியும் யாரை நம்புவதென்ற விரக்தியுமே தேசிய மக்கள் சக்தி அலையில் வடக்கு — கிழக்கு விழுவதற்குக் காரணம்.

இதுபோன்ற அச்ச நிலைகளால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு இரண்டு நிபந்தனைகளிற்கு உடன்பட்டால் பொது வேட்பாளரிற்கு ஆதரவளிக்க முன்வந்தது. ஒன்று 13ஆவது திருத்தம் தொடர்பில் துலக்கமான நிலைப்பாட்டினை தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்க வேண்டும். இரண்டாவது தமிழ் மக்கள் பொதுச் சபையினை கட்டமைப்பிற்குட்படுத்தி விரிவுபடுத்த வேண்டும். பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள் அச்சப்பட்டது போலவே தேர்தல்கள் முடிவடைந்ததும் அந்த மக்கள் அமைப்புக்களை கிடப்பில் போட்டு விட்டனர்.

தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களை வெளிப்படுத்தவிருந்த வடிவங்களில் ஒன்று தமிழ்ப் பொது வேட்பாளர் எண்ணக்கரு. பொது வேட்பாளர் எண்ணக்கரு செயற்பாட்டுக் கட்டமைப்பற்ற ஒரு சிலரின் கைகளினுள் சிக்கி ஒட்டு மொத்த தமிழ்த் தேசிய அரசியலையும் விழுங்கி ஏப்பமிட்டுள்ளது. பத்தி எழுத்துக்களில் ஒன்று பிழைத்தால் தூக்கி வீசி விட்டு இன்னொன்று எழுதிக் கொள்ள முயல்வார்கள். அதுபோல தமிழ் அரசியற் களத்தினை அரசியல் பிழைத்தவர்கள் சமூகப் பொறுப்பற்றுக் கையாண்டிருக்கிறார்கள்.

அது தான் 2025 ஆம் ஆண்டில் தமிழ் மக்களிற்கான பலன் !

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டத்தை கடுமையாக அமுலாக்குவதன் மூலமாக மீனவர்...

2025-01-17 13:21:54
news-image

அருட்தந்தை பஸ்ரியன் கொல்லப்பட்டு 40 வருடங்கள்...

2025-01-16 12:16:57
news-image

ஆளுகை, உலகளாவிய ஆரோக்கியத்தில் மூட நம்பிக்கை,...

2025-01-15 18:48:30
news-image

ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களிற்கு ஆதரவளித்து ஒற்றுமையை வெளிப்படுத்திய...

2025-01-15 16:35:02
news-image

அடர்ந்த காட்டுக்குள் இப்படி ஒரு அவலமா? ...

2025-01-17 10:02:48
news-image

மயிலத்தமடு மாதவணை பண்ணையாளர்கள் போராட்டமும் பட்டிப்...

2025-01-15 15:58:47
news-image

'கேணல்' கிட்டுவின் செயலினால் விஜய குமாரதுங்க...

2025-01-15 12:43:42
news-image

புதிய அரசாங்கத்தின் நெறிமுறைகளுடன் அரச பொறிமுறைகள்...

2025-01-15 10:08:35
news-image

தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கிய அகதிகள் -...

2025-01-12 17:38:39
news-image

உட்கட்சிப் பிரச்சினைக்கும் ஒருங்கிணைந்த அரசியலுக்கும் சிவில்...

2025-01-12 16:35:46
news-image

தாய்வானை சீன மாகாணம் என்பதால் அமெரிக்கா...

2025-01-12 16:26:02
news-image

ஐ.தே.க.வுடன் இணைவதற்கு மனம் இன்றி சம்மதித்த...

2025-01-12 16:19:41